மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.73 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சர்ச்சை பேச்சால் ஆட்சியர் பணியிட மாற்றம்.. என்ன நடந்தது?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற மூன்றரை வயது சிறுமி 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அந்த சிறுவனை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் மயிலாடுதுறையில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசினார்.

ஆட்சியர் மகாபாரதி பேச்சு:
ஆட்சியர் மகாபாரதி பேசுகையில், "பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இதை பெண், ஆண் குழந்தைகள் என இருவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக ஏதேனும் குற்றங்கள் நடக்காமல் இருக்க காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
18 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார்கள் குற்ற செயல்களில் ஈடுபடும்போது அவர்களை கவனமாக கையாள வேண்டும். காவல்துறையினர் குழந்தைகளிடம் விசாரணையில் ஈடுபடும்போது அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல்துறையினர் எடுக்க வேண்டும்.
மூன்றரை வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறுமி மீது தவறு உள்ளது. அந்த குழந்தை தப்பாக நடந்திருக்கு. காலையில் அந்த சிறுமி அவன் முகத்தில் துப்பியுள்ளது. இது எனக்கு கிடைத்த ரிப்போர்ட். இரண்டு பக்கமும் பார்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. கவனித்து பார்த்தால் இது தெரியும்" என்றார்.

பணியிட மாற்றம்
மகாபாரதியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மகாபாரதி பணியிடம் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மகாபாரதியிடம் பேசினோம், "நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு குடும்பத்திற்கும் பிரச்னை இருந்துள்ளது. பழிவாங்குவதற்காக அவன் இப்படி செஞ்சிருக்கான். குழந்தையின் பெற்றோர் மீது தவறுள்ளது என்கிற அர்த்தத்தில் பேசினேன். நான் தவறாக பேசுகிற ஆள் கிடையாது, குழந்தைகள் தெய்வம் போன்றவர்கள்." என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
