Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" - காங்கிரஸ் கேள்வி!
பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம்.
பழைய திட்டங்களின் நிலை என்ன?
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், "பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்த ஆட்சிக்காலத்துக்குப் பிறகே, 2029ல் நிறைவேற்றப்படலாம்.
நாம் பழைய திட்டங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பெரிதாக தெரியலாம், ஆனால் இதேபோல பெரிதாக முந்தைய பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாகின?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதான் வளர்ச்சியா?
மேலும் காங்கிரஸ் கட்சி,
``பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி, 2.60 விழுக்காட்டிலிருந்து 2.53 விழுக்காடாக குறைக்கப்பட்டிருக்கிறது.
போக்குவரத்துக்கான நிதி ஒதுக்கீடு 11.28 விழுக்காட்டில் இருந்து 10.83 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு 5.51 விழுக்காட்டிலிருந்து 5.26 விழுக்காடாக குறைக்கப்பட்டது.
தகவல் தொடர்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு 2.41 விழுக்காட்டிலிருந்து 1.88 விழுக்காடாக குறைக்கப்பட்டிருக்கிறது... இதுதான் வளர்ச்சியா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.
வரி கட்டுபவர்களுக்கு மட்டுமே சுமை குறைந்திருக்கிறது...
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் நாட்டின் பொருளாதாரம் 4 நெருக்கடிகளில் சிக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
1. உண்மை ஊதியங்களில் மந்தநிலை
2. வெகுஜன நுகர்வில் எதிர்விசை இல்லாமை
3. தனியார் முதலீட்டு விகிதங்களின் மந்தநிலை
4. சிக்கலான ஜி.எஸ்.டி அமைப்பு
"பட்ஜெட் இந்த பொருளாதார பிணிகளை சிறிதும் குறிப்பிடவில்லை.
வரி கட்டுபவர்களுக்கு மட்டுமே சுமை குறைந்திருக்கிறது. இது பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.
காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, "இது பீகார் அரசின் பட்ஜெட்டா? இந்திய அரசின் பட்ஜெட்டா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.