Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?
Doctor Vikatan: என் மகனுக்கு 20 வயதாகிறது. அவனுக்கு 10 நாள்களுக்கொரு முறை வாயில் புண்கள் வருகின்றன. என் கணவருக்கும் இதே பிரச்னை இருக்கிறது. வாய்ப்புண் என்பது பரம்பரையாகத் தொடருமா? இதற்கு நிரந்தர தீர்வு என்ன? உடனே சரியாக என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
வாய்ப்புண் பாதிப்பு என்பது பரம்பரையாகத் தொடர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல உங்கள் குடும்பத்தில் பலருக்கும் இந்தப் பிரச்னை வருகிறது என்றால் உங்களுடைய உணவுப்பழக்கத்தை கவனிக்க வேண்டும். சத்துள்ள சாப்பாடு சாப்பிடுகிறார்களா என்று பார்க்க வேண்டும். ஒருவருக்கு மட்டும் தொடர்ந்து பாதிக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏதோ சத்துக்குறைபாடு இருக்க வாய்ப்பு உண்டு.
உங்களுடைய உணவுப்பழக்கத்தில் கீரைகள், காய்கறிகள், பழங்கள் எந்த அளவுக்கு இடம்பெறுகின்றன என்று பாருங்கள். இளம் வயதினருக்கு வாய்ப்புண் வருவதற்கு சத்துக்குறைபாடுதான் பிரதான காரணமாக இருக்கும். அந்த வயதில் அவர்களுடைய உணவுப்பழக்கம் மோசமாக இருக்கும். அடிக்கடி வெளி உணவுகள், குறிப்பாக அடிக்கடி சாப்பிடும் துரித உணவுகள், பழங்கள், காய்கறிகள் இல்லாத உணவுப்பழக்கம் போன்றவையே காரணமாக இருக்கும். முதியோர்களுக்கும் வயது மூப்பு காரணமாக வாய்ப்புண் வரலாம்.
சித்த மருந்துக் கடைகளில் திரிபலா சூரணம், மருதம்பட்டை சூரணம் மற்றும் அதிமதுர சூரணம் என்று கிடைக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து வாய்க் கொப்பளிக்கலாம். சித்த மருத்துவத்தில் நெல்லிக்காய் லேகியம், வாய்ப்புண்களுக்கான சிறந்த மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. அது வைட்டமின் பற்றாக்குறை காரணமாக வரும் வாய்ப்புண்களைத் தீர்க்கும்.
வாய் சுகாதாரமும் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். பல் துலக்கியதும் வாயை முழுமையாக, நன்றாகக் கொப்பளிக்க வேண்டும். பேஸ்ட்டின் எச்சம், அதன் காரத்தன்மை காரணமாகவும் வாய்ப்புண்கள் வரலாம்.
உணவுகளில் மணத்தக்காளிக் கீரைக்கு வாய்ப்புண்களை ஆற்றும் தன்மை அதிகம். வாரத்தில் ஒருநாள், இந்தக் கீரையோடு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டாலே வாய்ப்புண்களைத் தவிர்க்கலாம். புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கம் இருந்தால் தவிர்க்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு முன், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வாய்க் கொப்பளித்தாலும் சரியாகிவிடும். இவை எதற்குமே குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.