மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.73 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
அப்போ `ஜோ பைடன்', இப்போ `ட்ரம்ப்' - ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?!|Explained
2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரின் வயது இந்த மாதத்தோடு மூன்று.
இந்தப் போருக்கு பின் தொடங்கிய போர் எல்லாம் சமாதனத்தையும், போர் நிறுத்தத்தையும் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது, 'இந்தப் போர் எப்போது முடியும்?' என்ற கேள்விக்கான விடை மட்டும் இன்னும் தெரியவே இல்லை.
ரஷ்யா - உக்ரைன் போரை முதலில் தொடங்கியது ரஷ்யா தான். 2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரின் ஆரம்பப்புள்ளி 2014-ம் ஆண்டு உக்ரைன் பகுதியான கிரிமீயாவை ரஷ்யா பிடித்தப்போது தொடங்கப்பட்டது ஆகும். ஆனால், கிரிமீயா பகுதி மக்களுக்கு இது ஒன்றும் பெரிய பிரச்னையாக தெரியவில்லை. காரணம், ஆக்கிரமிப்புக்கு முன்பு நடந்த ஓட்டெடுப்பில் 95 சதவிகித கிரிமீயா மக்கள் ரஷ்யாவுடன் சேர்வதையே விரும்பியிருந்தனர்.
ஆனால், உக்ரைன் நாட்டிற்கோ இதை ஜீரணிக்க முடியவில்லை. தங்களுடன் இருந்த ஒருப்பகுதி திடீரென்று பிரித்து செல்லப்பட்டது உக்ரைனுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதனால், 2014-ம் ஆண்டில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில், எரிகின்ற தீயில் எண்ணெயை ஊற்றுவதுப்போல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் நாட்டை நேட்டோ அமைப்புடன் சேர்க்க விரும்புவதாக அறிவித்தார். இதற்கு அமெரிக்காவும் பலத்த ஆதரவை கொடுத்தது.
ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் ஆகாது என்பது உலகம் அறிந்த உண்மை. அப்படியிருக்கையில் தன் அண்டை நாடான உக்ரைனில் அமெரிக்க ஆதரவு நேட்டோ குடிப்புகுவது ரஷ்யாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் அந்த முடிவை கைவிட சொல்லி ரஷ்ய அதிபர் புதின் ஜெலன்ஸ்கியை எச்சரித்தார். ஆனால், உக்ரைன் அதிபரோ அதற்கு செவி சாய்க்கவில்லை.
இதனால் கோபமடைந்த புதின், உக்ரைன் எல்லையில் ஆயிரக்கணக்கான படையை முதலில் குவித்தார். பின்னர் ரஷ்யா தாக்குதலை தொடங்கியது.
நேட்டோ அமைப்பின் சட்ட திட்டங்களின் படி, எந்தவொரு நாடு இந்த அமைப்பில் சேர வேண்டுமானாலும் அந்த நாடு அரசியல் ரீதியாக, ராணுவ ரீதியாக, பொருளாதார ரீதியாக சில இலக்குகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால், இதில் எதற்கு கீழுமே உக்ரைன் வராது. அதனால், நோட்டோவில் உக்ரைனால் சேர முடியாது.
ஆனால், உக்ரைனின் ஒரே ஒரு நம்பிக்கை அமெரிக்கா. 2022-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எதிராகவும், உக்ரைனுக்கு மிக ஆதரவாகவும் இருந்தார்.
அமெரிக்கா தரப்பில் இருந்து நோட்டோ அமைப்பில் உக்ரைன் சேர பலமான ஆதரவு கொடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்ந்து விடும் என்ற நிலைக்கூட உருவாகிவிட்டது.
அப்போது தான் ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடங்கியது.

புவியியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, ராணுவ ரீதியாக என எல்லா விதத்திலும் உக்ரைனை விட பலமான நாடு ரஷ்யா. அவ்வளவு பெரிய நாட்டை எதிர்த்து உக்ரைன் என்னும் சிறிய நாடு போரிட முடியாது. அந்தத் தடுமாற்றத்தில் இருந்த உக்ரைனுக்கு ஓடிச்சென்று கைக்கொடுத்தது அமெரிக்கா.
அடுத்ததாக, இன்னும் ஒரு பெரிய பலத்த அடியாக ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்டை வழங்கியது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். இருந்தும் இப்போது வரை தொடர்ந்து வருகிறது ரஷ்ய - உக்ரைன் போர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த வரை உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து வந்தது அமெரிக்கா. கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரம் தொடங்கியப்போதே, அமெரிக்கா உக்ரைனுக்கு மிக அதிக செலவு செய்துவிட்டது என்று சாடியிருந்தார் ட்ரம்ப்.
'யார் வெற்றி பெற்றாலும் அமெரிக்காவின் உதவி கண்டிப்பாக வேண்டும்' என்று தெரிந்த... புரிந்த ஜெலன்ஸ்கி, அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் நடந்துக்கொண்டிருந்தப் போதே ஜெலன்ஸ்கி இரண்டு அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார்.
அப்போது பேசிய ட்ரம்ப் ஜெலன்ஸ்கி முன்பே, "புதின் என்னுடைய நெருங்கிய நண்பர். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பே இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுவேன்" என்று பேசியிருந்தார். ஆம்... ட்ரம்ப் மற்றும் புதின் நல்ல நண்பர்கள் ஆவார்கள்.

சொன்னது போலவே, வெற்றி பெற்றதுமே ட்ரம்ப் இந்தப் போர் நிறுத்தத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்தார். இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் 'சர்வாதிகாரி' என்று விமர்சித்திருந்தார். அதிபராக பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாகவும் 'அமெரிக்கா உக்ரைனுக்காக நிறைய பணத்தை செலவிட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
மேலும், ரஷ்யா - உக்ரைன் போருக்கு நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர நினைத்ததே முக்கிய காரணம் என்றும், உக்ரைனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்த ஆதரவையும் கடுமையாக சாடினார் ட்ரம்ப். ட்ரம்பின் இந்தக் கருத்திற்கு ரஷ்யா 'உண்மையை ஒத்துக்கொண்ட முதல் மேற்கத்திய நாடு தலைவர்' என்று பாராட்டியிருந்தது.
போர் முடிந்தப் பிறகு தான் உக்ரைனால் நேட்டோவில் இணைய முடியும் என்று தற்போது கைவிரித்துவிட்டது நேட்டோ தலைமை.
தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போதைய நிலவரப்படி உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்க விரும்பவில்லை. ஆனால், ஜெலன்ஸ்கியோ விடாப்பிடியாக 'உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக்கொண்டால் நான் பதவி விலக தயார்' என்று தூது விட்டுள்ளார். கூடவே, ட்ரம்பை கூல் செய்யும் விதமாகவும் உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுக்க ஒப்பந்தம் போடவும் சம்மதித்துள்ளார்.
இன்னொரு பக்கம், ட்ரம்ப் மற்றும் புதின் இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே சில ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளும் பலமாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று அமெரிக்காவில் ட்ரம்பை சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி. சந்திப்பிற்கு பிறகு,
ரஷ்யா - உக்ரைன் போரில் ட்ரம்ப் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்?
நோட்டோவில் உக்ரைன் சேர ட்ரம்ப் ஆதரவு தெரிவிப்பாரா?
உக்ரைனுக்கு ஆதரவு கரத்தை தொடர்ந்து அமெரிக்கா நீட்டிக்குமா?
போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிய வரலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
