BCCI ஒப்பந்தம்: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு; பட்டியலில் நீக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?
2025–26ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ தற்போது வெளியிட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ வெளியிடும்.
அந்தவகையில் 2025–26ஆம் ஆண்டிற்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஸ்ரேயஸ் ஐயர். அதன் மூலம் அவர் இப்போது வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
அதே சமயம் இந்த முறை வீரர்களுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ஜிதேஷ் சர்மா மற்றும் ஷர்துல் தாக்குர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் ஏ+ பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு மாற்றப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அவர்கள் மூவரும் ஏ+ பிரிவிலேயே தொடர்ந்துள்ளனர்.

ஏ பிரிவில் கே.எல். ராகுல், முகமது சிராஜ், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பி பிரிவில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சி பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் பட்டிதார், துருவ் ஜுரேல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட 19 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஏ+ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 7 கோடி ரூபாயும், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாயும் சம்பளமாக பிசிசிஐ வழங்கும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...