BSNL: இனி மொபைலில் சிம் கார்டே இல்லாமல் பேசலாம்... முதல் கட்ட சோதனையில் பிஎஸ்என்எல் வெற்றி..!
சிம் கார்டே இல்லாமல் போன் பேசும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட் (Viasat) உடன் இணைந்து, BSNL நிறுவனம் தனது டைரக்ட் டு டிவைஸ் தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
டைரக்ட் டு டிவைஸ் (Direct to Device) தொழில்நுட்பம் என்பது எந்தவித கேபிள் இணைப்புகள் மற்றும் மொபைல் டவர்கள் இல்லாமல் சாதனங்களை நேரடியாக செயற்கைக்கோள் உடன் இணைக்க பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் நெட்வொர்க்கே கிடைக்காத அடர்ந்த வனப்பகுதியிலும், கடல் போன்ற பகுதிகளிலும் இருந்து கொண்டு நேரடியாக செயற்கைக்கோள் மூலம் நெட்வொர்க் பெற முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அதிவேக இணையதளத்தையும் நெட்வொர்க் சேவையையும் பெற முடியும் என்பது கூடுதல் அம்சமாகும்.
சாட்டிலைட் போன்களை போலவே, இந்தப் புதிய தொழில்நுட்பம் ஐஒஎஸ் (IOS) மற்றும் ஆண்ட்ராய்டால் இயங்கும் செல்போன்களில் இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட் வாட்ச்களையும் இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் Viasat நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து நடத்திய டைரக்ட் டு டிவைஸ் சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், வரும் காலங்களில் இந்தியா முழுமைக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
நமது நாட்டில் பிஎஸ்என்எல் மட்டுமல்லாமல் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகியவையும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக சாதனங்களுக்கு நெட்வொர்க் வழங்கும் தொழில்நுட்பத்தை வருங்காலத்தில் கொண்டு வர உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.