பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!
Doctor Vikatan: ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?
Doctor Vikatan: தினமும் ஆப்பிள் சாப்பிடலாமா... ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?டயாப்பட்டிஸ் உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.
ஆரோக்கியமான நபர் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். ஆப்பிள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் வர வாய்ப்பில்லை. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது, அதுதான் ஆரோக்கியமானது. ஆனால், இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகுப்பூச்சுடன் இருப்பதால், அவற்றை தோல் நீக்கிச் சாப்பிடுவதுதான் சரியானது.
மற்றபடி உள்ளூரில் விளைவிக்கப்பட்டு வரும் மெழுகுப்பூச்சு இல்லாத ஆப்பிள்கள் என்றால் தோல் நீக்காமலேயே சாப்பிடலாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 100 கிராம் அளவுக்கு பழங்கள் சாப்பிடலாம். அந்த வகையில் அவர்கள் தினமும் அரை ஆப்பிள் சாப்பிடலாம். அதே சமயம், அவர்களது மூன்று மாத சராசரி சர்க்கரை அளவான HbA1c என்பது 8-க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆப்பிளை வேக வைத்து மசித்துக் கொடுப்பது வழக்கம். அது மாவு ஆப்பிளாக இருந்தால் நல்லது. மாவு ஆப்பிளாகட்டும், சாறு அதிகமுள்ள ஆப்பிளாகட்டும், இரண்டிலும் நார்ச்சத்து உள்ளிட்ட அனைத்து சத்துகளும் ஒன்றாகவே இருக்கும். ஆனாலும், குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது எளிதில் செரிமானமாக வேண்டும் என்பதற்காக மாவு ஆப்பிளாக கொடுப்பது சிறந்தது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது (An apple a day keeps the doctor away) என்று சொல்லப்பட்டது உண்மைதான். அந்த வகையில் ஆப்பிள் மிகச் சிறந்த உணவு. எல்லா சீசன்களிலும் செரிமானமாவதில் சிக்கல் தராது. அதன் பிஹெச் அளவானது சமமாக இருக்கும். அசிடிட்டியை ஏற்படுத்தாது. மருத்துவ சிகிச்சையில் இருப்போருக்கு மருந்துகளின் பக்கவிளைவால் வயிற்றுப் புண்கள் ஏற்படலாம். ஆப்பிளில் உள்ள பெக்டின் அந்தப் பிரச்னைக்கு சிறந்த மருந்தாக அமையும்.
ஆப்பிளை பொறுத்தவரை சீசனில் நமக்கு கிடைக்கும் ஆப்பிள் தான் சிறந்தது. வாங்கி வைத்து பல நாள்கள் ஆனாலும் அழுகாமல் அப்படியே இருக்கும் ஆப்பிள்களைத் தவிர்க்கவும். சீசனில் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் ஊட்டி ஆப்பிள் போன்றவை ஆரோக்கியமானவை. இந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.