DMK : 'உதயநிதியின் உதயநாளுக்காக வசூலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி?' - துரைப்பாக்கம் வியாபாரிகள் புகார்
சென்னை துரைப்பாக்கத்தில் 193 வட்ட திமுகவின் சார்பில் நடத்தப்படவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றிற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் திமுகவினர் கறாராக பணம் வசூலிப்பதாக விகடனுக்கு அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து புகார் வந்திருக்கிறது.
'உதயநிதியின் உதயநாள் விழா' பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில் டிசம்பர் 26 ஆம் ஒரு நிகழ்வை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். 193 வது வட்ட திமுகவினர் சார்பிலேயே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தெரிகிறது.
துரைப்பாக்கத்தில் அறிஞர் அண்ணா நகர் 8 வது தெருவில் இந்த நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்கள். இதற்காகத்தான் திமுகவினர் அந்தப் பகுதியை சார்ந்த வியாபாரிகளிடமும் பொது மக்களிடமும் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக விகடனுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பிலிருந்து புகார் வந்திருந்தது.
இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக திமுகவின் 193 வது வட்ட கழகச் செயலாளர் ஏ.கே.ஆனந்த்தை தொடர்புகொண்டு பேசினோம், 'என் மீது குற்றம்சாட்டியவர்கள் யார் என சொல்லுங்கள் நான் விளக்கம் சொல்கிறேன். நாங்கள் மக்களுக்காக எவ்வளவோ உழைக்கிறோம். எவ்வளவோ நலத்திட்டங்களை அரசாங்கம் செய்கிறது. மழை வெள்ளத்தில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுகிறோம். அதையெல்லாம் உங்கள் அலுவலகத்துக்கு வந்து யாரும் சொல்வதில்லையா? யார் புகார் கூறினார்கள் என்பதைச் சொல்லாமல் என்னை மிரட்ட பார்க்கிறீர்களா....' என படபடவென வெடித்தார் ஏ.கே.ஆனந்த். அவரின் விளக்கம் மட்டுமே வேண்டும் என்பதை எவ்வளவோ முறை எடுத்துக் கூறியும்,'புகார் கூறியவர்கள் யார் என சொல்லுங்கள்...' என்றே வட்டமிட்டார்.
புகாரளித்தவர்களின் அடையாளத்தை வெளியில் சொல்வது சரியாக இருக்காது என விளக்கிக் கூறி மறுத்துவிட்டோம். கடைசி வரைக்கும் ஏ.கே.ஆனந்த அந்த நிகழ்ச்சி சார்ந்த புகாருக்கு முறையான விளக்கமே அளிக்கவில்லை.!