Book Fair: "தமிழ் அகராதி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கணும்" - மகுடேசுவரன் பரிந்துரைக்கும் நூல்கள் என்ன?
சென்னையில் கடந்த வாரம் தொடங்கி இம்மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும் 48வது புத்தகக் கண்காட்சியில் பல்வேறு அரங்குகளில் பல்வேறு பதிப்பகத்தார்களின் படைப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல் வாசகர்களும் தினமும் பெருமளவில் குவிந்து வருகிறார்கள். கதை, கவிதை, அறிவியல், நாவல், சிறுவர் இலக்கியங்கள், பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பல்வேறு மொழி புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அந்த வகையில் புத்தகக் குவியலுக்கு இடையில் இருந்த கவிஞர் மகுடேசுவரனிடம் பேசினோம். "ஆண்டுக்கு ஆண்டு புத்தகக் கண்காட்சியின் மீது ஏற்படும் ஈர்ப்பு வாசகர்களுக்குக் கொஞ்சமும் குறையவில்லை. விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லாமல் இது போன்ற கண்காட்சிக்கு வரும் வாசகர்களைப் பார்க்கும்போது எழுத்தாளர்களுக்கு மேலும் உற்சாகம் பிறக்கிறது" என்றவரிடம், இந்த ஆண்டு கண்காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன என்று கேட்டோம்.
"இப்போ இல்லை எப்போவுமே நான் சொல்ற முதல் புத்தகம் தமிழ் அகராதி 'அகர முதலி'. ஏனென்றால் இன்னிக்கு ஆங்கில அகராதி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். ஆனால் தமிழ் அகராதி இருக்கும் வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆதலால் தமிழ் அகராதி அவசியம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும். தமிழ் சொற்களைப் பயன்படுத்தவும், கற்பிக்கவும் உதவும் வகையில் நான் எழுதிய 'தமிழ் அறிவோம்' என்ற புத்தகம் பதினைந்து பாகங்களாகக் கிடைக்கின்றன. இதை அவசியம் அனைவரும் படிக்க வேண்டும். கடந்த ஆண்டு நன்னூல் முழுவதும் படித்தேன். அதோடு என்னுடைய சொந்த காரணங்களுக்காக 'நடந்தாய் வாழி காவேரி' என்ற நூலை படித்தேன்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...