Chennai : தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?
சென்னையின் கடற்கரைப் பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர் தொடங்கி நெம்மிலி குப்பம், ஈச்சம்பாக்கம் எனத் தொடர்ந்து ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கின்றன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக TREE அறக்கட்டளையின் நிறுவனர் சுப்ரஜா தாரணியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``ஆமைகள் கடலுக்கு மிக முக்கியமான உற்பத்திக்காரணி. கடலில் இருக்கும் பாசைகளை உண்டு, அது அந்த இடத்தை சுத்தம் செய்துவிடும். அதனால், மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். மீன் குஞ்சுகளை உண்ணும் ஜெல்லி மீன்களை ஆமைகள் உண்ணும். அதனால் மீன் வளர்ச்சியும், உற்பத்தி அதிகரிக்கும். மண்ணில் இருக்கும் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும்.
1000 ஆமைகளில்...
ஆனால், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பது தொடர்கதையாகதான் இருக்கிறது. இந்த வருடம் எண்ணிக்கை சற்றுக் கூடுதலாக இருக்கிறது. அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலின் முதல் அட்டவணையில், கடல் ஆமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும், கடலில் எத்தனையாயிரம் தொலைவுக்கு நீந்தித் திரிந்தாலும், எந்த இடத்தில் பிறந்து தவழ்ந்ததோ, முட்டையிடும்போது அந்த இடத்துக்கு வந்துவிடும். டிசம்பர் முதல் ஜூன் வரை சென்னை, ஆந்திரா, ஒடிசா கடற்கரைகளில் பல ஆயிரம் ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். ஆயிரம் குஞ்சுகள் பிறந்தால் அதில் முட்டையிடும் பருவத்துக்கு ஒரே ஒரு ஆமைதான் வரும். மீதமுள்ள 999 ஆமைகள், வலைகளில் சிக்கியோ, சுறாவுக்கு இரையாகியோ இறந்துவிடும்.
முட்டையிடும் பருவம்
முட்டையிடும் பருவம் வந்ததும் அது முட்டையிடும் கடற்கரைப் பகுதியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வந்து தங்கிவிடும். இரவு நேரத்தில் கரைக்கு வந்து, 65 முதல் 160 முட்டைகள் வரை இடும். 15 நாள் இடைவெளியில ரெண்டுமுறை வந்து இந்த முட்டைகளை இட்டு கடலுக்குள் சென்றுவிடும். ஆமைகள் 40 - 45 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல்பகுதிக்கு வந்து சுவாசிக்கும். அந்த நேரங்களில் மீன்பிடி விசைப்படகுகள் மோதியோ, வலையில் சிக்கியோ ஆமைகள் இறந்துபோகின்றன. அதன்காரணமாகவே, ஆமைகள் மேலே வந்து சுவாசிக்க முடியாமலும் இறக்கின்றன.
ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம்
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி 8 கடல் மைல்களுக்குப் பிறகுதான் விசைப்படகுகள் கில்நெட்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும். ஆனால், மழைக்காலம் முடிந்தவுடன் கடலின் சில மைல்களிலேயே இறால் போன்றவைகள் அதிகம் கிடைக்கும் என கில்நெட்களைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் ஆமைகள் இதில் சிக்கி இறக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. உலகிலேயே மூன்று இடங்களில்தான் லட்சக்கணக்கான ஆமைகள் வந்து முட்டையிட்டுச் செல்லும். அதில் ஒடிஷாவில் இருக்கும் ரிஷிகுல்யா, கஹிர்மதா எனும் இரண்டு கடற்கரைகள் மிக முக்கியமானவை. இந்த இடங்களில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் முட்டியிடும் ஆமைகள், உணவுத்தேடி நம்முடைய மன்னார்வளைகுடா பகுதிக்கு வரும். இங்கிருந்து அக்டோபர் - நவம்பர் மாதங்களில் வட தமிழகம் வழியாக ஒடிசாவுக்கு நீந்திச் செல்லும். இதுதான் அந்த ஆமைகளுக்கு மிக முக்கியமான வழித்தடம்.
இந்த சமயங்களில்தான் அதிகமான ஆமைகள் படகுகளிலும், வலைகளிலும் சிக்கி இறக்கின்றன. காசிமேடு தொடங்கி, மெரினா, பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்க எனக் கோவளம் வரை இறந்து கரை ஒதுங்குகின்றன. தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி நீலாங்கரைக் முதல் கோவளம் வரை 168 ஆமைகள் இறந்திருக்கின்றன. செம்மஞ்சேரி முதல் ஆலம்பரை வரை இருக்கும் பகுதிகளில் 123 ஆமைகள் இறந்தநிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்கும் விதமாக கடந்த 8-ம் தேதியே அரசுத் துறைகளுக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மீனவர்கள், கடலோரக் காவல்படை, வனக்காவலர்கள், கடலோரக் காவல் குழுமம் ஆகியோரை அழைத்து, சீசன் தொடங்குகிறது என்பதைக் குறிப்பிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தினோம். ஆனாலும், ஆமைகளின் இறப்பு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசு இதில் தலையிட்டாலே தவிர, தீர்வு கிடைக்காது. ஒடிசாவில் இந்த சீசனில் கில்நெட் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடதக்கது." எனத் தெரிவித்திருக்கிறார்..