அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்ன...
Doctor Vikatan: பள்ளியில் மயங்கி விழுந்த டீன்ஏஜ் மகள்; எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
Doctor Vikatan: என் மகள் பத்தாவது படிக்கிறாள். கடந்த வருடம் வயதுக்கு வந்தது அவளுக்கு முதல் அதிக ப்ளீடிங் இருக்கிறது. மாதவிடாய் நாள்களில் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவுக்கு களைப்பாகி விடுகிறாள். மருத்துவரை அணுகி, டெஸ்ட் செய்தபோது அவளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 தான் இருக்கிறது என்று சொன்னார். இந்நிலையில் சமீபத்தில் அவள் பள்ளியிலேயே மயங்கி விழுந்துவிட்டாள். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது. அவளை எப்படி ஆரோக்கியமாக மாற்றுவது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
நீங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது உங்கள் மகள் தீவிர அனீமியாவால், அதாவது ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஒரு பெண் வயதுக்கு வரும்போது அவளின் மாதவிடாய் சுழற்சி முறையற்று இருக்கும். அதாவது தொடர்ந்து 20 நாள்கள்வரை ரத்தப் போக்கு இருக்கலாம் அல்லது இரண்டு, இரண்டரை மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம்.
சிலருக்கு அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். சினைப்பையிலிருந்து சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களும், மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகிய எல்லாம் ஒரே அலைவரிசைக்கு வரும். இவை எல்லாம் ஒழுங்கானால்தான் அந்தப் பெண்ணுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் முறையாக வரும். சரியான நாளில் வரும். சினைப்பையிலிருந்து கருமுட்டையும் வெளியே வரும். ஒரு பெண் வயதுக்கு வந்து, அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் இவையெல்லாம் ஒழுங்குக்கு வரும்.
இந்த நாள்களில் ஒரு பெண்ணுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து அனீமியா எனப்படும் ரத்தச்சோகை வராமலிருக்க நல்ல சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டுகளையும் கொடுக்கலாம்.

உங்களுடைய மகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னை இருக்கிறது என்று கேள்விப்படும்போது அவருக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவுகள் சரியாக இல்லாமலிருக்கலாம். அதற்கு காரணம் சினைப்பைகளின் முறையற்ற இயக்கம். பாலிசிஸ்டிக் ஓவரீஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். உங்கள் மகளின் லைஃப்ஸ்டைல் சரியில்லாமல், அதாவது ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் சாப்பிடுபவராக இருக்கலாம். அடிக்கடி வெளியில் சாப்பிடுபவராக இருக்கலாம். பருமன் பிரச்னை அல்லது தைராய்டு பிரச்னை இருக்கலாம்.
அவருக்கு ப்ளீடிங் டிஸ்ஆர்டர் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பல் தேய்க்கும்போது ஈறுகளில் ரத்தக் கசிவு, எங்கேயாவது அடிபட்டால் அந்தக் காயம் ஆறுவதற்கு நேரமெடுப்பது போன்றவை இருந்தால் ரத்தப் பரிசோதனைகளின் மூலம் அதை உறுதி செய்யலாம்.
முதல் கட்ட சிகிச்சையாக ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மருந்துகள் கொடுக்க வேண்டும். இவை வலியையும் அதிக ப்ளீடிங்கையும் ஓரளவு கட்டுப்படுத்தும். அடுத்து ஹார்மோன்கள் கலக்காத மருந்துகள் கொடுத்து ப்ளீடிங்கை கட்டுப்படுத்தலாம். அதிலும் குணம் தெரியாவிட்டால் ஹார்மோன் மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம்.

உடல் பருமன் அதிகமிருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். உங்கள் மகளுக்கு ஹீமோகுளோபின் அளவு 8 என்றிருப்பதால் ப்ளீடிங்கும் அதிகமிருக்கும். இது ஒரு சுழற்சி மாதிரி. இதை ஏதோ ஓரிடத்தில் நாம் நிறுத்த வேண்டும். அதற்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் மகளை உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்துங்கள். சத்தான உணவுகளைக் கொடுங்கள். உணவு மற்றும் வாழ்க்கைமுறை மூலம் இந்தப் பிரச்னையை சரிசெய்வதுதான் நிரந்தர தீர்வளிக்கும் என்பதால் இப்போதே அவற்றில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
