செய்திகள் :

Bihar Election: நிதிஷ் தக்க வைப்பாரா? தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பாரா? பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

post image

முடித்த காங்கிரஸ் ஆதிக்கம்.. தொடங்கிய லாலுவின் எழுச்சி!

பீகார் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத் தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது முதல் 1990 வரை காங்கிரஸ் கட்சியே அந்த மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

1967-ல் காங்கிரஸ் தலைமையிலும், எம்.எல்.ஏ-க்களும் ஆதிக்க சாதியினரே அதிகம் இருப்பதாகவும், மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கோரிக்கைகளை காங்கிரஸ் பூர்த்தி செய்யவில்லை எனச் சர்ச்சை வெடித்தது.

இதை ஜனதா தளம் கட்சியிலிருந்த லாலு பிரசாத் யாதவ் மிகவும் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதாவது பீகாரில் அதிக மக்கள்தொகை கொண்ட மற்றும் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் யாதவ் சமூகத்தின் தலைவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆதிக்க சாதியினர் தலைமையிலான அரசியல் கட்டமைப்பிற்கு எதிரான அவரது பேச்சால், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஹீரோவாகத் தெரிந்தார். அவர்கள் 1990ல் லாலுவை பீகார் முதல்வராக்கினர்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

மண்டல் அரசியல் மற்றும் 'முஸ்லிம்-யாதவ்' கூட்டணியின் உருவாக்கம்!

முன்னதாக 1989ல் பாகல்பூரில் நடந்த வகுப்புவாத கலவரங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களும் காங்கிரஸ் மீது நம்பிக்கை இழந்தனர். லாலு முதல்வராக இருந்தபோது பா.ஜ.க தலைவர் அத்வானி பீகாரில் ரத யாத்திரை நடத்தினார். அவரைக் கைது செய்ததன் மூலம் மாநிலத்தின் முஸ்லிம்கள் (சுமார் 16%) ஒட்டுமொத்தமாக லாலுவுக்கு ஆதரவளித்தனர்.

இந்த முஸ்லிம்-யாதவ் கூட்டணி, பீகாரில் சுமார் 30% வாக்குகள் கொண்ட ஒரு வலுவான வாக்கு வங்கியை லாலுவுக்கு வழங்கியது. இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஜனதா தளம் பெரும் வெற்றியைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சமூக நீதியை மையப்படுத்திய "மண்டல் அரசியல்" சகாப்தத்தை பீகாரில் தொடங்கியது.

கிராமப்புற மக்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் அவரது நகைச்சுவை மற்றும் இயல்பான பேச்சுத் திறன், அவரை சாதாரண மக்களின் தலைவராக மாற்றியது.

'காலை வாரிய கால்நடை தீவன ஊழல் வழக்குகள்.. முடிந்துபோன லாலுவின் நேரடி அரசியல்!'

அவர் பதவியில் இருந்தபோது, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரை அரசியல் பதவிகளில் அமர்த்தி அதிகாரப் பகிர்வுக்கு வழிவகுத்தார். இது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவருக்கு நீடித்த செல்வாக்கை ஏற்படுத்தியது. இதனால் அசைக்க முடியாத சக்தியாக லாலு மாறினார்.

இதையடுத்து இரண்டாவது முறையாக 1995ல் மீண்டும் முதல்வரானார். இந்தக் காலகட்டத்தில் பீகார் அரசியல் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதற்கு எதிரான கட்சிகள் என இரு துருவங்களாகப் பிரிந்தது. இந்தச் சூழலில்தான் கால்நடை தீவன ஊழல் வழக்குகள் லாலுவின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தின.

அவர் பீகார் முதல்வராக இருந்தபோது (1990-1997) நடந்ததாகக் கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வழக்குகளால் 1997-ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிறகு தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக நியமித்து, கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றார்.

தேர்தல்
தேர்தல்

இருப்பினும் ஊழல் வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என சி.பி.ஐ நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பதவியை இழப்பதுடன், தண்டனைக் காலம் மற்றும் அதன்பிறகு ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்தத் தீர்ப்புகளால் லாலுவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்தார். இது அவரது நேரடி அரசியல் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மறுபுறம் லாலு மற்றும் ராப்ரி தேவி ஆட்சிக் காலத்தில் பீகாரில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்ததாகவும், கடத்தல், ஊழல் மற்றும் நில அபகரிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்ததாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நிதீஷ் குமாரின் உதயம் மற்றும் கூட்டணி மாற்றங்கள்!

இந்தக் காலப்பகுதி எதிர்க்கட்சிகளால் 'ஜங்கிள் ராஜ்' (காட்டு ஆட்சி) என்று விமர்சிக்கப்பட்டது. இதனால் நகர்ப்புற மற்றும் நடுத்தர வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவு குறையத் தொடங்கியது. அதுவரை லாலுவுடன் பயணித்துவந்த நிதீஷ் குமார் ஜனதா தளத்திலிருந்து விலகினார்.

1994ல், ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் நிதீஷ் குமார் இணைந்து சமதா கட்சியைத் தொடங்கினார். பிறகு சரத் யாதவ்வின் ஜனதா தளத்தின் ஒரு பிரிவு சமதா கட்சியுடன் இணைக்கப்பட்டு, ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சியை 2003ல் தொடங்கினார். பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து 2005ம் ஆண்டில் பீகார் முதலமைச்சரானார் நிதீஷ்.

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

லாலுவின் வாக்கு வங்கியாக இருந்த ஓ.பி.சி-களிலிருந்து அதி-பிற்படுத்தப்பட்டோர் (Extremely Backward Castes - EBCs), மகா-தலித் பிரிவினருக்காகத் தனிக் கவனம் செலுத்தி, அவர்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்தார்.

இது லாலுவின் 'முஸ்லிம்-யாதவ்' கூட்டணியின் ஆதிக்கத்தை உடைத்தது. அப்போது முதல் நிதீஷ்தான் முதல்வராக இருக்கிறார். அதேநேரத்தில் பீகார் அரசியலும் லாலு, நிதீஷ் இன்றி இல்லை. சூழ்நிலைக்கேற்ப இருவரும் பலமுறை கூட்டணி அமைத்துள்ளனர், பிரிந்துள்ளனர். 2015ல் மகாகத்பந்தன் என்ற பெயரில் லாலுவின் RJD, நிதீஷின் JD(U) மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

2017ல் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீது புதிதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, நிதீஷ் குமார் கூட்டணியை முறித்துக்கொண்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்தார். 2022ல் பா.ஜ.க-வின் ஆதிக்கம் அதிகரித்ததன் மீதான அதிருப்தி, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி ஆகியவற்றின் காரணமாக, மீண்டும் RJD-வுடன் நிதீஷ் இணைந்தார்.

அப்போது நிதீஷ், அமித்ஷா இருவரும் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துகொண்டனர். பிறகு பா.ஜ.க-வுக்கு எதிராக இந்தியா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்களில் நிதீஷ் குமாரும் ஒருவராக இருந்தார். பிறகு மீண்டும் என்.டி.ஏ-வில் இணைந்தார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டார்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

தேர்தல் எப்போது?

இப்படியான சூழலில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. அந்த மாநில சட்டமன்றத்தில் மொத்தமாக 243 தொகுதிகள் உள்ளன.

122 இடங்களில் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்க முடியும். பிகார் சட்டமன்றத்தில் தற்போது பா.ஜ.க.வுக்கு 80 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி-க்கு 77, ஜே.டி.(யு)-க்கு 45, காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) 11, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் 1 மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

களத்தில் இருக்கும் கட்சிகள்!

இந்த முறையும் என்.டி.ஏ, மகாகத்பந்தன் இடையேதான் முக்கியப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்.டி.ஏ-வில் ஜே.டி.யு, பி.ஜே.பி., எல்.ஜே.பி. (ஆர்), ஜிதன்ராம் மாஞ்சியின் ஹம் (மதச்சார்பற்ற) மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் உள்ளன. அதே சமயம், மகாகத்பந்தனில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ. (எம்.எல்.), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி.), ஜே.எம்.எம், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை உள்ளன. இதுதவிர பிரசாந்த் கிஷோரின் கட்சி, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் ஜன்சக்தி ஜனதா தளம் ஆகியவையும் களத்தில் இருக்கின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதில் என்.டி.ஏ, மத்திய அரசுடன் இணைந்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது. வன ராஜ்ஜியம் மீண்டும் வராமல் தடுத்தல், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்குச் சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. மறுபக்கம் பீகாரில் நிலவும் அதிக வேலையின்மை விகிதம் மற்றும் அதன் விளைவாக இளைஞர்கள் வேறு மாநிலங்களுக்கு வேலைக்காக இடம்பெயர்வதைத் தடுத்தல், குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 68.7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக வாக்குத் திருட்டு மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டுவதுடன் தனது பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது மகாகத்பந்தன். ஆனால் இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவது நிதீஷுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், "மாநிலத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சி, அடிக்கடி அணி மாறும் நிதிஷின் அரசியல், கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வான் போன்ற தலைவர்கள் அதிக இடங்கள் கேட்பதுடன், முக்கியப் பதவிகளைக் கோருவது, பீகாரில் வேலையின்மை விகிதம் மிக அதிகமாக உள்ளது, இளைஞர்கள் வேலைக்காக மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வது நிதிஷின் நீண்டகால ஆட்சியில் உள்ள பெரிய குறையாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் நிதிஷ் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வடைந்துவிட்டதாகவும், அதனால் நிர்வாகத்தின் மீதான பிடி தளர்ந்துவிட்டதாகவும் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பா.ஜ.க-வுடனான கூட்டணி மற்றும் சில முக்கியச் சட்டத் திருத்தங்களுக்கு அவர் ஆதரவு அளித்ததன் காரணமாக, பாரம்பரியமாக அவருக்கு இருந்த சிறுபான்மையினர் வாக்குகளில் ஒரு பகுதி மகாகத்பந்தன் கூட்டணிக்குத் திரும்பும் அபாயம் உள்ளது.

பிரதமர் மோடி

மாநிலத்தில் கொலை, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சுமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரே தலைவர் இவர் என்பதால், இயல்பாகவே மக்கள் மத்தியில் ஒருவிதமான சோர்வும், ஆட்சிக்கு எதிரான மனநிலையும் நிலவுகிறது.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது. தேஜஸ்வி யாதவ்வின் பிரச்சாரத்துக்கு இளைஞர்களிடத்தில் இருக்கும் வரவேற்பு ஆகியவையால் மீண்டும் அவர் வெற்றிபெறுவது சுலபம் இல்லை.

அதேநேரத்தில் பீகாருக்கு வழங்கப்பட்ட அதிக நிதி, முக்கிய திட்டங்கள், பிரதமர் மோடியின் பிம்பம் போன்றவற்றால் நிதீஷ்தான் மீண்டும் வெற்றிபெறுவார் எனச் சில கருத்துக்கணிப்பு முடிவுகளும் சொல்கின்றன. விரைவில் முடிவு தெரிந்துவிடும்" என்றனர்.

`பாட்டிலுக்கு 10 ரூபாய்’ - எதிர்பார்த்தது எடப்பாடியை; வந்தது செந்தில் பாலாஜி - கோவை ட்விஸ்ட்

கோவை அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கோவை வருகை தர உள்ளார். இதற்காக கோவை திமுக பொறுப்பாளர்கள் மற்றும் ... மேலும் பார்க்க

Karur : 'அண்ணனா நினைச்சுக்கோங்க; நேர்ல வரேன்' - கரூர் குடும்பங்களிடம் வீடியோ காலில் அழுத விஜய்

'கரூர் துயரம்!'கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை உறுதிப்படுத்திக் கொள்ள கரூர் சம்பவத்தில் உயிரிழந்த... மேலும் பார்க்க

கரூர் செல்லும் விஜய்; டிஜிபி-யிடம் அனுமதி கேட்க என்ன காரணம் - அருண்ராஜ் விளக்கம்!

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். குடும்பத்தினரின் இழப்புக்கு ஆறுதல் கூறியதுடன், விஜய் தனிப்பட்ட முறையில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி : 11-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய போலீஸ் ஏட்டு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். இவரது உறவினரான 16 வயதான சிறுவன் நாசரேத் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப... மேலும் பார்க்க

Seeman: "இனி அவதூறாகப் பேச மாட்டேன்" - நடிகை வழக்கில் மன்னிப்பு கேட்ட சீமான்

நடிகை குறித்து அவதூறாகப் பேசியதற்காக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருக்கிறார்.சீமான் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக... மேலும் பார்க்க

சபரிமலை: தங்க கவசத்தை செம்பு கவசம் எனப் பதிந்த அதிகாரி; சஸ்பெண்ட் செய்த தேவசம்போர்டு; என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கருவறை முன்புள்ள துவார பாலகர்கள் சிலைகளின் தங்க கவசங்கள் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விலை மதிப்புமிக்க பொருட்களை கோய... மேலும் பார்க்க