செய்திகள் :

Best 7 Seater Cars: இந்தியாவின் முக்கியமான 13 பெஸ்ட் 7-சீட்டர் கார்கள் இவைதான்; வின்னர் யார், ஏன்?

post image
குடும்பத்தில் டூர் அடிக்க 7 சீட்டர்தான் சரியான சாய்ஸ். 7 சீட்டர் கார்களில் பெரிய குறையாகச் சொல்லப்படுவது - குறைவான டிக்கி இடவசதியும், சும்மா பேருக்கு இருக்கும் 3-வது வரிசை சீட்களும்தான்.

அப்புறம் என்ன, நாலே முக்கால் மீட்டருக்குள் எம்புட்டுதான் இடவசதி கொடுப்பது? இந்தியாவைப் பொறுத்தவரை, லக்ஸூரி கார்களான வெல்ஃபயர், லேண்ட்ரோவர், ஆடி, பிஎம்டபிள்யூ என எல்லாவற்றையும் சேர்த்து 7 சீட்டர்கள் மொத்தம் 38 கார்கள் இருக்கின்றன. ஆனால், நாம் இங்கே பார்க்கப் போவது நமக்கு அன்றாடம் தேவைப்படும் 15 -30 லட்சத்துக்குள்ளான 7 சீட்டர் கார்கள். இங்கே மொத்தமாக உள்ள 13 டாப் கார்களைப் பட்டியலிட்டிருக்கிறோம். இதில் வாசகர்களிடம் கிடைத்த ஃபீட்பேக் மற்றும் நம்முடைய டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் - எல்லாவற்றின்படியும் இந்த லிஸ்ட் தரப்பட்டிருக்கிறது. 7 சீட்டுக்குள் போகலாம்!

மஹிந்திரா பொலேரோ

13

மஹிந்திரா பொலேரோ

ஆன்ரோடு விலை: 11.75 - 13.70 லட்சம் வரை 

இன்ஜின்: டீசல்

பவர்: 75bhp 

டார்க்: 210Nm

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல்

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 180 மிமீ

ப்ளஸ்: மலையேற்றங்களில் சூப்பராக இருக்கும்; நல்ல டீசல் இன்ஜின் டார்க், Value for Money கார், குறைந்த பராமரிப்புச் செலவு, ஆஃப்ரோடிங் தன்மை, நல்ல வெளிச்சாலை விசிபிளிட்டி, ரியர் வீல் டிரைவ் 

மைனஸ்: 3-வது வரிசை பக்கெட் சீட்கள், பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது, டாம் அண்ட் ஜெர்ரி காலத்து மாறாத டிசைன், இன்ஜின் பீட் பலருக்கும் பிடிக்குமா தெரியவில்லை.

‛எவர்கிரீன் கார்கள் அல்லது அலுக்கவே அலுக்காத டிசைன் கொண்ட கார்கள்’ என்றொரு போட்டி வைத்தால், நிச்சயம் மஹிந்திரா பொலேரோதான் அதில் வின்னராக இருக்கும். ஆத்தீ! எத்தனை வருடங்களாக இந்தக் காரின் டிசைனைப் பார்த்துப் பார்த்துப் பழகினாலும், போர் அடிக்காத ஓர் ஆண்மைத்தனமான கம்பீரம் பொலேரோவுக்கு உண்டு. ‛சிங்கம்’ படத்தில் ஸ்கார்ப்பியோ வந்தால், ‛சிங்கம் 3’ படத்தில் ஸ்கார்ப்பியோ க்ளாஸிக் வரும். ஆனால், எத்தனை சீக்குவல் படங்கள் வந்தாலும், பொலேரோ அப்படியே டிசைன் மாறாமல்தான் இருக்கும். இந்த மைனஸே இதன் ப்ளஸ். B4, B6, B6 (O) என மொத்தம் 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது பொலேரோ. இதை ஒரு ஃபேமிலி எஸ்யூவி என்றே சொல்லலாம். என்ன, இதைக் காவல்துறையும் பயன்படுத்துவதால், பின்னால் இருக்கும் பக்கெட் சீட்களில் உட்கார்ந்தால், கைதிகள் உட்கார்வதைப்போல் ஒரு ஃபீல் வருவதைத் தடுக்க முடியவில்லை. அவ்வ்! இதன் ‛கர்ர்ர்’ 1.5 லி டீசல் இன்ஜின் அது ஒரு மாதிரியான ஜென்நிலை போங்கள்! 75bhp பவர் நெடுஞ்சாலைகளில் போதாதுதான்; ஆனால், மலைப் பயணங்களிலும், ஆஃப்ரோடு ஏரியாக்களில் லோடு அடிக்கும் பொலேரோவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும். பராமரிப்பிலும் அசத்தும் போங்கள் பொலேரோ! உங்களுக்கு 10 சீட்டர் வேண்டுமென்றால், பொலேரோ நியோ இருக்கு! ஆனால், பாதுகாப்பு ப்ச்!

Triber

12

ரெனோ ட்ரைபர்

ஆன்ரோடு விலை: ரூ.7.16 - 10.63 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல்

பவர்: 72bhp

டார்க்: 96Nm

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல் / AMT

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 182 மிமீ

பூட்ஸ்பேஸ்: 84 லிட்டர்

ப்ளஸ்: 4 மீட்டருக்குள் 7 சீட்டர், குறைந்த விலை, காம்பேக்ட் அளவு, நல்ல வீல்பேஸ்

மைனஸ்: தரம் குறைந்த ஃபேப்ரிக் சீட்கள், கிளட்ச் வியர், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஜெர்க்கினெஸ், ஃபிட் அண்ட் ஃபினிஷ்

ஒரு விஷயத்துக்காகவே இந்த ட்ரைபரைப் பாராட்டலாம். அட, 4 மீட்டருக்குள் 7 சீட்டர்னா சும்மாவா? ஆனால், சும்மா பேருக்குத்தான் அந்த 3-வது வரிசை சீட்! அந்தப் பின்னால் வரிசையில் அமர்பவர்கள் பாவம் செய்தவர்களாகவே கருதப்படுவார்கள். இதுவே 2-ம் வரிசை ஆசம்! 2,636 மிமீ வீல்பேஸ் என்பது இந்த 4 மீட்டர் செக்மென்ட்டில் வேறெதிலும் இல்லை. சிட்டிக்குள் இதை ஓட்டினால், 7 சீட்டர் ஓட்டுவதுபோலவே இருக்காது. காம்பேக்ட்டாக பார்க்கிங் ஈசியாக இருக்கும். இதன் வெளிச்சாலை விசிபிளிட்டியும் சூப்பர். ரெஸ்ட் பெடல், சிட்டி டிரைவிங்கில் வரம். ஆனால், இதன் கிளட்ச் வியரில் கவனம் செலுத்துங்கள் ரெனோ. ஏஎம்டி கியர்பாக்ஸ் இன்னும் மோசம். கிளம்பும்போதிலிருந்து ஜெர்க்கினெஸ் தெரிகிறது. 72bhp பவர் சிட்டிக்குள் ஓகே! ஹைவேஸில் ம்ம்ஹூம். இதன் 1.0லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், தடதடக்கத்தான் செய்கிறது. யார் ஓட்டினாலும் இது 12 கிமீ தான் மைலேஜ் தரும்போல! 84 - 320- 625 லிட்டர் பூட்ஸ்பேஸ் என்பது இதற்கு மேல் தாராளம் காட்ட முடியாது. இதன் ஃபேப்ரிக் சீட்டின் மேல் ஒரு எக்ஸ்ட்ரா கவர் போட்டு விடுங்கள். நாள் ஆக ஆக நாற்றம் அடிப்பதாகச் சொல்கிறார்கள். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொஞ்சம் படுத்தத்தான் செய்யும். ஆனால் இதன் கீலெஸ் ஆப்பரேஷன் சிஸ்டம், ஏதோ ப்ரீமியம் கார் போலத் தோற்றம் தருவது அசத்தல். Bigger things in Smaller Package என்பதைப்போல் ட்ரைபர், விலையில் ஜெயித்துவிடுகிறது. 

Invicto

11

மாருதி சுஸூகி இன்விக்டோ

ஆன்ரோடு விலை: ரூ.31.43 - 35.88 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல் ஹைபிரிட்

பவர்: 186bhp (Combined Power)

டார்க்: 188Nm 

கியர்பாக்ஸ்: e-CVT 

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 185 மிமீ

பூட்ஸ்பேஸ்: 239 லிட்டர்

ப்ளஸ்: ஹைபிரிட் தொழில்நுட்பம், இடவசதி மற்றும் சொகுசு, வசதிகள்

மைனஸ்: பயமுறுத்தும் விலை, வேகங்களில் கேபினுக்குள் சத்தம், டீசல் இல்லை, ப்ளாஸ்டிக் தரம், அடிப்படையான டச் ஸ்க்ரீன், 

மாருதியின் விலை அதிகமான 7 சீட்டர். அதுக்காக இம்புட்டு விலையா பாஸ்? அதனாலேயே மாருதியின் விற்பனை குறைவான கார். போன செப்டம்பரில் வெறும் 312 கார்கள்தான் விற்பனையாகி இருக்கிறது. Peace of Mind என்று சொல்வார்களே… அது இன்விக்டோவில் கிடைக்குமா என்றால்? இந்த Peace கிடைக்க, இந்த காஸ்ட்லி Piece-க்கு நீங்கள் 35 லட்ச ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். நிஜமாகச் சொல்லப்போனால், இந்த ஒரு காருக்கு நீங்கள் 3 மாருதி கார்கள் வாங்கி விடலாம். இந்த இன்விக்டோவில் டீசல் இன்ஜின் கிடையாது. ஆனால் டொயோட்டாவின் ஹைபிரிட் டெக்னாலஜி, 186bhp பவர் கொண்ட 1987 சிசி பெட்ரோல் இன்ஜினின் ரிஃபைன்மென்ட் அற்புதம். e-CVT கியர்பாக்ஸ் நல்ல துணை. ஒரு எலெக்ட்ரிக் காரை ஓட்டுவதுபோல் அத்தனை ஸ்மூத். 2.85 மீ கொண்ட இதன் வீல்பேஸ் 7 சீட்டருக்குத் தகுதியான எம்பிவி. இங்கே போவதும் எளிதாக இருக்கிறது. 3 பேர் அமர்வதும் ஓகேவாகத்தான் இருக்கிறது. உயரமானவர்களுக்கு ஹெட்ரூமும் ஓகே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் 2-வது வரிசை கேப்டன் சீட்களை ஃபுல்லாக இழுத்துவிட்டு உயரமானவர்கள் உட்கார்ந்தால், முன் பக்க சீட்டுக்கு அடியில் உள்ள பேட்டரி கேஸிங் கால்களைத் தட்டுகிறது. டாப் மாடல்களான Zeta+, Alpha+ ட்ரிம்களில் மட்டும்தான் இன்விக்டோ கிடைப்பதால் வசதிகளில் சூப்பர்! வென்டிலேட்டட் சீட்களில் இருந்து 360 டிகிரி கேமரா, அட - பவர்டு டெயில்கேட்கூட உண்டு. பூட் கேட் அகலமாகத் திறப்பதால், பொருட்களை ஏற்றி இறக்கவும் ஈஸி. என்ன இதன் ரிவர்ஸ் கேமரா ஹைரெசொல்யூஷனில் இல்லை. 10.1 இன்ச் டச் ஸ்க்ரீன் கனெக்டிவிட்டியும் ‛சூப்பர்’ என்று சொல்ல முடியவில்லை. ஸ்க்ரீன் ரெஸ்பான்ஸ் இன்னும் வேண்டும் மாருதி. சிட்டிக்குள் 11.5 கிமீ-யும், ஹைவேஸில் 15.5 கிமீ-யும் தருகிறது இன்விக்டோ. 

MG Hector Plus First Drive

10

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

ஆன்ரோடு விலை: ரூ.21.60 - 29.18 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல், டீசல்

பவர்: 143bhp / 167.6bhp  

டார்க்: 250Nm / 350Nm 

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு MT / CVT / 6 MT

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 192 மிமீ

பூட்ஸ்பேஸ்: 155 லிட்டர்


ப்ளஸ்: இன்டர்நெட் கார், நல்ல ரோடு பிரசன்ஸ், நல்ல இடவசதி, 3-வது வரிசைக்கு புளோயர் கன்ட்ரோலுடன் ஏசி வென்ட், அப்மார்க்கெட் இன்டீரியர்

மைனஸ்: வெயிலில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கிளார் அடிக்கிறது, கட்டுமானம், படுத்தும் டர்போ லேக், தூக்கிப் போடுகிறது சஸ்பென்ஷன், சாஃப்ட்வேர் குளறுபடிகள்

ஹெக்டர் 5 சீட்டரின் பெரிய அண்ணன்தான் ஹெக்டர் ப்ளஸ் எனும் 7 சீட்டர். 143bhp தரும் 1.5 லி டர்போ பெட்ரோல், 167.6bhp தரும் 2.0 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின்களிலுமே ஹெக்டர் ப்ளஸ் கிடைக்கிறது. பெட்ரோலுக்கு 6 ஸ்பீடு MT-யும் CVT-யும் - டீசலுக்கு 6 ஸ்பீடு மேனுவல் ஸ்டாண்டர்டாகவும் வருகிறது. ஹெக்டர் ஏதோ பெரிய அரண்மனை வாகனம்போல் தெரிவது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. உள்ளேயும் அப்படித்தான்; அத்தனை விசாலம். லக்ஸூரியஸும்தான். இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் சூப்பர். 6 அடி உள்ளவர்களுக்குக்கூட லெக்ரூமும், ஹெட்ரூமும் விசாலமாகக் கிடைப்பது ஹெக்டர் ப்ளஸ்ஸின் பெரிய ப்ளஸ். இதிலும் 3-வது வரிசை சீட் ஓரளவு ஓகேதான். இரண்டாவது வரிசை என்றால், கொடுத்து வைத்தவர்கள். கேப்டன் சீட் செம சொகுசு. இன்டர்நெட் இன்சைடு மட்டுமில்லை; கம்ஃபர்ட் இன்சைடு என்றும் பெயர் வைத்திருக்கலாம் எம்ஜி. ஹெக்டர் ப்ளஸ்ஸின் பெரிய மைனஸ் - மைனஸ் ஆகிக் கொண்டே போகும் இதன் மைலேஜ். எக்கோ மோடு என்றால் 8 - 9 கிமீ தருவதற்கே அழுகிறது ஹெக்டர் ப்ளஸ். ஹைவேஸிலும் 12 கிமீ-யைத் தாண்டவில்லை. பார்க்க படுபயங்கரமாக ஃபார்ச்சூனருக்கே டஃப் கொடுப்பதுபோல் இருந்தாலும், இது சுறுசுறுப்பான கார் இல்லை. ஓட்டுவதற்கு எக்ஸைட்மென்ட் ஆகவெல்லாம் இல்லை. டர்போ லேக் படுத்தத்தான் செய்கிறது. இதன் TPMS சிஸ்டம், ஒரு முறை தவறான டயர் ப்ரஷர் டிஸ்ப்ளேவால் என் ப்ரஷர் ஏறிவிட்டது. சாஃப்ட்வேர் குளறுபடிகளும் நடப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப் என்பதால், மோசமான சாலைகளில் தூக்கிப் போடலாம். என்ன, விலையும் தூக்கி வாரிப் போடத்தான் செய்கிறது. 

மாருதி சுஸூகி XL6


9

மாருதி சுஸூகி XL6

ஆன்ரோடு விலை: ரூ.14.20 - 14.78 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல், CNG

பவர்: 101.6bhp  

டார்க்: 136.8Nm 

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு MT /  6 AT / 5 MT (CNG)

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 180 மிமீ

பூட்ஸ்பேஸ்: 209 லிட்டர்


ப்ளஸ்: இடவசதி மற்றும் பிராக்டிக்காலிட்டி, ஸ்மூத் இன்ஜின், டெக்னிக்கல் சமாச்சாரங்கள், சிஎன்ஜியின் மைலேஜ்

மைனஸ்: மந்தமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஒரு யுஎஸ்பி போர்ட் போதுமா மாருதி, சின்ன சைடு வால் டயர்களால் ஓட்டுதல் அடிபடுகிறது, பாடி ரோல் தெரிகிறது, 


எக்ஸ்எல்6-யைப் பார்த்தால் மாருதி என்று சொல்ல மாட்டார்கள். அத்தனை ப்ரீமியம் போங்கள். Suzuki Connect வசதி, 360 டிகிரி கேமரா, TPMS, 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், வென்டிலேட்டட் சீட்ஸ், ஆல் பிளாக் ஸ்போர்ட்டியான தீம் கொண்ட இன்டீரியர் என்று கலக்கல்! ஒயர்லெஸ் சார்ஜிங் மட்டும் மிஸ்ஸிங். டொயோட்டாவின் ஹைபிரிட் சிஸ்டம் அசத்தல். ஓட்டுவதற்கு ஜாலியாக இருக்க வேண்டுமென்றால், 6 ஸ்பீடு AT கியர்பாக்ஸில் பேடில் ஷிஃப்டர்கள் உதவி புரியும். இதன் 6 சீட்டர் மாடல் கேப்டன் சீட்கள், முன்பக்க சீட்களைப்போல் ஜம்முனு இருக்கும். 3-வது வரிசையில் ஒரு குறை - இதன் ரூஃப் லெட்ஜ் என்று சொல்லக்கூடிய அந்த ரூஃப் லைன், உயரமான பயணிகளின் ஹெட்ரூமைக் காலி செய்கிறது. மைல்டு ஹைபிரிட் என்பதால், இதன் இரண்டாவது பேட்டரியின் மூலம் கிடைக்கும் டார்க் அசிஸ்டன்ஸ், எக்ஸ்ட்ரா பெர்ஃபாமன்ஸுக்கு உதவினாலும், 0-100 கிமீ-க்கு 14 விநாடிகளுக்கு மேல் ஆகிறது எக்ஸ்எல்6-ல். அநேகமாக இந்தப் போட்டியில் இதுதான் டொய்ங்! டூயல் இன்ஜெக்டர்கள், டூயல் வேரியபிள் வால்வ் டைமிங், முன்பைவிட அதிகமான கம்ப்ரஷன் விகிதம் போன்றவற்றால், புது வாடிக்கையாளர்கள் இந்த K15C இன்ஜினில் மைலேஜ் கொஞ்சம் அதிகமாகத் தருகிறதாகச் சொல்வார்கள். சிட்டிக்குள் மைலேஜ் மொக்கையாக இருந்தாலும், (10 Kmpl) நெடுஞ்சாலையில் சுமார் 17 கிமீ வரை தருகிறது XL6. கம்ஃபர்ட் சீட்கள் இதன் ப்ளஸ்ஸாக இருந்தாலும் - பெர்ஃபாமன்ஸும், கட்டுமானத் தரமும் மேம்பட்டுவிட்டால், XL6 இன்னும் தரமான 7 சீட்டராக ஜொலிக்கும். 

Hyundai Alcazar

8

ஹூண்டாய் அல்கஸார்

ஆன்ரோடு விலை: ரூ.18.55 - 27.1 லட்சம் வரை 

இன்ஜின்: பெட்ரோல், டீசல்

பவர்: 157.8bhp / 114bhp

டார்க்: 253Nm / 250Nm

கியர்பாக்ஸ்: 6 ஸ்பீடு MT/ 7 DCT / 6 MT / 6 AT 

ப்ளஸ்: இன்டீரியர் தரம், டெக் லோடட், சொகுசான பயணம், Boss Mode மற்றும் டாடா போல் 2-வது வரிசை கூல்டு சீட்கள், நீளும் வசதிகள்

மைனஸ்: டீசலில் ஸ்பேர் டயர் இல்லை, பெட்ரோல் மைலேஜ், பவர் போதவில்லை, பவர்டு டெயில் கேட் இருந்திருக்கலாம், 3-வது வரிசை இடநெருக்கடி


அல்கஸாரை ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும். டாடாவைப்போல் அந்த 2-வது வரிசை சீட்டுக்கும் வென்டிலேட்டட் சீட்ஸ். இரண்டாவதற்கும் பாராட்டலாம் - பின்பக்கம் ஒயர்லெஸ் Qi சார்ஜர். நீங்கள் சொகுசாக ஒரு லாங் டிரைவ் பயணிக்க வேண்டும் என்றால், அல்கஸாரில் உள்ள Boss Mode சூப்பர் ஆப்ஷன். ஜம்மென்று இருக்கிறது. முன் பக்கம் பவர்டு மெமரி சீட். அல்கஸாரில் சீட்கள் எல்லாமே எலெக்ட்ரிக்கல்தான். பட்டன் மூலமாக முன்பக்கப் பயணிகளின் அனுமதி இல்லாமலே, அவர்களின் சீட்டை அட்ஜஸ்ட் செய்து குளுகுளு வென்டிலேட்டட் சீட்டில் Boss மாதிரி பயணிக்கலாம் பாஸ். ஹெட்ரெஸ்ட்டுக்கு அந்த விங்லெட்ஸ் வசதி, நம் தலை ஆடாமல் அசையாமல் பயணிக்க உதவும். இதுவே லாங் டிரைவ் ஓட்டப் போகிறீர்கள் என்றால், 116bhp பவரும், 250Nm டார்க்கும் தரும் 1.5 லி டீசல் இன்ஜினை, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொண்டு விரட்டினால், நல்ல Chauffeur-Driven அனுபவம் கிடைக்கும். மேனுவலும் சாஃப்ட்தான். கால், கை எதுவும் வலிக்கவில்லை. அதிலும் அந்த ஸ்போர்ட் மோடு - எனக்கென்னவோ வால்வோ ஓட்டுவதுபோலவே தெரிந்தது. எந்த இடத்தில் மிதித்தாலும் பவர் டெலிவரி லீனியராகக் கிடைத்தது. வெர்னா, காரன்ஸ், க்ரெட்டாவில் இருக்கும் அதே பெட்ரோல் இன்ஜின்தான். 7 ஸ்பீடு கியர்பாக்ஸையும் சும்மா சொல்லக் கூடாது. என்ன, இதன் மைலேஜ் 9 - 11 கிமீ வரைதான் கிடைக்கும். டீசலுக்குக் கொஞ்சூண்டு எக்ஸ்ட்ரா. டீசலில் ஸ்பேர் டயர் மிஸ்ஸிங். பனோரமிக் சன்ரூஃபை அல்கஸாரில் எதிர்பார்த்தால் சாரி. அட, எக்கோ மோடில் ஓட்டினால், அல்கஸாரை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால், சிட்டிக்குள் இது ஓகே! வழக்கம்போல் 3-வது வரிசை இதிலும் பெயருக்குத்தான். அதனால் என்ன, டாப் எண்டில் கிடைக்கும் 6 சீட்டர் கேப்டன் சீட் அல்கஸார், சொகுசின் உச்சம்! விலையிலும்தான்! 

Kia Carens

7

கியா காரன்ஸ்

ஆன்ரோடு விலை: ரூ.13.05 - 24.50 லட்சம்

இன்ஜின்: டர்போ பெட்ரோல், டீசல்

பவர்: 140bhp / 115bhp

டார்க்: 242Nm / 250Nm 

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல் / 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 195 மிமீ

பூட்ஸ்பேஸ்: 216 லிட்டர்

ப்ளஸ்: 3-வது வரிசை சீட், DCT கியர்பாக்ஸ், 2-வது வரிசை சீட்கள், கம்ஃபர்ட், iMT கியர்பாக்ஸ் சிட்டிக்குள் ஓட்ட சூப்பர், ப்ரீமியம் இன்டீரியர்

மைனஸ்: iMT கியர்பாக்ஸ் மலைப்பயணங்களில் முக்குகிறது, DPF அடைப்பதாகப் புகார்கள், ஃபுல் லோடு அடித்தால் டீசல் திணறுகிறது

பெட்ரோல், டீசல், மேனுவல், iMT, DCT, என வெரைட்டியாகக் கிடைப்பது காரன்ஸின் பெரிய ப்ளஸ். பெர்ஃபாமன்ஸ்தான் வேண்டும் என்றால் அல்கஸார், வெர்னாவில் இருக்கும் 1.5 லி டர்போ பெட்ரோல் இன்ஜின், DCT-க்குப் போய்விடுங்கள். இதில் கிளட்ச்சே இல்லாத iMT கியர்பாக்ஸ், சிட்டிக்குள் ஓட்ட  ஜாலிதான்! ஆனால் இதுவே ஒரு மலைப்பயணத்தில் கரடுமுரடான இதை எடுத்துப் போய் அவதிப்பட்டிருக்கிறேன். DCT-ல் அந்தக் குறை இருக்காது! ஜிவ் பயணம்தான்! ஆனால், iMT (12.5-16 Km)அளவுக்கு DCT (9.5-14.5 Km)-யில் மைலேஜ் எதிர்பார்க்க முடியாது. 115bhp டீசல் ஆகட்டும்; பஞ்ச்சியான இன்ஜின் இதன் பெரிய ப்ளஸ். ஓட்டுவதற்கு அத்தனை இதமாக இருக்கிறது காரன்ஸ். இதன் டீசல் வேரியன்ட்டில் ஒரு குறை சொன்னார்கள். DPF (Diesel Particulate Filter) என்றொரு சமாச்சாரம், அடைப்பதாகவும், அதனால் வார்னிங் லைட் கிளஸ்ட்டரில் எரிவதாகவும் சொல்கிறார்கள். ஆனால் - மிகைப்படுத்தவில்லை; நிஜமாகவே காரன்ஸில் சும்மா பேருக்கு என்று அந்த 7 சீட்டரை வடிவமைத்துவிடவில்லை கியா. நான் இதில் லாங் டிரைவ் ஓட்டியிருக்கிறேன்; 3-வது சீட்டில் பயணித்திருக்கிறேன். ரொம்பவும் டயர்டாகவில்லை. பெரியவர்களுக்கான பிராக்டிக்கலான 7 சீட்டர் இந்த காரன்ஸ். 2-வது வரிசை கேப்டன் சீட்களில் ட்ரே டேபிள், விண்டோ ஷேடுகள், யுஎஸ்பி ஸ்லாட் என்று காரன்ஸை ஒரு படி மேலே ஏற்றுகின்றன. முன்பக்க வென்டிலேட்டட் சீட்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் சூப்பர். 216 லிட்டர் பூட் ஸ்பேஸும் ஓகே! என்ன, இதை ஒரு எஸ்யூவியாகப் பார்க்க மனசு வரமாட்டேன்கிறது. காரன்ஸ் எம்பிவியா? எஸ்யூவியா? நீங்களே சொல்லுங்க! அது சரி - சிஎன்ஜி காரன்ஸ் எப்போ வரும் கியா?

Ertiga

6

மாருதி சுஸூகி எர்டிகா/டொயோட்டா ரூமியான்

ஆன்ரோடு விலை: ரூ.10.23 - 16.03 லட்சம் / ரூ.13 - 17 லட்சம் 

இன்ஜின்: பெட்ரோல், சிஎன்ஜி

பவர்: 103bhp

டார்க்: 137Nm

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல் / 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 185 மிமீ

பூட்ஸ்பேஸ்: 209 லிட்டர்

ப்ளஸ்: எளிதான Ingress/Egress, சிஎன்ஜி மைலேஜ், இன்ஜின் ரிஃபைன்மென்ட், 

மைனஸ்: மாருதியின் வெயிட்டிங் பீரியட், உயரமான ஆசாமிகளுக்கு டைட்டான ஹெட்ரூம் 

பொதுவாக, டொயோட்டாவின் வெயிட்டிங் பீரியட்தான் படுத்தும். இதில் எர்டிகாவை புக் செய்துவிட்டு, ‛ச்சீ இந்தப் பழம் கசக்குது‘ என்று ரூமியானுக்குப் போனவர்களை நான் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் எர்டிகாவை விட இது எக்ஸ் ஷோரூமில் 75,000 ரூபாய் விலை அதிகம். இடவசதியும் கம்ஃபர்ட்டும்தான் இந்த இரண்டிலும் ப்ளஸ். இதன் 2-வது வரிசை சீட்களை 40:60 விகிதத்தில் மடித்துக் கொண்டால், இன்னும் வசதி கிடைக்கும். Ingress/Egress விஷயங்களும் இதில் எளிதாகவே இருக்கிறது. 2-வது சீட்டை டில்ட் ஃபார்வர்டு / ஸ்லைடு செய்தால், எளிதில் 3-வது வரிசைக்குப் போய்விடலாம். உயரமான ஆசாமிகளுக்கு ஹெட்ரூம் கொஞ்சம் டைட்தான். அதேபோல் தொடையும் 2-வது வரிசை சீட்டில் இடிக்கும். இது லாங் டிரைவ்களுக்கு ஓகேதான்; சூப்பர் என்று சொல்ல முடியாது. ஆனால், பின்னால் அந்தக் குவார்ட்டர் கிளாஸ் கண்ணாடி, நன்றாக வேடிக்கை பார்க்க வசதியாக இருக்கிறது. மாருதியின் 103bhp பவர் கொண்ட 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் நல்ல ரிஃபைன்மென்ட். அதிலும் மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் ரசிகர்கள் பலர் உண்டு. சிட்டிக்குள் இரண்டுமே கிட்டத்தட்ட 12 கிமீ-யைத் தரவே முக்குகின்றன. இதுவே ஹைவேஸில் 16 கிமீ-க்கு மேல் தருவது வியப்பு. 7 சீட்டரில் சிஎன்ஜி ஆப்ஷன் இருப்பதற்காகவே எர்டிகா, ரூமியானைப் பக்கா பட்ஜெட் 7 சீட்டர்கள் என்றே சொல்லலாம். 

Toyota Rumion
Toyota Innova Hycross

5

டொயோட்டா இனோவா ஹைக்ராஸ்

ஆன்ரோடு விலை: ரூ.24.60 - 30.90 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல், ஹைபிரிட்

பவர்: 173bhp / 183.7bhp

டார்க்: 205Nm / 188Nm

கியர்பாக்ஸ்: CVT / e-CVT 

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 185 மிமீ

பூட் ஸ்பேஸ்: 300 லிட்டர்

ப்ளஸ்: தாரா…ள இடவசதி, பெரிய வண்டி ஓட்டுவதுபோல் இல்லை, ஏசி கூலிங், டொயோட்டாவின் ஹைபிரிட் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் போல் ஸ்மூத்னெஸ்

விலை: பயமுறுத்தும் விலை, இன்டீரியர் தரம் மேம்பட வேண்டும், CVT -யின் டல் பெர்ஃபாமன்ஸ், பெட்ரோல் மைலேஜ், டீசல் இன்ஜின் இல்லை. 


நீங்கள் 8 பேர் டூர் அடிக்க வேண்டும் என்றால், இனோவா ஹைக்ராஸைத் தைரியமாக எடுக்கலாம். அவ்வளவு தாரா…ள இடவசதி. என்ன, லட்சங்களை அள்ளிக் கொடுக்க வேண்டும் இதற்கு. ஹைக்ராஸ் ஆட்டோமேட்டிக்கில் மட்டும்தான் கிடைக்கும். மேனுவல் இல்லை; க்ரிஸ்ட்டாவில் டீசல் மட்டும்தான் என்றால், இதில் பெட்ரோல் மட்டும்தான். இதில் NA சாதா பெட்ரோல் இன்ஜின் மைலேஜ் மிகவும் மந்தம். சிட்டிக்குள் 9-யைத் தாண்டுவதே பெரிய டாஸ்க்தான். ஆனால், ஹைபிரிட்டை விட இதன் பிக்அப் சூப்பராக இருக்கும். இதுவே ஹைபிரிட்டுக்குப் போனால் நல்ல மைலேஜ் கிடைக்கும். இதன் 188Nm டார்க், சாதாவைவிடக் குறைந்தால், அங்கேதான் எலெக்ட்ரிக் மோட்டார் உதவுகிறது. கூடவே முன் சீட்டுக்கு அடியில் இருக்கும் 1.6kWh nickel metal hydride (NiMH) பேட்டரி, வழக்கமான லித்தியம் அயன் பேட்டரியைவிட தெர்மல் ரன்அவே என்று சொல்லக்கூடிய தீப்பிடிக்கும் அபாயம் குறைவாக இருக்கும் என்கிறார்கள் டொயோட்டா இன்ஜீனியர்கள். பேட்டரி பவரில் ஸ்டார்ட் ஆகி, எலெக்ட்ரிக் கார் ஓட்டுவதுபோன்ற ஓர் அனுபவம் கிடைக்கும். இதன் e-CVT கியர்பாக்ஸ் ஸ்மூத். இத்தனை படா காராக இருந்தாலும், மோனோகாக் சேஸி கட்டுமானமும், லைட் ஸ்டீயரிங்கும் - க்ரிஸ்ட்டாவை விட ஹேண்ட்லிங் சூப்பர் என்றால் நம்புவீர்களா? 8 பேரை ஏற்றிக்கொண்டு போனாலும் முக்காமல் முணகாமல் போவதுதான் ஹைக்ராஸின் டாப் க்ளாஸ் தொழில்நுட்பம். ஆனால், ஹைக்ளாஸ் மக்கள் பயன்படுத்துவதுபோல் இந்த ஹைக்ராஸின் விலைதான் பயமுறுத்துகிறது. 

Innova Crysta

4

டொயோட்டா இனோவா க்ரிஸ்ட்டா

ஆன்ரோடு விலை: ரூ.25 - 33 லட்சம் வரை 

இன்ஜின்: 2.4 லி டீசல்

பவர்: 150bhp

டார்க்: 343Nm

கியர்பாக்ஸ்: 5 ஸ்பீடு மேனுவல்

பூட் ஸ்பேஸ்: 300 லிட்டர்

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 178 மிமீ

ப்ளஸ்: நம்பகத்தன்மை, தரம், சர்வீஸ் நெட்வொர்க், ஹை ஸ்பீடு ஸ்டெபிலிட்டி

மைனஸ்: வசதிகள் இல்லாதது, சின்ன வீல்கள், டெலிவரி பீரியட்


‛இருட்டுக் கடைக்கு விளம்பரம் எதுக்கு’ என்பது மாதிரி - இனோவா க்ரிஸ்ட்டாவுக்கு விளம்பரமோ, பாராட்டோ தேவையே இல்லை. இனோவாவுக்கு என்று வாடிக்கையாளர்கள் பிறந்து கொண்டேதான் இருப்பார்கள். 2005-ல்தான் இனோவா பிறந்தது. 2016-ல்தான் க்ரிஸ்ட்டா பிறந்தது. 2.7 லி பெட்ரோல், 2.4 லி டீசல், 2.8 லி டீசல் என வாவ் சொல்ல வைத்தது! இப்போது 2.4 டீசல் மட்டும்தான் ஓடுது. 150bhp பவரும், 343Nm டார்க்கும் ஓகேதான். மற்றவர்களெல்லாம் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர், வென்ட்டிலேட்டட் சீட்கள், ஒயர்லெஸ் கனெக்டிவிட்டி என்று எங்கேயோ போய்விட, க்ரிஸ்ட்டாவில் ‛5 ஸ்பீடு மேனுவல், 16 இன்ச் வீல், ரியரில் டிரம் - இம்புட்டுத்தான் கொடுப்போம்; வாங்கன்னா வாங்குங்க’ என்று டொயோட்டா கறார் காட்டினாலும், ‛டெலிவரியை மட்டும் சீக்கிரம் பண்ணுங்க’ என்று வரிசை கட்டித்தான் நிற்கிறார்கள் வாடிக்கையாளர்கள். சின்ன எம்பிவிகளே 16 இன்ச் வீல்களுக்கு மாறிவிட, இத்தனை பெரிய 4.73 மீட்டர் காருக்கு 16 இன்ச் வீல்கள்தானா! டாப் எண்டில் மட்டும் 17 இன்ச். இதன் வீல்பேஸும் 2750 மிமீ. இதில் 7 மற்றும் 8 சீட்டர் என புத்திசாலித்தனமாக பொசிஷன் செய்திருக்கிறது டொயோட்டா. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் 178 மிமீதான். ஆனால், பூட் கொள்ளளவு 300 லிட்டர். அதனால்தான் டூர் பார்ட்டிகள் இனோவா க்ரிஸ்ட்டாவை விரும்புகிறார்கள். இதன் ரியர் வீல் டிரைவ் ஓட்டுதல் சுகம், ஒரு மாதிரி மயக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை வசதிகள் குறைவாக இருந்தாலும், க்ரிஸ்ட்டா ஏன் தெரியுமா வின்னராகவே இருக்கிறது? இதுவரை ஒரு இனோவாகூட பிரேக்டவுன் ஆகி நான் பார்த்ததே இல்லை; நீங்க? 

Scorpio N

3

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N

ஆன்ரோடு விலை: ரூ.17.75 - 31.11 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல், டீசல்

பவர்: 200bhp / 172.4bhp

டார்க்: 380Nm / 400Nm 

கியர்பாக்ஸ்: 6 MT/ 6 AT

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 187 மிமீ

பூட்ஸ்பேஸ்: 460 லிட்டர்


ப்ளஸ்: சூப்பரான ரோடு பிரசன்ஸ், 5 ஸ்டார் ரேட்டிங் கட்டுமானம், டஃப் கொடுக்கும் 4வீல் டிரைவ் ஆஃப்ரோடிங், விலைக்கேற்ற தரம், பஞ்ச்சியான இன்ஜின், ப்ரீமியம் இன்டீரியர், 

மைனஸ்: 3-வது வரிசை சீட், கியர்பாக்ஸ் இன்னும் ஸ்மூத்தாக வேண்டும், குறைந்த வேகங்களில் ஓட்டுதல் தரம், சுமாரான லக்கேஜ் ஏரியா டிசைன்

ஸ்கார்ப்பியோவுக்கு 22 வயது. ஆனால் ஸ்கார்ப்பியோ N-க்கு 2 வயதுதான். அதற்குள் 1 லட்சம் விற்பனையை எட்டிவிட்டது N. ஸ்கார்ப்பியோவும் எக்ஸ்யூவி 700-வும் எப்போதுமே ‛அக்னி நட்சத்திரம்’ பிரபு - கார்த்திக் மாதிரிதான்! ரெண்டுமே பெர்ஃபாமன்ஸ் புலிகள்! பாதுகாப்பு அரண்கள்! வசதிகளை அள்ளித்தரும் அட்சய பாத்திரங்கள்! இந்த 3-வது ஜென் ஸ்கார்ப்பியோவின் பெட்ரோல் இன்ஜின் - ஓட்டுதல் பிரியர்களுக்கானது. ஸ்மூத்தாகவும் பஞ்ச்சியாகவும் இருக்கும். இதில் டீசல் இன்ஜினில் 4X4 மாடல், ஆஃப்ரோடு வெறியர்களுக்கானது. மேனுவல் கியர்பாக்ஸின் கிளட்ச் பொதுவாக மற்ற கார்களில் கால் வலிக்கும். ஸ்கார்ப்பியோ 6 ஸ்பீடு மேனுவல் கிளட்ச் அந்த ரகம் இல்லை. ஆனால் கியர்பாக்ஸுக்குக் கொஞ்சம் எஃபர்ட் போட வேண்டும். பென்ஸில் இருக்கும் Driver Drowsiness Detection சிஸ்டம், தூக்கம் வந்தால் டிரைவர்களை அலெர்ட் செய்வது சூப்பர். காட்டில் சிங்கம் நடந்து வந்தால் வழிவிட்டு ஒதுங்குமே மற்ற விலங்குகள்! அதைப் போன்றதொரு ரோடு பிரசன்ஸ்தான் இதில் ப்ளஸ். இதில் 3-வது வரிசை இருக்கும்; ஆனால் பேருக்கு இருக்கும்! அதேபோல் இதில் லக்கேஜ் ஏரியாவும் எங்களை இன்ஸ்பயர் செய்யவில்லை. குறைந்த வேகங்களில் இதன் ரைடு இன்னும் மேம்பட வேண்டும். பள்ளங்களின் தாக்கம் நம்மைத் தாக்குகிறது. பெர்சனலாகவே எனக்கு கறுப்பு பிடிக்கும். அதிலும் ஸ்கார்ப்பியோவின் Midnight Black,  ‘Napoli Black போன்ற கறுப்பு நிற ஷேடுகளின் ரசிகன் நான். என்னைக் கேட்டால் 25 லட்ச ரூபாய்க்கு ஒரு எம்பிவி வாங்குவதற்குப் பதில், கிண்ணென்ற 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட, ஆஃப்ரோடு அம்சனான இந்த 7 சீட்டர் ஸ்கார்ப்பியோ N-யை எடுப்பது விலைக்கேற்ற தரம்.

XUV700

எக்ஸ்யூவி 700

ஆன்ரோடு விலை: ரூ.17.68 - 32 லட்சம்

இன்ஜின்: பெட்ரோல், டீசல்

பவர்: 197bhp / 182 bhp

டார்க்: 380Nm / 450Nm 

கியர்பாக்ஸ்: 6 MT/ 6 AT

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 200 மிமீ

பூட்ஸ்பேஸ்: 240 லிட்டர்

ப்ளஸ்: வசதிகள், உறுதியான / ஸ்மூத்தான இன்ஜின், பாதுகாப்பு வசதிகள், கட்டுக்குள் வரும் பாடி ரோல், ஆல்வீல் டிரைவ்,கார் பாகங்களின் தேய்மானத்தைச் சொல்லும் புது வசதிகள், வெல்பேக்கேஜ்டு கார்

மைனஸ்: Diesel Exhaust Fluid-ல் பிரச்னை, ஹைவேஸில் டயர் சத்தம், ACC-ல் நடக்கும் ஹார்டு பிரேக்கிங்

வாங்க எக்ஸ்யூவி 700. இந்தப் போட்டியில் 2-வது இடம். ஸ்கார்ப்பியோவைப் பின்னுக்குத் தள்ளியது - இதன் வசதிகளிலும், ஓட்டுதலிலும்தான். இதில் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்அப், குறைந்த வேகங்களில் ‛நைஸ்’ என்று நம்மை அறியாமல் கை தட்டிவிடுவோம். இதன் வீல்பேஸ் 2750 மிமீ. இது மெக்கானிக்கல் கார் இல்லை; எலெக்ட்ரானிக் கார். 2.2 லிட்டர் டாப் மாடலான 182bhp பவர் கொண்ட டீசல் மாடல்தான் என்னுடைய சாய்ஸ்.  காரணம் - இதன் பெர்ஃபாமன்ஸும் ஓட்டுதலும். 153bhp கொண்ட டீசல் சிட்டிக்குள் 11 கிமீ-யும், ஹைவேஸில் 15 -16 கிமீ-யும் மைலேஜ் கொடுக்கிறது. ஆனால், இதில் உள்ள DEF (Diesel Exhaust Fluid) சிலருக்குப் பிரச்னை தருவதாகச் சொல்கிறார்கள். பராமரிப்பு குறைவாக வேண்டும் என்றால், பெட்ரோல் இருக்கு. சிட்டிக்குள் இது 9 கிமீ-யும், ஹைவேஸில் 13-14 கிமீ-யும் தருகிறது. 2000rpm-ல் 120 கிமீ-யை ஈஸியாக க்ரூஸ் செய்யும் எக்ஸ்யூவி 700. டயர் சத்தம் கொஞ்சம் எரிச்சலைக் கிளப்புகிறது. இதில் பாடி ரோல் பெரிதாகத் தெரியவில்லை. கட் அடித்து ஓட்ட சூப்பர். இதில் உள்ள ACC (Adaptive Cruise Control) நன்றாக வேலை செய்கிறது. ஆனால் முன்னே மெதுவாக நகரும் வாகனங்கள் இருந்தால், ஹார்டு பிரேக்கிங் அடிப்பது, ஓட்டுதலை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. லேட்டஸ்ட்டாக இந்த மெர்சிடீஸ் பென்ஸ் ஸ்டைலில் உள்ள 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் லேஅவுட் கொண்ட Adrenox Suite கனெக்டட் தொழில்நுட்பத்தில், 13 புதிய வசதிகள் சேர்த்திருக்கிறார்கள். சர்வீஸ் ரிமைண்டர், லோ பேட்டரி வார்னிங், பிரேக் பேடுகள் தேய்ந்திருந்தால் அலெர்ட் செய்வது, மற்ற மால்பஃங்ஷன் அலெர்ட்கள் போன்றவை இதில் அடக்கம். XUV 500-யைவிட 50மிமீ வீல்பேஸ் அதிகம் என்றாலும், 3-வது வரிசையில் இன்னும் இடவசதி இருந்திருக்கலாம்; ஹெட்ரூமும் கொஞ்சம் கிடைத்திருக்கலாம். சன்ரூஃபின் தடிமனான ஃப்ரேம், கொஞ்சம் ஹெட்ரூமைக் காலி செய்துவிடுகிறது. அந்த 3-வது வரிசை ரெக்லைனிங் சிஸ்டத்தை, சீட்டின் பின்பக்கம் வைத்திருப்பதற்குப் பதில் மேலே வைத்திருந்தால் ஈஸியாக இருந்திருக்கும். அட, ஆல்வீல் டிரைவ் மாடலிலும் கிடைக்கும் எக்ஸ்யூவி 700, ஒரு வெல்பேக்டு 7 சீட்டர். 

Tata Safari

டாடா சஃபாரி

ஆன்ரோடு விலை: ரூ.19.32 - 33.9 லட்சம்

இன்ஜின்: டீசல்

பவர்: 167.2bhp 

டார்க்: 350Nm 

கியர்பாக்ஸ்: 6 MT/ 6 AT

கிரவுண்ட் கிளியரன்ஸ்: 205 மிமீ

பூட்ஸ்பேஸ்: 420 லிட்டர்


ப்ளஸ்: பீரங்கி போன்ற கட்டுமானம், லேண்ட்ரோவர் ப்ளாட்ஃபார்ம், பின் சீட்டிலும் வென்டிலேட்டட் வசதி, செமையான ரோடு பிரசன்ஸ், 3-வது வரிசை சீட் பேருக்கு இல்லை, ஃபியட் இன்ஜின், நல்ல சொகுசு மற்றும் இடவசதி

மைனஸ்: பெட்ரோல் இன்ஜின் ரிஃபைன்மென்ட் மற்றும் மைலேஜ், கால் வலிக்கும் கிளட்ச் பயன்பாடு, சாஃப்ட்வேர் கோளாறுகள், விலை

டாடா இப்போது எல்லாவற்றிலும் டாப். 29 வேரியன்ட்களில் கிடைக்கும் சஃபாரி, இந்த லிஸ்ட்டில் முதல் இடம் கிடைப்பதற்கு 3 காரணங்களைப் பட்டியலிடுகிறேன். 2-வது வரிசை சீட்டில் எம்ஜி அளவுக்குக் கிடைக்கும் தாராள லெக்ரூம், எந்தக் கார்களிலும் இல்லாத 2-வது வரிசை சீட்டுக்கு வென்டிலேட்டட் வசதி (அல்கஸாரையும் வரவேற்கிறோம்), கிண்ணென்ற லேண்ட்ரோவர் D8 ப்ளாட்ஃபார்ம் கட்டுமானம் (பழைய சஃபாரியில் லேடர் ஃப்ரேம் கட்டுமானம்)  இவை போதாதா - ஒரு செமத்தியான 7 சீட்டர் காருக்கு. இதில் உள்ள 2.0 லிட்டர் Kryotech ஃபியட் 170bhp இன்ஜின் பற்றி ஓட்டுதல் பிரியர்களைக் கேட்டால் தெரியும். ஆனால், பெட்ரோல் இன்ஜின் சஃபாரியை எடுப்பவர்கள் கலந்தாலோசியுங்கள். இதன் ரிஃபைன்மென்ட் சுமார் ரகம்தான். 50 லட்ச ரூபாய் ஃபார்ச்சூனரின் ரோடு பிரசன்ஸ், இந்த 30 லட்ச ரூபாய் சஃபாரியில் கிடைப்பதே இதன் 5 ஸ்டார் ரேட்டிங் கட்டுமானத்தைச் சொல்கிறது. (தீபாவளிக்கு ரூ.1.80 லட்சம் வரை டிஸ்கவுன்ட் வேறு கிடைக்கிறது சஃபாரிக்கு!) என்ன, 19 இன்ச் வீல்கள் இருந்தாலும், குறைந்த வேகங்களில் ஏற்படும் தாக்கம் கேபினுக்குள் கடத்தப்படுகிறது. மேலும் ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஏரியாவில் இன்னும் உச்சம் தொட வேண்டும். சில சாஃப்ட்வேர் கோளாறுகளும் ஏற்படுவதும் உண்மைதான். அட, மேனுவல் கியர்பாக்ஸின் கிளட்ச் ஜிம்மில் Squat ஒர்க்அவுட் செய்வதுபோல் இருக்கிறது எனக்கு மட்டும்தானா தெரியவில்லை. ஆனால், இதன் 3-வது வரிசை பேருக்கு இல்லை; மொத்த ஊரையும் இந்த பீரங்கியில் கூட்டிக் கொண்டு நம்பிக்கையாகப் போகலாம். அதுதான் டாடா!

Porsche: தமனுக்கு பாலகிருஷ்ணா கொடுத்த 2 கோடி ரூபாய் கார்; இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?

தமிழில் மட்டுமல்ல; தெலுங்கிலும் இப்படித்தான் சந்தோஷத்தைக் கொண்டாடுகிறார்கள் நடிகர்கள், தயாரிப்பாளர்கள். லேட்டஸ்ட்டாக வெளிவந்து, 5 நாட்களில் 115 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்த ‛டாக்கு மஹா... மேலும் பார்க்க

Kia Syros: `சின்ன கார் மாஸா இருக்குயா' பென்ஸ் காரில் இருக்கும் பல வசதிகள் இந்தக் குட்டி காரில்!

லேட்டஸ்ட்டாக டெல்லி வரை ஒரு விசிட் அடித்து வந்தேன், மோட்டார் விகடன் டீமுடன். கியாவில் இருந்து சிரோஸ் (Kia Syros) என்றொரு குட்டி காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒன்று டிரைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.... மேலும் பார்க்க