அதிரடிகளால் உலகையே அச்சுறுத்தும் ட்ரம்ப்... என்ன செய்ய வேண்டும் இந்திய அரசு?!
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற நொடியிலேயே, உலக நாடுகளை அதிரடியாகத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் டொனால்டு ட்ரம்ப்.
‘நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசரநிலை, பிறப்பின் அடிப்படையில் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கத் தடை, அகதிகள் மறுகுடியமர்த்தல் நிறுத்திவைப்பு, சீனாவின் டிக்டாக் செயலிக்குத் தடை நீக்கம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுதல், டாலருக்கு எதிராகச் செயல்படும் நாடுகளின் பொருள்களுக்கு 100% வரி, ஆண், பெண் இரு பாலினத்துக்கு மட்டுமே அங்கீகாரம்’ என்பன உள்ளிட்ட பல அதிரடிகளை ட்ரம்ப் செய்திருக்கிறார்.
இதன்மூலம், உலக அளவில் பெரும் கலவர மேகங்கள் படர்ந்திருக்கும் சூழலில், உலக அரசியலை உற்றுநோக்கும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், தொழிற்துறையினர், பொருளதாரத் துறையினர் எனப் பலரும் ட்ரம்ப்பின் அதிரடிகள் குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
“2017-ல் ட்ரம்ப் பேசியதற்கும் இப்போது பேசுவதற்குமே நிறைய வித்தியாசங் களைப் பார்க்க முடிகிறது. 2017-ல் கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராகப் பேசியவர், இப்போது ஆதரவாகப் பேசுகிறார். சீனாவுக்கு எதிராக அவரது பல நடவடிக்கை கள் இருந்தாலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராகவும் தீவிரமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். டாலருக்கு எதிரான கரன்சி என்ற நிலைப்பாட்டை எடுக்கும் எந்த ஒரு நாட்டுக்கும் அமெரிக்கா 100% வரி விதிக்கும் என்று கூறியிருக்கிறார். ஆயிரம்தான் பேசினாலும், அமெரிக்காவின் தேவைகளை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கொஞ்சம் யோசிக்கவே செய்வார்.
இது ஒருபுறமிருக்க... அமெரிக்கா சார்ந்த விவகாரங்களை அதிக எச்சரிக்கை யுடன்தான் இந்தியா கையாள வேண்டியிருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, மென் பொருள் துறை, இந்தியர்களுக்கான குடியுரிமை எனப் பல விஷயங்களையும் கருத்தில்கொண்டுதான் நாம் செயல்பட வேண்டும். டாலருக்கு எதிராக என்றில்லா மல், பொதுவாகவே ரூபாயின் மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்துவதே எப்போதுமே சரியான ஒன்றாக இருக்கும்’’ என்கிறார், பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன். பெரும்பாலான அரசியல், பொருளாதார வல்லுநர்களின் கருத்தும் இதுவாகவே இருக்கிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘ட்ரம்ப்பின் நிர்வாகம் இந்தியாவுடன் இணக்கமாகவே இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அதேசமயம், ‘சீனாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவோம்’ என்று ட்ரம்ப்புக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். பிற நாடுகளின் எதிர்வினைகளும் தொடர்ந்து வெளிவரக்கூடும்.
எது நடந்தாலும் நம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
- ஆசிரியர்