செய்திகள் :

CP Radhakrishnan: வாஜ்பாயின் சிஷ்யர்; மோடியின் நண்பர்; குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரின் பின்னணி

post image

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சி.பி.ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானவை.

ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவரின் அப்பா நகராட்சியில் கிளர்க்காக பணியாற்றியவர். அம்மா ஆசிரியர். அரசுப் பள்ளியில் படித்தவர். பிபிஏ பட்டதாரி. தன்னுடைய 17வது வயதிலிருந்து ஜனசங்கம் மாணவர் அமைப்பில் ஆர்வமுடன் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயை தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர்.

வாஜ்பாயுடன் சி.பி. ராதாகிருஷ்ணன்

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, சிறிய அளவில் பனியன் கம்பெனியைத் தொடங்கினார். இரவு பகல் பாராமல் உழைக்கும் கடின உழைப்புக்குச் சொந்தக்காரர். தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டார். அந்தக் காலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலும் அதிக ஆர்வத்துடன் இயங்கி வந்தார். ஆர்எஸ்எஸில் திருப்பூர் மாவட்டளவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

அப்போது மோடி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியராக இருந்தார். ராதாகிருஷ்ணனுக்கு மோடியுடன் தொடர்பு ஏற்பட்டது. 1990 களின் தொடக்கத்தில் தமிழ்நாடு பாஜகவில் வலம் வரத்தொடங்கினார். 1996-ம் ஆண்டில் பாஜக மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், சந்திரசேகர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்களான மோடி, அமித்ஷா, வெங்கையா நாயுடு ஆகியோருடனும் நல்ல தொடர்பில் இருந்தார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

1998 நாடாளுமன்றத் தேர்தலில், கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதில் அவர் வெற்றி பெற்றாலும், 13 மாதங்களிலேயே ஆட்சி கலைக்கப்பட்டது.  பிறகு1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், அவர் மீண்டும் கோவை தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார். மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, கோவைக்கு அழைத்துவந்து பொதுக்கூட்டம் நடத்தினார்.

நாட்டிலேயே இதய நோயாளிகளுக்கு எம்பிக்களுக்கான தொகுதி நிதியில் அதிகம் உதவி செய்த எம்பிக்களின் பட்டியலில் ராதாகிருஷ்ணன் அப்போது முதலிடத்தில் இருந்தார். ராஜீவ் காந்தி குடிநீர் திட்டத்துக்காக, தனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை திருப்பூர் மாநகராட்சிக்கு கொடுத்தார். கோவை குண்டு வெடிப்பு காலகட்டத்தில், அகில இந்திய அளவில் கவனம் பெற்றார். 2004-ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

மாற்றுக் கட்சியினரிடமும் நாகரிக அரசியலைக் கடைபிடிப்பவர். 1999-ம் ஆண்டு கோவை தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நல்லகண்ணுவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். நல்லகண்ணுவைத் தோற்கடித்துவிட்டோம் என்று இப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் சான்றிதழுடன் நல்லகண்ணு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

கருணாநிதி, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின் ஆகிய 3 முதலமைச்சர்களுடனும் நல்லுறவு கடைபிடித்தவர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அப்போது, ‘ஸ்டாலின் தன்னுடைய உழைப்பால் எங்களை வீழ்த்திவிட்டார்.’ என்று சி.பி. ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகப் பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதுகூட, நேரடியாக அவரின் வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தவர்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

எந்த இடமாக இருந்தாலும் மனதில் பட்டத்தை பளிச்சென்று பேசுபவர். தனிப்பட்ட ரீதியாக மிகவும் கட்டுக்கோப்பான வாழ்க்கையை கடைபிடிப்பவர். எந்த தீய பழக்கங்களும் இல்லை. எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்.

நெருங்கிய வட்டத்தில் அவரை ‘சிபிஆர்’, ‘ராதா’, ‘ராது’ என்றழைப்பார்கள். சிபிஆர் தனக்கு நெருக்கமானவர்களை கொங்கு வட்டாரத்தின் டிரேட் மார்க்கான ‘கண்ணு’ எனறும் ‘டேய்’ என்றும் செல்லமாக அழைப்பாராம். சிபிஆருக்கு 1 ஆண், 1 பெண் குழந்தை இருக்கிறார்கள். அரசியல், குடும்பம் இரண்டையும் எப்போதும் கலக்க மாட்டாராம். குடும்பத்தினரிடம் அரசியல் பேசுவதோ, அரசியல் நிகழ்ச்சிகளில் குடும்பத்தினரை அழைத்து வருவதையோ அவர் விரும்ப மாட்டாராம்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

அரசியல் வாழ்க்கை என்றால் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததுதானே. ராதாகிருஷ்ணன் அரசியல் வாழ்க்கையிலும் இறக்கங்கள் இருந்தன. 2004, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார். தேர்தலில் தோல்வி ஒருபக்கம், பாஜகவில் அவருக்கு எதிரான உள்கட்சி லாபி ஒன்றாக வேலை செய்தது.

இதனால் நீண்ட காலத்துக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவி மட்டும் இருந்தார். சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணையப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரவின. அப்போது அவருமே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, பிசினஸில் ஆர்வம் காட்டி வந்தார். வாஜ்பாய் காலத்திலேயே மத்திய அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது மோடி காலத்திலும் நிறைவேறாதது அவரின் ஆதரவாளர்களுக்கு வருத்தமுண்டு.

சி.பி. ராதாகிருஷ்ணன்

2016– 19 காலக்கட்டத்தில் மத்திய கயிறு வாரியத் தலைவராக இருந்தார். 2020-ம் ஆண்டு கேரள மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். யாரும் எதிர்பாராத நேரம் கடந்த 2023-ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பணியாற்றினார். தற்போது குடியரசு துணை தலைவர் வேட்பாளராகியுள்ளார்.

நரேந்திர மோடி முதல்முறையாக பிரதமராக ஆட்சியில் அமர்ந்த 2014-ம் ஆண்டு, சிபிஆர் கோவை தொகுதியில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அவருக்கு உறுதுணையாக இருந்து, தமிழகத்துக்கு பெறவேண்டிய திட்டங்களுக்கு குரல் கொடுக்கவேண்டும் என்பது ராதாகிருஷ்ணனின் ஆசையாக இருந்தது. அது நடக்காமல் போனது அவரின் மனதில் நீண்ட காலமாக உறுத்தலாகவே இருந்ததாக தன் நெருங்கிய வட்டாரத்தில் கூறி சிபிஆர் வருத்தப்பட்டுள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணன்

தற்போது மொத்த நாட்டுக்கும் சேவை செய்யும் வாய்ப்பு அவரைத் தேடி வந்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல வரவேண்டும் விரும்பி அவருக்கு அந்தப் பெயரை வைத்ததாகக் குடும்பத்தினர் சொல்வார்கள். அந்த ஆசையும் நிறைவேற போவதில் குடும்பத்தினர் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

`முதல்வரை சந்தித்தது நாங்க இல்ல; திமுகவின் நன்றி நாடகம்’ - கைதான தூய்மைப் பணியாளர்கள் என்ன ஆனார்கள்?

13 நாள்களாக தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்தினை தி.மு.க அரசு கையாண்ட விதமும், அந்தப் பிரச்னையை மறைப்பதற்கு நடத்திய நாடகமும் தி.மு.க அனுதாபிகளைக்கூட முகம்சுழிக்க வைத்திருக்கிறது. இந்தப் பிரச்னைய... மேலும் பார்க்க

தவெக மதுரை மாநாடு: 'உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'- தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடக்க இருக்கிறது. இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டியிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மத... மேலும் பார்க்க

சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 9ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின்நாட... மேலும் பார்க்க

"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்கிரஸ் எதிர்வினை

ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் ஆணையம்.ராகுல் காந்திக்கு கெடு விதித்த ECIஅதில், இன்னும் 7 நாட்களுக்குள் ராகுல்... மேலும் பார்க்க