மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு ...
BB Tamil Day 24: அபாண்டமாக லாஜிக் பேசிய திவாகர்; ஆதரவு தந்த பாரு! - ரிப்பீட் மோடில் சண்டை
பிக் பாஸ் என்கிற பெயரை மாற்றி `சவுண்ட் பாக்ஸ்' என்று வைத்து விடலாம். அந்த அளவிற்கு தினமும் ஒரே சத்தம்.
பீறிட்டு வரும் நடிப்பு அரக்கனின் கலைத்திறமையை மூடி மறைப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் சதி செய்கிறார்கள். ஐ.நா சபையே முன்வந்து தீர்க்க வேண்டிய பிரச்சினை இது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 24
கம்ருதீனுக்கும் பாருவிற்கும் இடையில் என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப் என்று தெரியவில்லை. அவ்வப்போது சோ்ந்து நெருக்கமாக அமர்ந்து புறணி பேசுகிறார்கள். அதில் வில்லங்கமான உரையாடல்களும் இருக்கின்றன. அப்போதெல்லாம் மறுப்பேதும் சொல்லாத பாரு, “அவ என்னை வித்தியாசமா டச் பண்றான்’ என்று திவாகரிடம் புகார் சொல்கிறார்.
இன்று கம்ருதீனும் பாருவும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க “நமக்குள்ள எந்த டிராக்கும் தேவையில்ல” என்று பாரு சொல்ல கம்ருதீன் நகர்ந்து சென்றார்.
நாள் 24
‘டாப்பு டக்கரு’ பாடல் ஒலித்தது, (ஷோ ‘டாப்பு டக்கரா இல்லையே?!) காமிரா முன்பு வந்த திவாகர் “எனக்கே இந்த ஷோ ரொம்ப சுவாரசியமா தெரியுது. தினமும் யார் யார் கூட சண்டை போடுவாங்கன்னு தெரியல’ என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். இவருடைய பங்காளிகளான வினோத்தும் கம்ருதினும் பிரவீனும் பின்னால் நின்று நடனமாடி ஒழுங்கு காட்டிக் கொண்டிருந்தார்கள். “பார்க்கிற எங்களுக்கே மூச்சு வாங்குது. அந்த அளவிற்கு பேசறான்” என்று சலித்துக் கொண்டார் வினோத்.
இவர்கள் டான்ஸ் ஆடியதை கலையரசன் போட்டுக் கொடுத்திருப்பார் போலிருக்கிறது. இதை வைத்து காலையில் பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டார் திவாகர். காது கிழிய வைக்கும் இந்தச் சண்டையை நீண்ட நேரத்திற்கு காட்டி வெறுப்பேற்றினார்கள். (பிக் பாஸ் வீட்டில் எப்போதும் சண்டைதான் நடக்கிறதா, வேறு சுவாரசியமான விஷயங்களே இல்லையா?!)

திவாகரின் கலைத்திறமைக்கு அணை போடும் பிக் பாஸ் வீடு
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல மீண்டும் காமிரா முன்னால் வந்து ‘தமிழக மக்களே…’ என்று நடிப்பு அரக்கன் தன் ஃபொ்மான்ஸை காண்பிக்க முயல, அதையும் மிஞ்சும் வகையில் உரத்த குரலில் பாட்டு பாடினார் வினோத். ‘உனக்கு நடிக்கத் தெரியும். எனக்கு பாடத் தெரியும். போவியா?” என்கிற இடக்கு வேறு.
திவாகருக்குள் இருந்த கலைத்திறமை பீறிட்டு எழ, தன் சட்டையைக் கழற்றி ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ காமெடி சீனை ரீல்ஸ் மாதிரி போட, நமக்கே குமட்டிக் கொண்டு வரும் போது வீட்டில் உள்ளவர்களுக்கு வராதா என்ன?. வீட்டு தல பிரவீன் இந்தப் பஞ்சாயத்தை தீர்க்க முயன்று போராடினார். ஆனால் ஒரு பக்கம் திவாகரின் ஃபொ்பாமன்ஸூம் இன்னொரு பக்கம் வினோத்தின் பாட்டுச் சத்தமும் களை கட்டியது.
“இனிமே நீங்கதான் பார்த்துக்கணும்” என்று வெறுப்புற்று ஒதுங்கிச் சென்ற பிரவீனை “நீ இனி தல கிடையாது. ஒருதலைப்பட்சமா நடந்துக்கற” என்று திவாகர் வாக்குவாதம் செய்ய “நான் ஓட்டு போட்டு தல ஆனவன் கிடையாது. விளையாட்டுல ஜெயிச்சு வந்தவன்” என்று வினோத் சூடாக “நீ ஜெயிச்ச லட்சணம் தெரியாதா? ரம்யா இல்லன்னா நீ தல ஆகியிருக்க முடியாது” என்று மல்லுக்கட்டினார் திவாகர்.
மறுபடியும் சட்டையைக் கழற்றி வசூல் ராஜா படக்காட்சியை திவாகர் செய்ய முயல, “மொதல்ல யூனிபார்மை போடுங்க.” என்று வந்த பிரவீன், காமிராவை கையால் மூடினார். இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அபாண்டமாக லாஜிக் பேசிய திவாகர் - பாருவும் ஆதரவு
இந்தச் சமயத்தில் பஞ்சாயத்தின் உள்ளே புகுந்த கனி, “யாராவது ஜட்டி மட்டும் போட்டு ஆடினா எப்படியிருக்கும்.. அதனாலதான் சொல்றோம். இது நாகரிமா இல்ல. அப்புறம் உங்க இஷ்டம்” என்று சொல்ல “நீங்க கூடத்தான் எஃஜேவை கட்டிப் பிடிக்கறது எனக்கு அநாகரிமாக தெரியுது” என்று அபாண்டமாக சொன்னார் திவாகர். (பின்னே.. பாருவின் நண்பர் எப்படி பேசுவார்?!) இதைக் கேட்டு எஃஜே டென்ஷன் ஆகி வர சண்டை இன்னமும் உக்கிரமாகி களை கட்டியது. பொறுமையின் சிகரமான சபரியே டென்ஷன் ஆனார்.
இவ்வளவு களேபரம் நடக்கும் போது பாரு மட்டும் சும்மா இருப்பாரா? “ஓ.. என்னைப் பத்தி நீங்க தப்புத் தப்பா புறணி பேசியது நாகரிகம்ன்னா. திவாகர் சட்டையில்லாம ரீல்ஸ் போட்டதும் நாகரிகம்தான்” என்று வித்தியாசமான லாஜிக் பேசினார். அக்கா போல் பழகுகிற கனியையும் தன்னையும் திவாகர் தவறாக பேசியதால் “வெளிய போனா கூட பரவாயில்ல. அந்தாளை அடிச்சுடுவேன்” என்று எஃப்ஜே பொங்கிக் கொண்டிருந்தார்.
கிச்சன் ஏரியாவில் ஆவேசமாக பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த பாருவை ஜாடையாக ‘வொர்க்கர்ஸ்’ என்று சொல்லி கனி சீண்டி விட, பால் பாத்திரம் போல உடனடியாக பொங்கினார் பாரு. “என்னை முறைச்சுப் பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது”என்று வெறுப்பேற்றிய கனி “வொர்க்கர்ஸ்ன்னு சொன்னது தப்பான நோக்கத்துல இல்ல. நம்மை பழி சொல்றாங்கள்ல. அதை உணர்த்தறதுக்குத்தான்” என்றும் சொல்ல தன்னை பாதுகாத்துக் கொண்டார். (நாளைக்கு பஞ்சாயத்துல பதில் சொல்லணுமே?!)

லாக்கர் ரூம் டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. ‘தொப்பி.. தொப்பி’ என்று இதற்குப் பெயர். நடுவில் இருக்கும் தொப்பியை யார் முதலில் எடுத்து தலையில் மாட்டி மேடையில் நிற்கிறாரோ, அவரே வெற்றியாளர். இப்படி இரு அணிக்கும் இடையில் நடக்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
முதலில் களம் இறங்கிய வினோத்திற்கும் துஷாருக்கும் இடையிலான போட்டி ஆக்ரோஷமாக இருந்தது. இருவருமே தொப்பியை பற்றிக் கொண்டு மற்றவரை கீழே தள்ளிக் கொண்டு முட்டியதைப் பார்க்கும் போது எங்கே அடிபட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. இப்படியே பிறகு ஆட வந்தவர்களின் ஆட்டமும் அச்சத்தைத்தான் ஏற்படுத்தியது.
ஆனால் பிக் பாஸோ கூலாகி “இப்பத்தாம்பா எனக்கு திருப்தியா இருக்கு. நல்ல ஆட்டம்” என்று பாராட்டினார். இதில் பிக் பாஸ் வீடு வெற்றி பெற்றது. அதிக ரத்தம் சிந்தியதால் மகிழ்ந்த பிக் பாஸ் கூடுதலாக 500 பாயிண்ட்ஸ் தந்ததில் மக்கள் மகிழ்ந்தார்கள். (நேற்று தந்த அதே ஆயிரம் பாயிண்ட்ஸ்தான். அதையே இரண்டாக பிரித்து தரும் டெக்னிக்கை பிக் பாஸ் தந்திரமாக செய்தார்).

இந்த முறை லாக்கர் அறைக்குள் இருந்து பொருட்களை எடுக்க 15 விநாடிகள் தரப்பட்டன. பிக் பாஸ் வீட்டில் இருந்து எல்லோருமே செல்லலாம். “ஆயிரத்திற்கு ஒரு பாயிண்ட் கூடினா கூட அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தார் பிக் பாஸ்.
மக்கள் உள்ளே புகுந்தார்கள். அதற்கு முன்பு கடை திறக்கப்பட்டு எந்தெந்த பொருட்கள் எங்கே இருக்கின்றன என்று பார்த்துக் கொள்ள அவகாசம் தரப்பட்டது. தங்களுக்குள் பேசிக் கொண்டவர்கள், பஸ்ஸர் அடித்ததும் பாய்ந்து சென்று கவனமாக பொருட்களை எடுத்து வந்ததில் 850 பாயிண்ட்ஸ் மதிப்பு கொண்டு வந்து தப்பித்தார்கள். அனைத்துமே பிக் பாஸ் வீட்டு பொருட்கள்.
‘ஆண் பாவம் பொல்லாதது’ என்கிற படத்தின் பிரமோஷன். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் ரியோ, விக்னேஷ் காந்த், மாளவிகா ஆகியோர் உள்ளே வந்து படத்தைப் பற்றி பேசி டிரைய்லர் போட்டு விட்டு கிளம்ப எபிசோட் நிறைவு.

பாரு, திவாகர், கம்ருதீன், வினோத் - இந்த நால்வர் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளையே தினமும் ரிப்பீட் மோடில் பார்ப்பதால் மண்டை காய்கிறது.
பிக் பாஸ் எடிட்டிங் டீம் வேண்டுமென்றே இதைச் செய்கிறார்களா அல்லது பொழுது பூராவும் சண்டை மட்டும்தான் நடக்கிறதா என்று தெரியவில்லை. இப்படியே சென்றால் விஜய்சேதுபதி பரிந்துரை செய்ததைப் போல ரிமோட்டை கையில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.!
















