Divya Sridhar: `முதல் மனைவியிடம் வளர்ப்புப் பிராணி போல வாழ்ந்தேன்...' - கிறிஸ் வேணுகோபால்
மலையாள டி.வி சீரியல் நடிகர் கிறிஸ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதுடன், நெகட்டிவ் கமென்ட்டுகள் அதிக அளவில் வந்தன.
பத்தரைமாற்று என்ற சினிமாவில் தாத்தா வேடத்தில் நடித்திருந்த கிறிஸ் வேணுகோபாலின் நீண்ட தாடி, மற்றும் முடி இல்லாத தலை உள்ளிட்ட தோற்றத்தை வைத்து நெட்டிசன்கள் கிண்டலாகக் கமென்ட்டுகளை பகிர்ந்தனர். அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், இளம் வயது நடிகையை திருமணம் செய்துகொண்டதாகவும், சில அந்தரங்க விவகாரங்களை முன்வைத்தும் கிண்டல்கள் எல்லைமீறி போயின. இதையடுத்து நடிகை திவ்யா ஸ்ரீதர் தனக்கு 40 வயது ஆவதாகவும், கிறிஸ் வேணுகோபாலுக்கு 49 வயது ஆவதாகவும் தெரிவித்தார். மேலும், செக்ஸ் மட்டுமே வாழ்க்கை அல்ல எனவும் தெரிவித்திருந்தார். ஆனாலும், நெட்டிசன்களின் கமென்ட்டுகள் குறைந்தபாடில்லை. திவ்யா ஸ்ரீதருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில் 2 குழந்தைகள் முன்னிலையில் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அதே சமயம் கிறிஸ் வேணுகோபாலின் முதல் திருமணம் குறித்தும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பகிரப்பட்டன.
கிறிஸ் வேணுகோபாலின் முதல் மனைவி தனது பெயருக்குப் பின்னால் கிறிஸ் வேணுகோபாலின் பெயரையும் சேர்த்து சமூக வலைத்தளங்களில் இயங்குவதாகவும். இன்னும் அந்தப் பெயரை மாற்றவில்லை. ஆனால், முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு கிறிஸ் வேணுகோபால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது முதல் திருமணம் குறித்த தகவல்களை கிறிஸ் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
நடிகர் கிறிஸ் வேணுகோபால் கூறுகையில், "சுதந்திரம் இல்லாத ஒரு திருமணத்தால் நான் மிகவும் சிரமப்பட்டேன். அதிலிருந்து வெளியே வந்து நான்கு ஆண்டுகளுக்குப்பின் இப்போது இரண்டாவதாக திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்துகொண்டேன்.
என் குடும்பத்தாருடன் நான் இருக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் கூடிய திருமண பந்தம்தான் முதலில் இருந்தது. என் அப்பா, அம்மாவை நான் கவனிக்க வேண்டும் என்பதால் அதற்கு நான் சம்மதிக்கவில்லை. வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, வீட்டிலிருந்து வெளியே யாரு. போகக்கூடாது, போனில் பேசக்கூடாது என்பதுபோன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் நான் என்னச் செய்ய முடியும். நான் ஒரு வளர்ப்புப் பிராணி போன்று வாழ்ந்தேன். கண்ணாடிக்கூண்டுக்குள் அடைத்து வளர்க்க நான் என்ன சிலந்தி பூச்சியா? மிகவும் வருத்தப்பட்டு 2018-ல் நான் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட்டேன். 2019-ல் விவகாரத்து வழக்குத்தொடர்ந்தேன், 2022-ல் விவகாரத்து கிடைத்தது. விவகாரத்துக்குப்பின் 9 மாதங்கள் கடந்த பிறகுதான் என் வாழ்கையில் ஒரு துணை வேண்டும் என தீர்மானித்தேன். இதற்கிடையில்தான் சிலர் என்னைப்பற்றி தவறான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்" என்றார்.