நாமக்கல்: திடீர் வாந்தி, மயக்கம்; கல்லூரி மாணவர்கள் 128 பேர் மருத்துவமனையில் அனு...
Bigg Boss Tamil 9: `தண்ணீர் இல்லாக் காடு டு பிக்பாஸ் வீடு’ - யார் இந்த திவ்யா கணேஷ்?
இருபது போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல், இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி நிகழவிருக்கிறது.
சீரியல் நடிகர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், சமூக ஊடக பிரபலங்கள் அதிகமாகவும் களமிறங்கிய நிலையில் இந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி இருக்காது என்ற ஒரு பேச்சு ஆரம்பத்தில் அடிபட்டது.
ஆனால் தற்போது உள்ளே செல்லவிருக்கும் நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்களின் புரோமோ வந்திருக்கிறது. இன்னும் ஓரிரு போட்டியாளர்கள் கூட செல்ல வாய்ப்பிருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. வைல்டு கார்டு போட்டியாளர்கள் இந்த வார இறுதியில் நிகழ்ச்சிக்குள் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு பேரில் சான்ட்ரா - பிரஜின் தம்பதி, மற்றும் திவ்யா கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிக்குச் செல்வது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
திவ்யா கணேஷ்
திவ்யா கணேஷ் 'பாக்யலட்சுமி' தொடரில் ஜெனியாக வந்தவர். தற்போது சன் டிவியில் அன்னம் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காவே அதிலிருந்து வெளியேறியதாகச் சொல்கிறார்கள்.
'இப்ப உள்ள இருக்கிற போட்டியாளர்களுடைய பேச்செல்லாம் ஃபயராத்தான் இருக்கு, ஆனா செயல்பாடு ஜீரோவா இருக்கு. எல்லாரும் பல முகங்களைக் காட்டற மாதிரி தெரியுது. ஆனா எனக்கு ஒரே முகம்தான். அதுவும் போக நான் ரொம்பவே ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. பிக்பாஸ் வீட்டுக்குள்ள போய் என்னுடைய விளையாட்டைத் தொடங்கப் போறேன்' எனப் பேசியிருக்கும் திவ்யா ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு சவாலாகவே இருப்பார் என்று சொல்லலாம்.
தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கும் கமருதீனும் இவரும் ஒரே சீரியலில் நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சின்னத்திரை ஏரியாவில் கேரளா, பெங்களூரு என பக்கத்து மாநிலங்களில் இருந்து ஹீரோயின்களைக் கூட்டி வந்து கொண்டிருக்கும் சூழலில் தெற்கே ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து வந்தவர் திவ்யா.
சட்டம் படிப்பதற்காக சென்னைக்கு வந்தவருக்கு ஷார்ட் ஃப்லிம் வாய்ப்பு வர, அங்கிருந்தே சீரியல் பக்கமும் வந்து விட்டார். இது தொடர்பாக முன்பொரு முறை நாம் பேசிய போது,
'தண்ணீர் இல்லாக் காடுனு எங்க ஊரைச் சொல்வாங்க. இப்பவும் என்னுடைய பெற்றோர் ராமநாதபுரத்துலதான் இருக்காங்க. அந்த ஊர்ல பிறந்ததை நான் பெருமையாகவே நினைக்கிறேன். ராஜா சார் சொன்னதுதான், சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா' என்றார்.
சன், விஜய், ஜீ என எல்லா முன்னணி சேனலிலும் நடித்து விட்டார். சினிமா முயற்சியை இப்போதும் கைவிடவில்லையாம்.
'நான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு எனச் சொல்ல்யிருக்கிறாரே, அதுக்கூட 'போல்டு' எங்கிற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். நடிகர் ஒருவருடன் திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில், அதில் பிரச்னை உண்டாக, திருமணத்தை நிறுத்தி விட்டவர்.

நடித்த சில சீரியல்களில் இருந்து அதிரடியாக வெளியேறியவர் என்கிற பேச்சும் இவர் குறித்து உண்டு. 'அவருக்கு பிரச்னைன்னா துணிஞ்சு எந்த முடிவையும் எடுப்பார். அதனால எந்த பாதிப்பு வந்தாலும் அதுக்கு அலட்டிக்க மாட்டார்' என்கிறார்கள் இவரது நட்பு வட்டத்தினர்.
இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. அதாவது பக்கத்திலிருப்பவர்கள் அசந்து தூங்கினால் ரகசியமாக அவர்களை வீடியோ எடுத்து பிறகொரு நாளில் அதை அவர்களுக்கே அனுப்பி ஷாக் கொடுப்பாராம்.
பிக்பாஸ் வீடு இவரை எப்படியெல்லாம் எக்ஸ்போஸ் செய்யக் காத்திருக்கிறதோ. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!


















