திருப்பத்தூர்: `உள்ள நுழைய கூட முடியாது’ - வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசமான நிலை...
BBTAMIL 8 DAY 38: டீச்சர்களுக்கு மாணவர்களின் மார்க்; சீக்ரெட் டாஸ்க்; அழுத மஞ்சுரியும், ஜாக்குலினும்
ரகசியத்தைப் பாதுகாத்து பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் ஏற்படுத்துவது திரைக்கதையின் வழக்கமான உத்தி. இன்னொரு வகையும் இருக்கிறது. அந்த ரகசியம் என்னவென்று பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது.
நாற்காலியின் அடியில் வெடிகுண்டு இருப்பது ஆடியன்ஸிற்குத் தெரியும். ஆனால் அதன் மேல் உட்கார்ந்திருக்கும் கேரக்டர்களுக்கு தெரியாது. ‘அடப்பாவமே… எப்ப வெடிச்சு செதறப் போறானோ?’ என்று பார்வையாளர்கள் நகம் கடித்து காத்துக் கொண்டிருப்பார்கள். இந்த ஜானரில் ஹிட்ச்காக் நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த எபிசோடில் நடந்த ‘சீக்ரெட் டாஸ்க்’ இந்தப் பாணியில்தான் இருந்தது. நடக்கும் கூத்து என்னவென்று நமக்குத் தெரியும். மேனேஜ்மென்ட் நபர்களுக்குத் தெரியாது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 38
அன்ஷிதா விஷாலிடம் லவ் லெட்டர் தந்து விட்டு வெட்கத்துடன் ஓட, “மச்சான்.. என் ஆளு லெட்டர் கொடுத்துட்டு ஓடிட்டா” என்று விஷால் முத்துவிடம் பெருமையுடன் சொல்ல “யார் கூட?” என்று முத்து தந்த வில்லங்கமான கவுன்ட்டர் நன்று. இதே ஜோக்கை பிறகு ‘கலை நிகழ்ச்சியிலும்’ முத்து பயன்படுத்தினார். ‘பத்து மணிக்கு தோட்டத்திற்கு வரவும். தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது.. கதையா ஆயிடப் போவுது” என்று தன் காமெடியை டெவலப் செய்து கொண்டே போனார் முத்து. அதிகாலையில் எழுந்த ஆனந்தி, ஸ்கூல் பெல் உள்ளிட்ட மற்றவர்களின் உடமைகளை திருடிச் சென்று ஒளித்து வைத்தார். கேரக்டர் படி இந்த திருட்டுத்தனம் ஓகே? ஆனால் பருப்பு வைக்கும் கிச்சன் ஷெல்ஃபில் செருப்பு வைக்கலாமோ?
ஏழு மணிக்கு அலார்ம் சவுண்ட். ஸ்கூல் நிர்வாகம் எழுவதற்கான நேரம் போல. பிரின்சிபல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருக்க, கடமை கந்தசாமியான வாட்ச்மேன் சிவக்குமார், பதறியடித்துக் கொண்டு எழுந்தார். பிறகு வீட்டின் வாசலில் நின்று கையில் சுத்தியலுடன் “அய்யா.. இந்தப் பள்ளியின் பெருமையை மீண்டும் தூக்கி நிறுத்துவேன். உங்களுக்கு கொடுத்த சத்தியத்தைக் காப்பாத்துவேன்” என்று சபதம் ஏற்றுக் கொண்டிருந்தார். பிறகு சுத்தியலை இப்படியும் அப்படியுமாக சுழற்றி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னதான் சிவாஜி குடும்பத்தின் வாரிசு என்றாலும் இப்படியா ஓவர் ஆக்ட் செய்வது?!
டீச்சர்களுக்கு மார்க் போட்ட மாணவர்கள்
‘கல கல கானா சாங்கு’ - என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. நடனமாடும் நேரத்திலும் கூட கையில் நோட்டுப் புத்தகம் வைத்து ‘படிப்பாளி’ காரக்டராகவே வாழும் சாச்சனாவை பாராட்ட வேண்டும். ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஸ்கூல் பெல்லை ஒருவழியாக ஜெப்ரி கண்டுபிடித்தார்.
மார்னிங் ஆக்ட்டிவிட்டி. ஆசிரியர்களைப் பற்றி மாணவர்கள் மதிப்பிட வேண்டுமாம். இதெல்லாம் எந்த ஸ்கூலில் நடக்குமோ? “பிரின்சிபல் மேடம் வார்த்தைகளை விடறாங்க” என்று சத்யா ஆரம்பிக்க “இந்த ஸ்கூல்ல சமத்துவம் இல்ல. பாரபட்சம் காட்றாங்க” என்று ரியாவும் புகார் வைத்தார். “பணம் இருக்கற பசங்களுக்குத்தான் இங்க மதிப்பு” என்ற ராணவ், ‘மாரல் டீச்சர் க்யூட்டா இருக்காங்க. VP சார் நல்ல மனுஷன்” என்று பாராட்டினார்.
தீபக்கிற்கும் ஜாக்கிற்கும் இடையே ஒரு மறைமுகச் சண்டை ஓடிக் கொண்டேயிருக்கிறது. ‘கிச்சன் சிங்க்கில் வாய் கொப்பளித்தார்’ என்று தீபக் சொன்னது தொடர்பான சண்டை. “மாரல் கிளாஸ் டீச்சர் எங்க கிட்ட இருந்து கூட பாடம் கத்துக்கலாம்” என்று இக்கு வைத்து தீபக் பேச, முகம் கோணினார் ஜாக்.
‘வாட்ச்மேன் அங்கிளை’ மறக்காமல் பாராட்டிய முத்து, “VP மாதிரி ஒரு ஆளை பார்க்கவே முடியாது. தன்னோட வாழ்க்கையை தியாகம் பண்ணிட்டு நமக்காக உழைக்கிறார். VP சார் இந்த ஸ்கூலை விட்டு போகும் போது BP வந்துதான் போவார் போல. பசங்க அந்த அளவிற்கு அவரை டென்ஷன் பண்றாங்க. பிடி சாரை ஸ்டுடண்ட்ன்னு நெனச்சிக்கிட்டு வரிசைல நில்லுன்னு சொல்ற அளவுக்கு VP கன்ப்யூஸ் ஆயிட்டாரு” என்று முத்து சொல்லிக் கொண்டே போக, பக்கத்தில் இறுக்கமாக அமர்ந்திருந்த பிரின்சிபல் மேடம் ‘களுக்’கென்று சிரித்தார்.
ரகளையாக கமெண்ட் செய்து அசத்திய ரஞ்சித்
இருப்பதிலேயே ரகளையான கமெண்ட் ரஞ்சித்துடையதுதான். அமைதியாக இருந்து கொண்டு அட்டகாசமான ஒன்லைனர்களை வீசுகிறார். “இந்த ஸ்கூலுக்கு ஒரு VP தேவையான்னு எனக்குத் தோணுச்சு” என்று அவர் சொன்னவுடனே “அப்படிப் போடு.. சபாஷு” என்று உற்சாகமாக கைத்தட்டினார் பிரின்சிபல். அடுத்த நொடியே “அதே மாதிரி பிரின்சிபல் மேடமும் தேவையான்னு தோணுது” என்று ரஞ்சித் சொல்ல, பிரின்சிபல் மேடம் பல்பு வாங்கியதைப் பார்த்து மாணவர்கள் கரகோஷம் எழுப்பி சிரித்தார்கள். “எப்பத்தான் பாடம் எடுப்பீங்க.. நானே இன்னிக்கு பாடம் எடுக்கலாம்ன்னு இருக்கறங்க” என்று அமைதிப்படை அமாவாசை மாதிரி பணிவாக சொல்வதின் மூலம் ‘கோயம்புத்தூர் குசும்பை’ வெளிப்படுத்தினார் ரஞ்சித்.
இந்த டாஸ்க் முடியும் போது உள்ளே நுழைந்த பிக் பாஸ் “எல்லாம் ஓகே.. பசங்க மீசை தாடியோட இருக்கறது சரியா..?” என்று லாஜிக்காக கேள்வி எழுப்ப, ஆண்கள் அனைவரும் ‘தில்லுமுல்லு’ ரஜினிகாந்த் பாணிக்கு மாற வேண்டியிருந்தது. மீசை, தாடியை தியாகம் செய்த பாய்ஸ் டீமை அன்ஷிதாவிற்கு அறிமுகப்படுத்தினார் முத்து ‘அய்யோ.. பூச்சாண்டி..’ என்கிற மாதிரி ரயானைப் பார்த்து சிணுங்கினார் அன்ஷிதா.
சாச்சனா திருக்குறள் சொன்னதோடு பிரேயர் முடிந்து வகுப்பு ஆரம்பித்தது. மாரல் கிளாஸ் ஆரம்பித்தார் ஜாக்குலின். ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஏற்ற கதையை அவர் ஹோம்வொர்க் செய்து கொண்டு வந்த விதம் சிறப்பு. ‘குரங்கு கதையை’ சொல்லி “எல்லாம் தெரிஞ்சவன்லாம் அறிவாளி இல்ல” என்று தீபக்கிற்கு மறைமுக குட்டு வைத்தார். ‘பாயிண்ட் வரும்ன்னு பேசறதுக்காக வெயிட் பண்ணக்கூடாது. நாமதான் பாயிண்ட்டை தேடிப் போகணும்” என்கிற அட்வைஸ் ரஞ்சித்திற்கு.
சத்யாவின் லீடர்ஷிப் பற்றி ஜாக் சொன்ன கமெண்டிற்கு ‘நாமினேஷன்லயும் இதையேதான் சொல்றீங்க.. அதையே பாடமாவும் எடுப்பீங்களா?” என்று கேரக்டரில் இருந்து வெளியே வந்து காண்டானார் சத்யா. “இதுதான் கிளாஸ். இஷ்டமில்லைன்னா வெளியே போங்க” என்று ஜாக் சொல்ல, ரெபல் கேரக்டருக்கு மாறி வெளியே சென்ற சத்யாவை சமாதானப்படுத்தி மீண்டும் கிளாஸிற்குள் தள்ளினார் அருண். இப்படி பலரைச் சமாதானப்படுத்துவதே அருணின் வேலையாக இருந்தது. கேப்டன் + VP என்கிற இரட்டைச் சுமை.
மாரல் கிளாஸில் அசத்திய ஜாக்குலின்
“யோசிச்சிட்டு பேசறது நல்லதுதான். ஆனா யோசிசிக்கிட்டே இருக்கக்கூடாது. பேசணும்” என்று பவித்ராவிற்கு அட்வைஸை தொடர்ந்தார் ஜாக். “மத்தவங்க எமோஷனையும் பார்த்து காமெடி பண்ணுங்க.. அவங்களும் சேர்ந்து சிரிக்கறதுதான் நல்ல காமெடி” என்கிற புத்திமதி விஷாலுக்கு. (லைட்டா கமல் வாசனை வருதுல்ல!).
‘பிரின்சிபல் மேடத்தையும் VP சாரையும்’ சோ்த்து வைப்பதற்காக, VP சார் எழுதியதைப் போல ஒரு கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தார் தர்ஷிகா. ‘உங்க மேல இருக்கற லவ் இன்னமும் குறையல. If you are not my wife, give me a knife’ என்கிற டூப்ளிகேட் கடிதத்தை, காமிரா முன்பாக ஓவர்ஆக்ட் செய்து சொல்லிய ரியா, பிறகு பிரின்சிபல் அருகே தூக்கி வீசி சென்றார். ஒழுங்குப் பிள்ளையான சாச்சனா, அதைக் கொண்டு போய் மேடத்திடம் கொடுக்க “யார் இவ்ள கிரிஞ்சா எழுதியிருக்காங்க?” என்று லெட்டரை கிழித்து எறிந்தார் வர்ஷினி. (இந்த டாஸ்க்ல என்ன செஞ்சு கிழிச்சீங்க… என்று யாரும் வர்ஷினியை கேட்க முடியாது!).
தீபக்கிற்கு ‘சீக்ரெட் டாஸ்க்’ தருவதற்கு முன்பே சத்யாவிற்கும் பவித்ராவிற்கும் பிக் பாஸ் ரகசிய டாஸ்க் கொடுத்து விட்டார் போல. காதலில் ஊடல் போல இருவரும் உக்கிரமாக மோதிக் கொண்டார்கள். ‘போடா.. போடி’ என்று ஏக வசனத்தில் வார்த்தைகள் இறைபட்டன. உற்சாகம் தாங்காமல் ராணவ் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இந்தக் காதல் பிரேக் அப் ஆனால் ராணவ்விற்கு சான்ஸ் கிடைக்கும்.
தீபக்கிற்கு தரப்பட்ட சீக்ரெட் டாஸ்க்
நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் துவங்கியது. ஸ்கூலில் எப்படி இது நடக்கும் என்று கேட்கக்கூடாது. சற்று சிக்கலான ஆட்டம்தான். ஒரு இரும்புக் கூண்டிற்குள் இருக்கும் பந்துகளை, கம்பிகளின் இடைவெளியில் குச்சிகளை விட்டு மெல்ல மெல்ல நகர்த்தி வெளியே எடுக்க வேண்டும். ‘உண்டியலில் இருந்து காசை எடுப்பதைப் போல’ என்று சொன்னால் இப்போதைய ஜிபே தலைமுறைக்கு புரியுமா என்று தெரியவில்லை. இந்த ஆட்டத்தில் பெண்கள் அணி வெற்றி பெற்று உற்சாகமாக கொண்டாடியது. அதென்னமோ கேர்ல்ஸ் டீம் வெற்றி பெற்றால் பிக் பாஸிற்கு தனி உற்சாகம் வந்து விடுகிறது.
தீபக்கை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ். சீக்ரெட் டாஸ்க். “மேனேஜ்மென்ட் உங்களை ஈஸியா ஹாண்டில் பண்ற மாதிரி இருக்கு. அப்படி நடக்கக்கூடாது. நீங்க ஏதாவது கலாட்டா பண்ணனும். நிர்வாகம் ஸ்தம்பிச்சுப் போகணும். திக்குமுக்காடணும்.. இந்த விஷயம் மாணவர்களுக்கு மட்டும்தான் தெரியணும். எக்காரணத்தைக் கொண்டும் மேனேஜ்மென்ட் காதிற்கு செல்லக்கூடாது” என்று சொல்லி அனுப்பினார். (‘ம்க்கும்.. இவங்களா எதுவும் பண்ண மாட்டாங்க.. நாமளா ஏதாச்சும் இப்படி பண்ணாதான் உண்டு’ என்பது பிக் பாஸின் மைண்ட் வாய்ஸாக இருக்க வேண்டும்!).
முத்துவை தனியாக ஓரங்கட்டிய தீபக், இந்த சீக்ரெட் டாஸ்க் பற்றி மிகையான உற்சாகத்துடன் சொன்னார். முத்துவிற்கும் இது உற்சாகத்தை அளித்திருக்க வேண்டும். ‘ஓகே. பசங்க கிட்ட நீ சொல்லிடு.. பொண்ணுங்க கிட்ட நான் சொல்லிடறேன்” என்று தயார் ஆனார்.
ஒருவழியாக VP தனது இரண்டாவது காதலில் சக்ஸஸ் ஆகி விட்டார். பிரின்சிபல் மேடத்தை எப்படியோ கரெக்ட் செய்து விட்டார். ‘இந்தத் தியாகம்தான் உன்னை உயர்த்தும் குமாரு’ என்கிற கதையாக அருணின் பொறுமைதான் அவருடைய வாழ்க்கையை திரும்பத் தந்திருக்கிறது. இந்தத் தகவலை அறிந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.
சீக்ரெட் டாஸ்க்கின் முதல் அங்கமாக ‘கலை நிகழ்ச்சியை’ மாணவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இதுவொரு நல்ல ஐடியா. அப்போதுதான் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்க முடியும். மட்டுமல்லாமல் ஆசிரியர்களையும் அங்கு வந்து அமர வைக்க முடியும். விஷாலும் தர்ஷிகாவும் டூயட் சாங் பாட ‘ஓடிப் போயிட்டாளா. யார் கூட?’ காமெடியை மீண்டும் அரங்கேற்றினார் முத்து. மஞ்சரி டீச்சர் குறித்து பிடி மாஸ்டரான ஜெப்ரி பாட்டு பாட, உண்மையிலேயே வெட்கப்பட்டார் தமிழாசிரியை.
ராணவ்வும் பவித்ராவும் தனியாக சென்று அமர்ந்து பேசி கூட்டத்தின் கவனத்தைக் கவரும் வகையில் செயல்பட்டார்கள். மெல்ல மெல்ல இந்த டிராமா டெவலப் ஆனது. இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை காண்டுடன் பார்த்துக் கொண்டிருந்த சத்யா, எழுந்து வந்து ஆட்சேபிக்க ராணவ்விற்கும் சத்யாவிற்கும் மோதல் ஆரம்பித்தது. “நீதான் என்னை போடின்னு சொல்லிட்டல. அப்புறம் ஏன் இங்க வரே?” என்று பவித்ராவும் கத்த, ‘என்னமோ.. ஏதோ’வென்று டீச்சர்கள் பதறினார்கள்.
இதற்குப் பிறகு நிகழ்ந்ததை வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஒரே கூச்சலும் குழப்பமும். எல்லோரும் கத்துவது ஓவர் லாப் ஆகி மைக்குகள் தீப்பற்றி எரிந்ததில் வசனங்கள் புரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் கொடுத்துதான் பிரித்தெடுக்க வேண்டும்.
காதலுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு தரப்பும் ‘படிக்கிற ஸ்கூலில் லவ்விற்கு என்ன வேலை?” என்று ஒரு தரப்பும் என்று இரு பிரிவாக பிரிந்து மாணவர்க்ள மோதிக் கொண்டார்கள். ஆனால் ராணவ்வை சும்மா சொல்லக்கூடாது. இத்தனை நாட்கள் அவரை ஒதுக்கி வைத்திருந்த கோபத்தையெல்லாம் நடிப்பில் சோ்த்து வெளுத்து வாங்கி விட்டார்.
நூறு ரூபாய்க்கு நடித்த சவுந்தர்யா
‘ஒரே இடத்துல சண்டை வேணாம். ஆளாளுக்கு ஒவ்வொரு மூலைல போடுவோம். அப்பத்தான் அவங்களை அலைய வைக்க முடியும்’ என்று முத்து சொன்ன பிரிவினைவாத ஐடியா நன்று. ஆனால் ஒரு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னால் நூறு ரூபாய்க்கு நடித்தார் சவுந்தர்யா. நடிகர் பாண்டுவைப் போல் அவரது முகம் இஷ்டத்திற்கு கோணிக் கொண்டே சென்றது.
“என் போ் கூட இவங்களுக்குத் தெரியல” என்று ராணவ் ஆத்திரப்பட “என்னைக் கூடத்தான் மஞ்சுரி மேடம்ன்னு சொல்றாங்க. சரி விடு” என்று மஞ்சரி உண்மையான கரிசனத்துடன் ஆறுதல் சொல்ல “இல்ல.. உங்களுக்கு இது புரியாது மஞ்சுரி மேடம்” என்று அந்தச் சமயத்திலும் காமெடி செய்து அசத்தினார் ராணவ்.
ராணவ்வை தனியாக அழைத்துச் சென்று வழக்கம் போல் சமாதானப்படுத்தினார் அருண். “இல்ல.. சார்.. நான் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன்ல வந்துடறேன். நான் வெளில போயிட்டா.. இவங்களுக்கு சந்தோஷமா இருக்குமா?” என்று ஃபீல் ஆகி ராணவ் சொல்ல, ‘நான் சொல்றத கேளுப்பா.. வாழ்க்கைன்றது..’ என்று அதையும் விட ஃபீல் ஆகி அட்வைஸ் சொல்லிக் கொண்டிருந்தார் அருண்.
“இந்த ஸ்கூல்ல லவ் டிராமால்லாம் பண்ணாதீங்க.. எனக்கு இஷ்டம் இல்லா” என்று தனியார்வர்த்தனம செய்து கொண்டிருந்தார் அன்ஷிதா. பாய்ஸ் ரூமிற்குள் வந்து கலகத்தை கூட்டினார் சவுண்டு. ‘அவளை மொதல்ல வெளியே போகச் சொல்லு.. போடி வெளியே’ என்று சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டு உண்மையாகவே ராணவ் திட்டியதைப் போல் இருந்தது. ஒவ்வொருவராக தேடித் தேடி பஞ்சாயத்து செய்த மஞ்சரி, ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி ‘STOP’ என்று உரத்த குரலில் கத்த வேண்டியதாக இருந்தது. (இங்க சைலன்ஸ்ன்றதைக் கூட சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு!).
டென்ஷன் அதிகமாகி அழுத மஞ்சுரியும் ஜாக்குலினும்
இன்னொரு பக்கம் ஜாக்குலினும் டென்ஷன் ஆகி கத்தலும் அழுகையும் மோடிற்கு மாறிக் கொண்டிருந்தார். அருண் ஒவ்வொருவரையாக சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் பிரின்சிபல் மேடம்தான் சூப்பர். எந்த இடத்திலும் அலட்டிக் கொள்ளாமல் கூலாக உலவிக் கொண்டிருந்தார்.
‘காதல் வேண்டாம்’ என்று முத்து தலைமையில் ஓர் அமைதிப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அருணின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரிடமும் அரைமனதாக மன்னிப்பு கேட்டார் ராணவ். என்றாலும் மீண்டும் விவாதம் உக்கிரமாக ஆரம்பிக்க, தனது பொறுமையை இழந்த ரஞ்சித் “டேய்.. நிறுத்துங்கடா.. நீங்கள்லாம் பைத்தியமாடா..” என்று டோரா புஜ்ஜி மோடில் இருந்து ‘ஆங்க்ரி பேர்ட்’ மோடிற்கு மாறி உரத்த குரலில் கத்த வீடே ஒரு கணம் நிசப்தமாயிற்று. “பேசத்தானே இங்க வந்திருக்கோம்” என்று அப்போதும் ஒரண்டை இழுத்தார் ராணவ்.
‘தான் தனியா தெரியணும்ன்னு ஒவ்வொருத்தருக்கும் மண்டைல கிறுக்கு ஏறிடுச்சு” என்று சீரியஸாக கவலைப்பட்டு ரஞ்சித்திடம் சொன்னார் மஞ்சரி. “என்னடா பள்ளிக்கூடம் இது.. வாயைக் கட்டி வயித்தைக் கட்டி பேரண்ட்ஸ் படிக்க அனுப்பிச்சா?” என்று கார்டன் ஏரியாவில் தனியாக ஃபீல் செய்து கொண்டிருந்தார் ரஞ்சித். அவரது நடிப்பெல்லாம் சிறப்புதான். ஆனால் யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்றிக் கொண்டிருந்தார் என்றுதான் தெரியவில்லை. ஆடியன்ஸிற்குத்தான் இது நாடகம் என்று தெரியுமே? அங்கேயும் ஏன் தனியாக ஃபர்பாமன்ஸ் செய்ய வேண்டும்? (பிறவி நடிகன்டா!).
கூலாக உலவிக் கொண்டிருந்த பிரின்சிபல் மேடம்
‘எல்லோரும் ஹெவியா நடிக்கும் போது நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?’ என்று ரியா யோசித்தாரோ என்னமோ, சவுந்தர்யாவிற்கும் மேலாக சவுண்டு விட்டே ஆக வேண்டும் என்று அவரும் கத்த ஆரம்பிக்க, அவருடன் மோதுவது போல் ஜெப்ரி டென்ஷன் ஆகி எகிறி எகிறி குதிக்க ராணவ்வால் சிரிப்பைத் தாங்க முடியாமல் பாத்ரூமிற்கு ஓடி விட்டார்.
ஒருபக்கம் மஞ்சரி அழ ஆரம்பிக்க, இன்னொரு பக்கம் ஜாக்குலின் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க, ஒரே கூத்தாக இருந்தது. அழுகையுடன் ஜாக்குலின் பாத்ரூமிற்கு சென்று விட ‘ஓவர் ஆக்ட் பண்ணிட்டமோ?’ என்று சவுந்தர்யா உள்ளிட்டவர்கள் பாத்ரூம் வாசலில் அமர்ந்து கவலைப்பட்டனர். ‘அதெல்லாம் அழட்டும். ஒண்ணும் பிரச்னையில்ல’ என்று அலட்சியமாக இதை ஒதுக்கினார் முத்து. ‘ஜாக் சிரிச்சிட்டு முகத்தை திருப்பிக்கிட்டாங்க” என்றார் தீபக். எனில் இது சீக்ரெட் டாஸ்க் என்பது ஜாக்கிற்கு தெரிந்து விட்டதோ?! “ஆனா.. பாவம் இந்த மஞ்சரி புள்ள உண்மையிலேயே அழுதுடுச்சு’ என்று பாய்ஸ் டீம் ஃபீல் செய்தது.
மேனேஜ்மெண்ட் தரப்பில் ஏறத்தாழ எல்லோருமே இந்தக் கலவரத்தை அடக்குவதற்காக போராடிக் கொண்டிருக்க ஜென் மோடில் பிரின்சிபல் மேடம் கூலாக உலவிக் கொண்டிருந்தது ரசிக்கத்தக்க காட்சி.
ரஞ்சித் சொன்னது மாதிரி இந்த டாஸ்க்கை அனைவருமே சிறப்பாக கையாண்டார்கள். இது சீக்ரெட் டாஸ்க் என்று அம்பலப்பட்ட பிறகு ஜாக்குலின், மஞ்சரி, ஜெப்ரி, அருண் போன்றவர்கள் எல்லாம் ‘அடப்பாவிகளா!’ என்று வாய் பிளக்கப் போகிறார்கள்.
இந்த சஸ்பென்ஸ் அடுத்த எபிசோடிலும் தொடரப் போகிறது போல. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பார்க்காவிட்டாலும் பிரச்னையில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...