செய்திகள் :

DK - NTK: ``திராவிடக் கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சி!'' -இது 1960-களின் கதை! வரலாறு என்ன சொல்கிறது?

post image

``அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும்போது அது மக்களுக்குக் கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது. ஆகவே, வீண் சண்டைகளை, சர்ச்சைகளை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்" என்றார் காமராஜர். உண்மையில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் அப்படித்தான் இருக்கிறது. சமீபமாக பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருணக்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையாகப் பேசி வருகிறார். தமிழ்நாட்டு அரசியலின் முக்கிய முகங்களில் பெரியாரின் தாக்கம் மூலதனமானது.

பெரியார் - அண்ணா

1969-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்த 55 ஆண்டுக் கால திராவிட சித்தாந்த ஆட்சியாளர்கள் அனைவரும், பெரியார் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதே காலகட்டத்தில் திராவிட சித்தாந்தத்துக்கு எதிராகத் தமிழ்த் தேசியம் என்ற கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்புக்கு உருவம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் சி.பா. ஆதித்தனார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று, 'தமிழ்த் தேசியம்' உருவாக வேண்டும் எனத் தீவிரமாக எழுத்துப் பணிகளைத் தொடர்ந்தவர் சி.பா.ஆதித்தனார். தமிழ் உணர்வூட்ட வேண்டும் என இதழியல் தொடந்தவர். அதன் மூலம் இந்திய இதழியல் வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரைப் பதித்தவர். பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சியில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கி, 1957-ம் ஆண்டு 'நாம் தமிழர்' கட்சியைத் தொடங்கியவர்.

சிபா ஆதித்யனார்

திராவிடத்தைக் கடுமையாக விமர்சித்தவர், மக்களைத் 'தமிழர்களாக ஒன்றுதிரட்ட வேண்டும்' என்பதற்காகவே செய்யலாற்றியவர். ஆனால், காலவோட்டம் அவரை திராவிடம் நோக்கித்தான் அழைத்துச் சென்றது.

அது எப்படி, என்ன நடந்தது? என்பதுபற்றி, சி.பா. ஆதித்தனார் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய வாலாசா வல்லவன், ``1939-ல் செங்கல்பட்டில் நடந்த மாநாட்டில் அண்ணாவைச் சந்தித்த சி.பா. ஆதித்தனார், தி.மு.க-வில் சேரவேண்டும் எனக் கூறியிருக்கிறார். அவருடைய ஒரு புத்தகத்துக்கு அண்ணா அணிந்துரைகூட கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு காங்கிரஸில் இணைந்து, மேலவை உறுப்பினராகவும் இருந்தார் சி.பா. ஆதித்தனார்.

1947-ல் பனைக்கு வரிவிதித்தது காங்கிரஸ் அரசு. அது நாடார்களைப் பாதிக்கும் என, காங்கிரஸிலிருந்து விலகினார். 1952-ல் காங்கிரஸுக்கு எதிரான கம்யூனிஸ்ட் கூட்டணியில் 'பிரஜா சோசலிஸ்ட் கட்சி' சார்பில் போட்டியிட்டுத் தேர்தலில் வென்றார். இந்தக் கூட்டணி வெற்றிபெற வேண்டும் எனப் பெரியாரும் வேலை செய்தார். 1957 - 58-ல் 'பிரஜா சோசலிஸ்ட் கட்சி வலிமையாக இல்லை' என அதிலிருந்து விலகி, நாம் தமிழர் கட்சியைத் தொடங்கினார். 1959-60 களில் பெரியாருடன் இணைந்து பயணித்தார். நாம் தமிழர் கட்சியும் - திராவிடர் கழகமும் இணைந்து 6.5.1960-ல் நடத்திய 'தமிழ்நாடு தவிர்த்து இந்திய வரைபட எரிப்பு போராட்டம்' நடத்தியது.

சி.பா ஆதித்யனார் - வாலாசா வல்லவன்

1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பரோலில் வெளியே வந்தவர், சேலத்தில் கலைஞரைச் சந்தித்து, 'இனி என்னால் கட்சியை நடத்த முடியாது...' எனக் கூறி, 1967-ல் கட்சியைக் களைத்துவிட்டு தி.மு.க-வில் ஐக்கியமாகிறார். உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெறுகிறார். அமைச்சர் பதவிக் கேட்ட அவருக்கு, சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு, கலைஞர் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். 1980-களில் சீட் கொடுக்கவில்லை என எம்.ஜி.ஆருடன் இணைந்ததாகவும் கூறுகிறார்கள்." என நமக்கு வேண்டிய தகவல்களைக் கோர்வையாகக் கொடுத்தார்.

தமிழ்தேசியம் வேண்டும் எனத் தீவிரமாக பேசிவந்தவரின் இந்த மனமாற்றத்துக்கு என்னக் காரணம் என்பதை விளக்கிய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரர் தோழர் தியாகு, ``நாம் தமிழர் கட்சியைத் தொடங்கிய சி.பா.ஆதித்தனார் போல தி.மு.க-வை சாடியவர்கள் யாரும் கிடையாது.'கழகம் என்ற சொல்லுக்குத் திருக்குறளின்படி சூதாடும் இடம் என்றுப் பொருள். தி.மு.க சூதாடும் கூடம்' என்றெல்லாம் விமர்சித்தார். 1962 தேர்தலில் அண்ணாவைத் தோற்கடிக்க, காமராஜர் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு 'தமிழ் பேரரசு' அமைக்க வேண்டும் என்ற கருத்து இருந்தது.

தோழர் தியாகு

'நாம் தமிழர்' கட்சியைக் கலைப்பதற்கு முன்பு, பெரியாருடன் போராட்டத்தையெல்லாம் முன்னெடுத்திருக்கிறார். கட்சியைக் கலைத்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்களால் தேர்தலில் வெற்றி பெறமுடியவில்லை. எனவே, 'பெரியார் போன்று தேர்தலில் நிற்பவர்களில், தகுதியானவர்களை ஆதரிக்க வேண்டும். நாம் தேர்தலில் போட்டியிடக் கூடாது' என முடிவு செய்தார். 'நான் காமராஜர், கலைஞர், அண்ணா என யாரையும் நம்பவில்லை. தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் என் நோக்கம். பார்ப்பான், பணக்காரன், படிப்பாளி, அதிகாரி ஒழியவேண்டுமென்றால், டெல்லியின் ஆதிக்கம் ஒழிய வேண்டும்" என்பதெல்லாம்தான் அவருடைய கடைசிக் காலப் பேச்சு என்றார் தோழர் தியாகு.

மேலும் தொடர்து பேசிய தியாகு, "தமிழ் தேசியம் பேசிய மா.பொ.சி-யும் கடைசிக் காலத்தில் தி.மு.க-வுடன்தான் ஐக்கியமானார். சம்பத் 'தமிழ்த் தேசியக் கட்சி' என்ற கட்சியைத் தொடங்கும்போது, பெரியாரும், குன்றக்குடி அடிகளாரும் சென்றுதான் அதைத் தொடங்கி வைத்தார்கள். சம்பத். சி.பா. ஆதித்தனார், மா.பொ.சி என இவர்கள் எல்லோரும், தமிழ்த் தேசியத்துக்கு முக்கிய எதிரியாக இந்தியத் தேசியத்தை முன்வைக்காமல், தி.மு.க-வை எதிரியாக முன்வைத்தார்கள். அதனால்தான் மக்கள் இவர்களை அப்போது காங்கிரஸின் கையாள் எனக் கருதினார்கள். இறுதியில் இவர்கள் எல்லோரும் காங்கிரஸிலும் இணைந்தார்கள்.

சிவ நாடார்

சி.பா.ஆதித்தனார் கடைசிக் காலத்தில் `தமிழ்நாட்டின் பிரச்னை வேறு என்பதை உணர்ந்து, அறிந்துதான் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு தி.மு.க-வில் இணைந்தார். பெரும் வசதிப் படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குப் பிறகு, அவருடைய குடும்பம் இந்தியாவின் பெருமுதலாளிகளில் ஒன்றாக இருக்கிறது. சிவ நாடார் இந்தியாவின் மூன்றாவது பெரும் பணக்காரர். ஆர்.எஸ்.எஸ்-க்கு மிக நெருக்கமானவர். மோடிக்கு அதானிப் போல, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பெரும் பின்புலம் சிவ நாடார்தான்.

இவர்கள் சார்பில்தான் சீமான் வேலை செய்துவருகிறார். வெளிநாட்டுத் தமிழர்கள் கொடுப்பது ஒருபக்கம் என்றாலும், இவர்களின் பங்களிப்புதான் பெரியது. சீமான் ஆர்.எஸ்.எஸின் நீண்டகாலத் திட்டம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டில் பெரியார் கருத்தைச் சிதைக்கப் பொருத்தமான ஆளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களால், தேர்வு செய்யப்பட்டவர்தான் சீமான். குருமூர்த்தி பரிந்துரையில்தான் 'நாம் தமிழர்' என்ற கட்சியின் பெயர் சீமானுக்குக் கிடைத்திருக்கிறது. இதை சி.பா. ஆதித்தனாத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவரே குறிப்பிட்டிருக்கிறார். சிவந்தி ஆதித்தன் சீமானுக்குப் பண உதவிகளெல்லாம் செய்திருக்கிறார்.

சிவந்தி ஆதித்தன்

சீமான் இப்போது பெரியார் மீது சுமத்தும் இதே அவதூற்றை துக்ளக் சோவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து, சோ நீதிமன்றத்தில் வருத்தமும் தெரிவித்திருக்கிறார். தற்போது சீமான், பெரியாரின் கருத்துகளைச் சிதைப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறார். பெரியாரைப் பேசியவர்கள் யாரும் அரசியலில் தேறியதே கிடையாது. அதனால், இதற்குமேல் அவரால் வளர முடியாது என்றே கருதுகிறேன். ஏற்கெனவே, கட்சியிலிருந்து ஆன்றோர்கள் வெளியேறியிருக்கிறார்கள். சி.பா. ஆதித்யனாரின் நாம் தமிழர் கட்சி முடிவுக்கு வந்ததுபோலத்தான் இந்தக் கட்சியும் வந்து நிற்கும்." என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், ``குருமூர்த்தியும், சோ-வும் தான் நாம் தமிழர் கட்சியைப் பெற்றுக் கொடுத்தார்கள் என்ற இந்தக் குற்றச்சாட்டு, பெரியார் குறித்தது நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டை எதிர்கொள்ள முடியாமல், இதுபோன்ற அவதூறுகளைக் கட்டமைக்கிறார்கள். குருமூர்த்திக்கும் - நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குருமூர்த்தி சீமானைப் பார்த்ததோ, பேசியதோ இல்லை என அவரே தெளிவுபடுத்தியிருக்கிறார். 2009 பிற்பகுதியில், தொடங்கிய நாம் தமிழர் என்ற இயக்கம், 2010 மே 18-ல் நாம் தமிழர் கட்சியாக மாறியது. 2012 வரை கொளத்தூர் மணி நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளில் பங்கெடுத்தார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் வள்ளுவருக்குப் பதிலாகப் பெரியாரை முன்னிலைப் படுத்தவேண்டும் எனக் கூறியபோதுதான், பெரியாருக்கு முக்கியத்துவம் இல்லை எனக்கூறி விலகத் தொடங்கினார். குரு மூர்த்தியும், சோ-வும் நாம் தமிழர் கட்சியின் பின்னணியில் இருப்பதாகக் கொளத்தூர் மணி குற்றம் சாட்டுகிறார் என்றால், ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் நாம் தமிழர் கட்சியுடன் பயணித்தது ஏன்? இந்த 15 ஆண்டுக்கால கட்சியின் செயல்பாட்டில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டதுண்டா? இந்தியாவிலேயே 'நாங்கள் இந்துக்கள் இல்லை' எனப் பரப்புரை செய்யும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான்.

இந்திய அரசியல் சாசனத்துக்குக் கட்டுப்பட்டுத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, இந்தியாதான் தேசிய அடையாளம் என்பதை ஒருபோதும் ஏற்றதில்லை. தமிழன் என்பதுதான் எங்கள் தேசிய அடையாளம். எங்களுக்கு முதன்மைப் பகை ஆரியம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம். திராவிடம் ஆரியத்தை முழுமையாக எதிர்க்காது என்பதுதான் எங்களின் வாதம். தலைவர் பிரபாகரன் - சீமான் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பல்ல. இயக்கம் அழைத்துத்தான் சீமான் செல்கிறார். தலைவர் பிரபாகரனின் அண்ணனோ, அவரின் மகனோ இயக்கத்தின் உறுப்பினர்கூட இல்லை. இறுதிக்கட்டப் போரின் பொது அவர்கள் ஈழத்திலேயே இல்லை. இதில், யாருடைய சந்திப்பு நடந்தது என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?

இடும்பாவனம் கார்த்திக் - சீமான்

2009-க்கு பிறகு பெரியாரா - பிரபாகரனா என்ற கேள்வி எழுந்தபோது, திராவிட இயக்கங்கள் பெரியாரோடு நின்றுவிட்டார்கள். தமிழ்த் தேசியத்தைப் பெரியளவில் கொண்டுசென்ற சி.பா.ஆதித்தனார், மா.பொ.சி போன்ற தலைவர்கள் திராவிடக் கட்சிகளில் ஐக்கியமானதற்கு அவர்களின் சமரசம்தான் காரணம். கொள்கை உறுதியுடன் அவர்கள் நிற்கவில்லை. அது வரலாற்றுப் பிழை. அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுதான் சமரசம் செய்யக் கூடாது என நிற்கிறோம். சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்தவர்கள் அனைவரும் ஏற்கெனவே தி.மு.க-வில் இருப்பவர்கள்தான்.

மேடையில் துண்டுப் போடப்பட்டவர்கள் மட்டும்தான் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3000 பேரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 300 பேரைக் காட்டட்டும் பார்க்கலாம். கடந்த டிசம்பர் மாதம் நாம் தமிழர் கட்சி நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஒரே நாளில் 15000 பேர் இணைந்திருக்கிறார்கள். அதனால் இங்கிருந்து 30 - 40 பேர் கட்சியை விட்டு விலகுவது பெரிய பிரச்னை இல்லை." என்றார்.

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துண... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க