97th Oscars: முதன்முறையாக ஆஸ்கர் நாமினேஷனில் திருநங்கை நடிகை - யார் இந்த கார்லா...
Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
Doctor Vikatan: என் 7 வயதுக் குழந்தைக்கு மயோனைஸ் என்றால் மிகவும் பிடிக்கிறது. பிரெட், சப்பாத்தி என எல்லா உணவுகளுடனும் மயோனைஸ் வைத்துதான் சாப்பிடுகிறான். கடைகளில் வாங்கும் மயோனைஸ்தான் தருகிறேன். இது ஆரோக்கியமானதா... வீட்டிலேயே மயோனைஸ் தயாரிக்க முடியுமா... மயோனைஸுக்கு மாற்று ஏதேனும் இருந்தால் சொல்லவும்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
மயோனைஸ் என்பது என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். அதில் எண்ணெய், வினிகர், முட்டை மற்றும் மசாலா பொருள்கள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படும். சில தயாரிப்புகளில் கடுகுகூட சேர்ப்பதுண்டு. எனவே, மயோனைஸில் 70 முதல் 80 சதவிகிதம் தண்ணீரும், முட்டையின் வெள்ளைக் கருவும்தான் பிரதான சேர்க்கைகள்.
மயோனைஸில் சேர்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பொருள்களை வைத்துப் பார்த்தாலே அதில் அதிக அளவில் கொழுப்பும், அதிக கலோரிகளும் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ஒருவேளை உங்கள் குழந்தை ஏற்கெனவே உடல் பருமன் பிரச்னையோடு இருந்தால், நீங்கள் தினமும் அல்லது அடிக்கடி மயோனைஸ் கொடுப்பதால் குழந்தையின் எடை இன்னும் அதிகமாகும். எனவே, அதைத் தவிர்ப்பதே சிறந்தது. என்றோ ஒருநாள் குழந்தைகளுக்கு மயோனைஸ் கொடுப்பதில் தவறில்லை. மல்ட்டிகிரெயின் பிரெட்டில் தடவியோ, வெஜிடபுள் டிப் ஆகவோ கொடுப்பதானால் அளவோடு கொடுக்கலாம்.
மயோனைஸ் போன்றே உணர வேண்டும் என்றால் ஃப்ரெஷ் யோகர்ட் நல்ல சாய்ஸ். காய்கறிகளையே கூழாக்கி, டிப் போன்ற வடிவத்தில் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கலாம். குழந்தைக்குப் பிடித்த காய்கறியில் இதை முயற்சி செய்து பாருங்கள். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் மயோனைஸ் தயாரிக்கலாம். அவகேடோ ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் வைத்துத் தயாரிக்கலாம். அதையும் அளவோடுதான் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். பச்சை முட்டை சேர்ப்பதால் இன்ஃபெக்ஷன் வர வாய்ப்பிருப்பதால் அதைத் தவிர்ப்பது சிறந்தது.
கொண்டைக்கடலையை வைத்துச் செய்யப்படும் ஹம்மஸ் என்ற உணவுகூட டிப் போலவே இருப்பதால் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுச்சத்துகள் என எல்லாம் இருப்பதால் இன்னும் ஆரோக்கியமானது. சர்க்கரைவள்ளிக்கிழங்கை கிரீக் யோகர்ட் உடன் மிக்ஸ் செய்தும் டிப் போல செய்து கொடுக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.