Doctor Vikatan: வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?
Doctor Vikatan: வெறும் வயிற்றில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா... இதன் பலன்களை முழுமையாகப் பெற எப்போது, எப்படி, எத்தனை சாப்பிட வேண்டும்.... பேரீச்சம் பழங்களில் பல வகைகள் கிடைக்கின்றனவே... கறுப்பு பேரீச்சை, அதிக இனிப்புள்ளது, காய்... இப்படி எது, யாருக்கு நல்லது?
-ganesh, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

வெறும் வயிற்றில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நல்லதுதான். இதற்கோர் உதாரணமாக, இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு நேரத்தைக் குறிப்பிடலாம். நோன்பு திறக்கும்போது அவர்கள் முதலில் பேரீச்சம்பழம் சாப்பிட்டுத்தான் கஞ்சி உள்ளிட்ட மற்ற உணவுகளைச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். அப்படி பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும். செரிமானம் சீராக இருக்கவும் உதவும் என்பதுதான் காரணம்.
பேரீச்சம்பழங்களில் எல்லா வகைகளுமே சிறந்தவைதான். அரேபியன் டேட்ஸில் எனர்ஜி சற்று கூடுதலாக கிடைக்கும். பேரீச்சம்பழங்களைப் பொறுத்தவரை உலரவைப்பதால் அவற்றின் ஆரோக்கிய பலன்கள் குறையாது. பேரீச்சம்பழத்தின் சுவை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் அனீமியா எனப்படும் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தால் பேரீச்சம் பழம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். அந்நிலையில் பேரீச்சம்பழத்தை சிறிது நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து அரைத்து மில்க் ஷேக் போல செய்து எடுத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், பேரீச்சம் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால், ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம்பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு மேல் எடுக்கக்கூடாது. அதையும் வெறும்வயிற்றில் எடுத்தால், செரிமானத்துக்கு காரணமான சுரப்பை மேம்படுத்தி, குடலின் இயக்கம் தூண்டப்படும். அவர்களும் அதிக இனிப்புள்ள பேரீச்சம்பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
உடல்ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை என்பவர்கள், இள வயதினர் ஆகியோர் ஒரு நாளைக்கு 5 பேரீச்சம்பழங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள், 2 அல்லது 3-க்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இது எனர்ஜியை கொடுக்கும் என்பதால் இரண்டு, மூன்று என கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
