TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்; சென்னையில் பொதுமக்கள் காண நேரலை ஏற்பாடு!
Dhoni: "எப்போதும் தோனியுடன் இருக்க விரும்புகிறேன்..." - நெகிழும் சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியிலிருக்கும் 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்தும், தோனியுடனான தனது பிணைப்பு குறித்தும் மனம் திறந்திருக்கிறார்.

ஊடகம் ஒன்றுக்குப் பேசிய சஞ்சு சாம்சன், ``ஒருவருக்கு அறிவுரை தருவதற்குப் பதிலாக, ஒரு இளைஞர் எப்படி கிரிக்கெட் விளையாட விரும்புகிறான், அவரின் எதிர்பார்ப்பு என்ன, அவருக்கு எத்தகைய ஆதரவை நான் அளிக்க வேண்டும் போன்றவற்றை முதலில் புரிந்துகொள்ள விரும்புகிறேன். பின்னர், அணிக்கான தேவைகளின் அடிப்படையில் அவரை நான் ஆதரிப்பேன். வைபவ் மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார். மைதானத்துக்கு வெளியேதான் சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார். அவரின் விளையாட்டுத் திறனை மக்கள் ஏற்கனவே பாராட்டி வருகின்றனர். இதற்கு மேல், வேறு என்ன வேண்டும்" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து தோனி குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், ``ஒவ்வொரு இந்திய இளம் கிரிக்கெட் வீரரும் தோனியுடன் இருக்க விரும்புவது போல, நானும் எப்போதும் மஹி பாயுடன் இருக்கவே விரும்பினேன். நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் ஒவ்வொரு முறையும், தோனி எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் என்பது பற்றி அவரிடமே அமர்ந்து பேச விரும்பினேன். அது என்னுடைய கனவு. ஷார்ஜாவில் சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் எங்கள் அணி விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது.
அந்தப் போட்டியில் நான் சிறப்பாக விளையாடி, சுமார் 70 - 80 ரன்கள் அடித்தேன். ஆட்டநாயகன் விருதும் பெற்றேன். அதன் பிறகு, நான் தோனியைச் சந்தித்தேன். அதன்பிறகு எங்கள் இருவரிடையேயான பிணைப்பு வளர்ந்தது. இப்போதும் நான் அவரை அடிக்கடி சந்திப்பேன். நேற்று கூட நான் தோனியைச் சந்தித்தேன். முன்பு அவரைத் தொலைவிலிருந்து பார்த்துவந்த நிலையில், இப்போது நிகழ்ச்சிகள் மற்றும் ஷூட்டிங்கில் அவருடன் அமர்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வைத் தருகிறது. என்னுடைய கனவுகளில் நான் வாழ்வது போல உணர்கிறேன்." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
