Sathish - Deepa Couples: "எத்தனை Dosaதான் சாப்பிடுவீங்க?" | Vikatan Digital Awar...
Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அதிகமானால்தானே ஆபத்து; குறைந்தாலும் மூளையைப் பாதிக்குமா?
Doctor Vikatan: கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவது ஏன்? பொதுவாக, கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் என எல்லா பாதிப்புகளும் வரும் என்று சொல்வார்கள். ஆனால், கொலஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என ஒரு செய்தியில் படித்தேன். இந்த இரண்டில் எது உண்மை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்

நீங்கள் கேள்விப்பட்ட இரண்டு தகவல்களுமே உண்மைதான். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதும் ஆபத்துதான், அது ஒரேயடியாகக் குறைவதும் பிரச்னைதான்.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படுவதால்தான் பக்கவாதம் வருகிறது. நம்முடைய பேச்சு, கை, கால் அசைவு, பார்வை, கேட்பது, உணர்வது என எல்லாச் செயல்களும் மூளையின் மூலமே நடக்கின்றன.
மூளையின் ரத்தக்குழாய்களில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தடை ஏற்படும்போது, அதன் தாக்கத்திற்கேற்ப நம் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்.
உதாரணத்துக்கு, பேச்சில் பிரச்னை வரலாம், பார்வையில் பாதிப்பு வரலாம். கை, கால்களில் லேசான மரத்துப்போன உணர்வு ஏற்படலாம்.
பலவீனமாக உணரலாம். அதுவே ரத்தக்குழாய்களில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது உடலின் ஒரு பக்கம் முழுவதுமோ, இரு பக்கங்களுமோ செயலற்றுப் போகலாம்.

மூளைக்கு ரத்தத்தைக் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்படும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து இப்படி மிகச் சாதாரணமானது முதல் மிக மோசமானது வரை பாதிப்பு எப்படியும் இருக்கலாம்.
சமீபகாலமாக இள வயதினரிடம் பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். பக்கவாதத்தை ஏற்படுத்தும் காரணிகள் கிட்டத்தட்ட மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைப் போன்றவைதான்.
வயதாகும்போது பக்கவாத பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் இந்த ரிஸ்க் அதிகரிக்கிறது.
புகைப்பழக்கம், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன், உடல் இயக்கமற்ற வாழ்க்கைமுறை, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருப்பது போன்ற எல்லாமே பக்கவாத ரிஸ்க்கை அதிகரிக்கும் காரணிகள்.

எனவே, இவை தவிர்த்த ஆரோக்கிய வாழ்வியல் முறை பின்பற்றப்பட வேண்டும்.கெட்ட கொலஸ்ட்ரால் மூளைக்கு எப்படி ஆபத்தானதோ, அதேபோல கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக இருப்பதும் மூளைக்கு ஆபத்தானதுதான்.
அது குறிப்பிட்ட அளவைவிட குறையும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஜப்பானியர்களிடம் மூளையில் ஏற்படும் இந்த பாதிப்பு மிக அதிகம். காரணம், அவர்களது அதீத ஆல்கஹால் பழக்கமும், மிகக் குறைவான கொலஸ்ட்ரால் அளவும்தான்.
இந்த விஷயங்களாலும் ஒருவருக்கு பக்கவாத பாதிப்பு வரலாம். எனவே, கொலஸ்ட்ரால் சரியான அளவில் தக்கவைத்துக் கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். அவ்வப்போது இந்த அளவுகளை டெஸ்ட் செய்து பார்த்துக்கொள்வது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.