செய்திகள் :

`Cocomelon’ முதல் `Free Fire’ வரை... நம் குழந்தைகளுக்கு நல்லதை கொடுக்கிறோமா? - ஓர் அலசல்

post image

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அல்லது வீடியோக்கள் என்றதும் நம் கற்பனையில் தோன்றுவது எக்கச்சக்க வண்ணங்கள், எளிமையான பாடல்கள், எண்ணமுடியாத கற்பனைகள், நேரடியான பேச்சுகள்... போன்றவைதான்.

கிட்டத்தட்ட இதே விஷயங்களை அனைத்திலும் காணாலாம். ஆனால் இந்த அம்சங்களைக் கொண்டிருப்பதாலேயே அது குழந்தைகள் பார்ப்பதற்கு தகுதியான கன்டென்டாக மாறிவிடாது.

இன்று பெரியவர்களுக்காக வெளியாகும் திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். எல்லாமும் ரிவியூ செய்யப்படுகின்றன. மோசமான படங்கள் விமர்சிக்கப்படுகிறது. அரசியல் சரித்தவறுகள் ஆராயப்படுகின்றன. ஆனால் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சமூகத்தில் எப்போதாவது பெரிய விவாதங்கள் எழுந்திருக்கின்றனவா?

Children
Children

'குழந்தைகளுக்கானவை' என்பதன் அர்த்தம் என்ன?

குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள் என பலரும் கவலைகொள்ளாததற்கு காரணம், அதிலிருந்து அவர்களுக்கு என்ன கடத்தப்படக் கூடும் என்பது குறித்த அறியாமைதான்.

குழந்தைகள் பொழுதுபோக்கு இப்போதெல்லாம் தொலைக்காட்சியை விட மொபைல் ஃபோனையே அதிகம் நம்பியிருக்கிறது.

எந்த பொது இடத்திலும் 1 வயது குழந்தைக்குக் கூட மொபைல் காட்டுவதைப் பார்க்கலாம். மொபைலில் யூடியூப் வீடியோக்களைப் காட்டினால்தான் உணவருந்தும் என்ற நிலையில் குழந்தைகளைப் பார்க்கிறோம்.

வீடியோக்கள் அல்லது நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கானவை எனக் குறிப்பிட்டால், அவை பொழுதுபோக்கைக் கடந்து சில அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? குழந்தைகளைத் திரையோடு கட்டிப்போடுவது மட்டுமல்லாமல், அவை கொஞ்சமேனும் பொறுப்புணர்வோடு உருவாக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

நீதி போதனைகள் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலாவது நன்னெறி சொல்லித்தரப்பட வேண்டும். குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்ப்பதாக, கற்பனையைத் தூண்டுவதாக, படைப்பாற்றலை ஊக்குவிப்பதாக, உணர்வுகளை நெறிப்படுத்துவதாக இருக்க வேண்டுமல்லவா?

இப்போது குழந்தைகளால் அதிகம் பார்க்கப்படக் கூடிய வீடியோக்கள் அவர்களை மகிழ்விப்பது கூட இல்லை. மூளையின் ரசாயனங்களைத் தூண்டி கண்கொட்டாமல் பார்க்கவைப்பதில் மட்டுமே கவனம் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இதுதான் 'குழந்தைகளுக்கானது' என்பதன் பொருளா என்ற கேள்வியே இந்த கட்டுரை.

ஆனால் இன்றைய குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என்பது மிகப் பெரிய சந்தையாக உருவாகியுள்ளது. குறிப்பாக யூடியூப் சேனல்கள் குழந்தைகளைவிட பெற்றோர்களின் தேவையை நன்றாக உணர்ந்துள்ளன.

குழந்தைகள் கையில் மொபைலைக் கொடுத்துவிட்டால் அவர்கள், அவர்கள் தொந்தரவு செய்யாமல் 'அமைதியாக' ஒரு மூலையில் அமர்ந்துகொள்ள வேண்டும். மொபைலை வாங்கும்போது இன்னும் கொஞ்சநேரம் பார்ப்பதாக அழ வேண்டும். அவ்வளவுதானே!

இந்த மோசமான நோக்கத்துடன் உருவாக்கப்படும் வீடியோக்களும் நிகழ்ச்சிகளும் குழந்தைகள் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என குழந்தைகள் நல நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

பெற்றோர்களை இந்தவிஷயத்தில் முழுவதுமாக குறைசொல்ல முடியாது. பெரும்பாலான பெற்றோர்கள் அதீத வன்முறையை, கெட்ட வார்த்தைகள், பாலியல்ரீதியான உள்ளடக்கங்கள் இருக்கும் நிகழ்ச்சிகளை, திரைப்படங்களைக் குழந்தைகளுக்கு காட்டாமல் இருக்கின்றனர்.

ஆனால் குழந்தைகள் மனதைப் பாதிக்கும் தீய விஷயங்களைத் தவிர்க்க இவற்றில் மட்டும் கவனத்துடன் இருந்தால்போதாது. நிகழ்ச்சிகளின் சில நுட்பமான பண்புகளைக் காண வேண்டும்.

மூளைக்கு அதிக 'தூண்டல்கள்' - மனதுக்கு அதிக ஆபத்து!

உதாரணமாக இன்று அதிகமான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ள, உலகம் முழுவதுமுள்ள குழந்தைகளால் பார்க்கப்படும் சுசு டிவி, கோகோமெலன், ரோமா அண்ட் டயானா, விளாட் அண்ர் நிக்கி, மிஸ் ரேசல்... உள்ளிட்ட யூடியூப் வீடியோக்களில் இரண்டு பொதுவான பிரச்னைகள் உள்ளன.

முதலாவது அவற்றின் வேகம். தடதடவென ரயில் போல இசை, உணர்ச்சிகள், வண்ணங்களைக் கொட்டிச் செல்லும் வீடியோக்கள் குழந்தைகளின் ஒரு விஷயத்தில் கவனம் குவிக்கும் திறனை பாதிக்கக் கூடும் என்கிறார்கள்.

Children's Show
Children's Show

குறிப்பாக இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் (Pre-Schooler) இருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு தகவல்களை மூளை பெற்று, அதனை செயலாக்கும் செய்யும் வேகத்தை விட அதிக வேகத்தில் இந்த நிகழ்ச்சிகள் செல்லும். இதனால் குழந்தைகள் கவனம் செலுத்தும் திறனும், சுய ஒழுங்கைப் பேணுவதும் பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வுகள் மனதின் 'திட்டமிடுதல், சிக்கல்களைத் தீர்த்தல், தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல்' உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இதனால் மோசமாக பாதிக்கப்படலாம் என்கின்றன.

மேலும் இந்த நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தூண்டுதல்களை வழங்கக் கூடியவை. இப்படி ஓவர் லோடட் தூண்டுதல்களுக்கு (Stimulation) பழக்கப்படும் குழந்தைகள் கவனத்தைக் குவித்து செய்யும் ஒரு செயல்பாட்டில் திருப்தியடைய மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

இதனை எளிமையாக விளக்கினார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி.

"குழந்தைகளுக்கு அம்மா ட்வின்கிள் ட்வின்கிள் சொல்லிக்கொடுக்கும்போது, அம்மாவின் உதட்டசைவை, சைகளை குழந்தைகள் நிதானமாக கவனிக்க முடியும். குழந்தைகள் கொஞ்சம் மெதுவாக புரிந்துகொள்பவராக இருந்தால் அம்மாக்கள் இயல்பாகவே மெதுவாக சொல்லிக்கொடுப்பார்கள். குழந்தைகள் அதற்கு ஏற்றதுபோல பதிலளிக்கும்.

Mother and Daughter
Mother and Daughter

குழந்தையுடன் உரையாட ஏதாவது சொல்லிகொடுக்கத்தான் வேண்டும் என்றில்லை, பெற்றோரோ, தாத்தா - பாட்டியோ காக்கா, கிளிகைப் பற்றி பேசினால் கூட குழந்தைகள் அதற்கு செவி சாய்த்து எதிர்வினையாற்றும். இந்த தொடர்பு இருவழியில் (டயலாக்) நடக்கிறது.

ஆனால் தொலைக்காட்சி முன்னாலோ, கையில் மொபைலைக் கொடுத்தோ வைக்கும்போது அவர்கள் பார்ப்பது மோனோலாக். பல கலர்கள், பின்னணி இசை, உதட்டசைவில் ஒன்றாத வசனங்கள், ஜிங்கிள்களை ஒன்றும் புரியாமல் பார்க்கின்றனர்.

இப்படி அடுத்தடுத்து பார்க்கும்போது நிறுத்தி நிதானித்து புரிந்துகொள்ளும், கவனிக்கும் திறன் வளர்வது தடைபடுகிறது. இதற்காகத்தான் முன்னாள் சொன்ன ட்வின்கிள் ட்வின்கிள் உதாரணம்" என்றார்.

எதிலும் மொபைல், எப்போதும் மொபைல்... எங்கு கொண்டு நிறுத்தும் தெரியுமா?

குழந்தை வளர்ச்சியில் இரண்டு நிலைகள் உள்ளன. முதலில் தாய் வயிற்றுக்குள்ளே இருக்கும்போது, கரு வளரத்தொடங்கும்போதே (embryo) தாயின் உணர்வுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கத் தொடங்கும்.

14 வாரங்களில் கருவுக்கு காது கேட்கத் தொடங்கும். இப்போதெல்லாம் கரு வளரும்போதே தாயின் மொபைலில் இருந்து வரும் சத்தம் அதன்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது வளர்ச்சிநிலை வெளியில் வந்த முதல் நாளில் இருந்து 3 ஆண்டுகள் வரை. இந்த காலத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சியையும் உளவியல் வளர்ச்சியையும் பிரித்துப் பார்க்க முடியாது.

மருத்துவர் ஜெயந்தினி
இந்த காலத்தில் அம்மாக்களும் மற்றவர்களும் பிஸியாக இருப்பதால் தொலைக்காட்சியைப் போட்டு உட்காரவைத்துவிடுகிறார்கள். டிவியில் மூழ்கிப்போகும் குழந்தைகள் அப்படியே தூங்கிவிட்டால் பெற்றோருக்கு மகிழ்ச்சி.

சாப்பிடும்போதும் டிவியை, மொபைலைக் காட்டும் பழக்கம் இருக்கிறது. இது மிக மோசமானது. குழந்தையிடம் பேசிக்கொண்டே, ஓடி ஆடி, அதையும் இதையும் காண்பித்து, ஊட்டுவது சிரமான காரியம்தான். அதற்கு மிகுந்த பொறுமை வேண்டும். பெற்றோருக்கு அது இருந்தாகவேண்டும்.

ஆனால் பெற்றோரோ அவர்கள் பார்க்கும் எல்லா வேலைகளைப் போலவும் குழந்தைக்கு சோறு ஊட்டுவதை உடனடியாக முடிக்க வேண்டுமென வீடியோக்களைப் போட்டு வைத்துவிடுகிறார்கள். குழந்தை கொஞ்சம் அட்டகாசம் செய்து சாப்பிட்டாலும் சாப்பிடுகிறோம் என்பதை அறிந்தும் என்ன சாப்பிடுகிறோம் என்பதை உணர்ந்தும் சாப்பிட வேண்டியது அவசியம்.

மூன்றாவது எங்கு சென்றாலும் குழந்தை கையில் மொபைலைக் கொடுப்பது. மருத்துவமனையில் கூட அம்மா ஒரு மொபைல், குழந்தை ஒரு மொபைல் என உட்கார்ந்திருக்கின்றனர். குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, மற்றவர்களுடன் பேசுவதே குறைந்துவிட்டது.

வீட்டுக்குள் இருப்பவர்கள் குழந்தைகளுடன் ஆடிப்பாடி இருந்தால்தான் குழந்தைகளால் வெளியில் பேசிப்பழகி இருக்க முடியும். இது இல்லாததால் இப்போது பல குழந்தைகள் ஆட்டிசம் உள்ளதுபோல அறிகுறிகளுடன் காணப்படுகின்றன.

Autism
Autism (File Image)

40 ஆண்டுகள் முன்னர் பத்தாயிரத்தில் ஐந்து அல்லது ஏழு குழந்தைகளுக்குதான் ஆட்டிசம் இருக்கும். ஆனால் இப்போது 39 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆட்டிசத்தை கண்டறிவது அதிகமாகிவிட்டது என்பது ஒரு காரணமாக இருந்தாலும், கோவிட் தொற்றுக்குப் பிறகு குழந்த்கைகள் தொலைக்காட்சி, மொபைல் பார்க்கும் பழக்கம் அதிகமாகிவிட்டதும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு உறுப்புகள் எல்லாமும் வேலை செய்தாலும் தாங்கள் நினைப்பதை பேச (கம்யூனிகேட் செய்ய) முடியாது. இப்படி ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களது சமூக இயக்கம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

என்னிடம் சில குழந்தைகளைக் குறிப்பிட்டு, இவர்கள் மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாலும் இந்த பிரச்னைகள் இல்லாமல் இருக்கிறார்களே எனக் கேட்பார்கள். விதை நன்றாக இருந்தால் பாறையில் கூட வளர்ந்துவிடும். ஆனால் செழிப்பான செடியாக வளர நல்ல மண் வளமும் தேவை.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

நாம் தினமும் ஒரு ஒத்தையடி பாதையில் நடக்கிறோம். ஒரு சிமெண்ட் ரோடும் உள்ளது. நாம் தினமும் ஒத்தையடிப் பாதையைப் பயன்படுத்தினால் மழை பெய்தாலும் ஒத்தையடிப்பாதை அப்படியே இருக்கும்.

ஆனால் பயன்படுத்தாமல் விட்ட சிமெண்ட் ரோடு உடைந்து புற்கள் முளைத்து மோசமாகிவிடும். நம் மூளையும் ஒரு பாதை போலத்தான். அதில் பில்லியன் கணக்கான நியூரான்களும் ட்ரில்லியல் கணக்கான இணைப்புகளும் உள்ளன. எதை எதையெல்லாம் குழந்தைகள் தினமும் பயன்படுத்துகிறார்களோ அதெல்லாம் உறுதியாக நிலைத்திருக்கும்.

Structure of Neural Human Nervous System of the Human Brain
Structure of Neural Human Nervous System of the Human Brain

குழந்தைகளின் காப்பானாக இருங்கள்!

3 வயதுக்குப் பிறகு பள்ளியில் சேர்த்துவிடுகின்றனர். மொபைல் பார்த்து வளர்ந்த குழந்தைகள் அட்ஜஸ்ட் செய்வது, அடாப்ட் ஆவது, விட்டுக்கொடுப்பது, குழுவில் இணைந்திருப்பது, விதிமுறைகளைப் பின்பற்றுவது, அனுசரித்து செல்வது போன்ற பழக்கங்கள் எதுவும் வளராது.

பல குழந்தைகள் மொபைலில் பார்ப்பதைத்தான் உண்மை என நம்புகின்றனர். என்னிடம் குழந்தைகள் வந்து தற்கொலை செய்வது, வீட்டை விட்டு ஓடிப்போகிறேன் என்பது, ஆக்ரோஷமாக நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளின் பண்புகளை வளர்ப்பதில் யதார்த்தை விட மொபைலில் பார்க்கும் விஷயங்கள் பெரிய பங்காற்றத் தொடங்கிவிட்டன. ஆனால் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்பது குறித்த அக்கறையே பெற்றோர்களுக்கு கிடையாது.

இதில் முக்கிய பிரச்னை பெற்றோர்கள் தங்கள் வசதிகாக குழந்தைகளை மொபைல் பார்க்க வைப்பதுதான். இந்த குழந்தைகளிடம் கேட்டால் அப்பா, அம்மா மட்டும் தினமும் மொபைல் பார்க்கிறார்களே எனக் கேள்வி எழுப்பும். மொபைல் கொடுக்கவில்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து வாங்குகிறார்கள்.

இந்த குணத்துக்கும் காரணம் மொபைலில் அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளும் விளையாடும் கேம்களும்தான். 7, 8 வயதில் ஃப்ரீ பயர் விளையாடும் குழந்தைகள் அதில் பார்ப்பது எல்லாமும் வன்முறைதான். இவர்கள் விளையாடவில்லை என்றாலும் இன்னொருவர் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதற்கும் வெளியில் மற்றவர்களுடன் விளையாடுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது?

கேம் டெவலப்பர்கள் பணம் சம்பாதிக்க குழந்தைகளைக் குறிவைத்து இவற்றை உருவாக்குகின்றனர். இவை, கொஞ்சம் ஆக்ரோஷமாக உள்ள குழந்தைகளை மேலும் அதீத ஆக்ரோஷமாக மாற்றும், பயப்படும் குழந்தைகள் ரொம்ப பயப்படுபவர்களாக மாற்றும்.

Children Using Mobile Phone
Children Using Mobile Phone

மொபைலில் நல்ல விஷயங்களைப் பார்க்கும் குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகளின் எல்லா சிக்கல்களுக்கும் மொபைல் தான் காரணம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு குழந்தை நன்றாக பேச, பழக, விளையாட, உடல் வளர்ச்சிக்கும் பண்பு ரீதியாக சமூகத்தில் ஒன்றவும், விட்டுக்கொடுக்கவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளவும் மொபைல் தடையாக உள்ளது.

இதனால் 3 வயது வரை மொபைல், டிவி போன்ற திரைகளையும் காட்டக் கூடாது. அதற்கு பிறகு அவர்கள் என்ன பார்க்கிறார்கள் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் அதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறார்கள் என்பதை நாம் உடனிருந்து அறிந்து அவர்களுக்கு விளக்க வேண்டும்.

முக்கியமாக நாம் குழந்தைகள் முன்னாள் இருந்து மொபைல் பார்த்துவிட்டு, அவர்களைப் பார்க்கக் கூடாது எனக் கூறக்கூடாது. 'கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா' எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த மொபைல், யூடியூப், சமூக வலைத்தளங்கள் எல்லாமும் இருக்கத்தான் செய்யும் குடும்பத்தினர்தான் காப்பானாக இருந்து குழந்தைகளை வழிநடத்த வேண்டும்" என்றார்.

'சென்சார்போர்டு' இருப்பதற்கு காரணம் உள்ளது!

குழந்தைகள் நல மருத்துவர் மாதுரியிடம் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சிகள் குறித்து, "அவற்றில் அளவுக்கு அதிகமான தூண்டுதல்கள் (Stimulation) இருப்பதால் அவை மூளையை பாதிக்கத்தான் செய்யும். கவனம் செலுத்துவதிலும், நிதானமாக இருப்பதிலும் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படலாம்.

இன்று வீட்டிலிருப்பவர்கள் அவர்களது வசதிக்காக குழந்தைகளிடம் மொபைலைக் கொடுப்பது மிகப் பெரிய தவறு. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் மொபைலைக் கொடுக்கலாம்.

3 முதல் 7 வயதிலான பருவம் குழந்தைகளின் வளர்சியில் மிக முக்கியமானது. அப்போது அவர்கள் என்ன பார்க்கிறார்கள், என்ன புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர் உடனிருந்து கவனிக்க வேண்டும்.

நம் வீடுகளில் படமானாலும், நிகழ்ச்சியானாலும் குடும்பாக அமர்ந்து பார்க்கும் பழக்கம் உள்ளது. ஆனால் குழந்தைகளின் வயதுக்கு மீறிய வன்முறை அதில் இல்லை என்பதை நாம் உறுதிபடுத்த வேண்டும். அது கார்டூனாக இருந்தாலும் சரி.

அனிமேட்டடாக இருந்தாலே அது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அல்ல. பென் 10 நிகழ்ச்சி 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தெளிவாக புரிந்துக்கொள்ளக் கூடியது. அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் எதுவும் புரியாமல் அதில் வரும் வன்முறையையே உள்வாங்கிக்கொள்வார்கள்.

நம் ஊரில் 13+,10+, 7+ போன்ற வயது வரம்புகளுக்கு மதிப்பே கிடையாது. வெளிநாடுகளில் இவற்றை சரியாக பின்பற்றுகின்றனர். 7+ வயது வரம்பு உள்ள ஒரு கார்டூனை 3 வயது குழந்தைக்கு காட்டுவது அவர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். சென்சார்போர்ட் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும்பட்சத்தில் 2 வயதில் குழந்தைகளை பிளே ஸ்கூலுக்கு அனுப்பிவிடுவது நல்லது. வீட்டில் தாத்தா பாட்டி இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வு வேண்டும். மாலை நேரத்தில் அருகில் உள்ள பார்க்குகளுக்கு கூட்டிச் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாட வைத்தால் போதும். டிவி பார்ப்பதாக இருந்தாலும் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்." என்றார்.