``முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை" - பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலாமானார்
Doctor Vikatan: விருந்துக்குப் பிறகு பீடா சாப்பிடும் வழக்கம், செரிமானத்துக்கு நல்லதா?
Doctor Vikatan: என் கணவருக்கு அடிக்கடி பீடா சாப்பிடும் பழக்கம் உள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் சாப்பிடும்போது அங்கே விற்கப்படும் ஸ்வீட் பீடாவை தவறாமல் வாங்கிச் சாப்பிடுகிறார். “பீடா வேண்டாம், வெற்றிலை–பாக்கு போடுங்கள்” என்றால் கேட்க மறுக்கிறார். “செரிமானத்துக்கானதுதானே… ஒன்றும் செய்யாது” என்கிறார். அவர் சொல்வது சரிதானா?
பதில் சொல்கிறார்: சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது ஸ்வீட் பீடா. ஆனால் ஸ்வீட் பீடாவில் கலோரிகள் மிக அதிகம். என்றாவது ஒருநாள் ஒரு மாற்றத்திற்காக அதைச் சாப்பிடுவதில் தவறில்லை.
சாப்பாட்டுக்குப் பிறகு அது வாயில் ஏற்படுத்தும் நல்ல மணமும் ருசியும் அலாதியானது. சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை-பாக்கு போடும் பழக்கம் நம் முன்னோர்களிடமும் இருந்தது. செரிமானத்துக்காக அவர்கள் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். பிரசவமான பெண்களுக்கு முதல் 40 நாள்கள் வரை வெற்றிலை கொடுப்பதும் இப்போதும் சில இடங்களில் வழக்கத்தில் உள்ளது. குழந்தை பெற்ற பெண்களின் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கச் செய்வதற்காக அது செய்யப்படுகிறது.

ஆனால், சமீப காலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு காம்பினேஷனின் அளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. இந்த மூன்றில் எதன் அளவு அதிகமானாலும் அது உணவுக்குழாயில் எரிச்சலையும், வாய்ப்புண்ணையும் ஏற்படுத்திவிடும். வெற்றிலை நல்லதுதான் என்றாலும் தினமும் எடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோல இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பீடாவும் அடிக்கடி சாப்பிட உகந்தது அல்ல. அது பழக்கமாக மாறிவிடாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















