3-ஆவது டெஸ்ட்: இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ராகுல் - ஜடேஜா!
`EVM ஹேக் செய்ய முடியும் எனில் செய்து காட்டுங்கள்’ - காங்கிரஸுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ்
சமீபத்தில் நடந்த ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு சாதகமாக வந்தது. இந்த வெற்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ததால்தான் சாத்தியமானது என்ற அர்த்தத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பின. இதற்கு பதிலளித்த பா.ஜ.க, 'ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இல்லையே... அங்கு எப்படி தோல்வி சாத்தியமானது. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தலில் தோல்வியடையும்போதுதான் EVM விவகாரத்தை எழுப்புகின்றன' எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு எதிராக பதில் அளித்திருக்கிறது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான அபிஷேக் பானர்ஜி, ``EVM குறித்து கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புபவர்கள், அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்து டெமோவைக் காட்ட வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இந்த குற்றச்சாட்டில் எந்த பொருளும் இருப்பதாக தெரியவில்லை.
EVM-களை ஹேக் செய்ய முடியும் என்று நினைத்தால், அவர்கள் தேர்தல் ஆணையத்தை சந்தித்து EVMகளை எப்படி ஹேக் செய்ய முடியும் என்பதை நிரூபித்தால் மட்டும்தான் இதற்கு ஒரு தீர்வு காணமுடியும். அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் மட்டும் எதுவும் செய்ய முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா கூட்டணியில் இருந்து, தற்போது ஜம்மு - கஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா, `` வாக்களிக்கும் முறையை கேள்வி கேட்பதில் எந்தக் கட்சியானாலும் நிலையாக இருக்க வேண்டும்.
இதே EVM எந்திரங்கள் மூலம்தான் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் வாக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் வென்றது. அதை உங்கள் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என நீங்கள் கொண்டாடினீர்கள். அதற்கு அடுத்த சில மாதங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தப்பிறகு, EVM மிஷின் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிக்கல்கள் இருந்தால், அதில் உறுதியாக நிற்க வேண்டும்.
இந்தமுறை வாக்குப்பதிவில் நம்பிக்கை இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடக்கூடாது. தேர்தல் என்றாலே, ஒருமுறை வாக்காளர்கள் உங்களைத் தேர்வு செய்கிறார்கள், மறுமுறை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். எனவே, வாக்கு இயந்திரங்களை நான் குறைக்கூறவில்லை" என்றார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் சதீஷ் சந்திர துபே, ``சமீபத்தில் நடந்த தேர்தல்களில், ஜம்மு-காஷ்மீரில், ஜார்கண்டில் இந்தியா கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஒரு பொய்யின் அடிப்படையில் ஒரு கூட்டணி நீண்ட காலம் நீடிக்க முடியாது. திரிணாமுல் காங்கிரஸ் இதை தாமதமாக உணர்ந்திருக்கிறது. ஆனால் இப்போது உண்மையை புரிந்து கொண்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வாய்ப்பு கிடைத்தால், இந்தியாக் கூட்டணிக்கு தலைமைத் தாங்கி வழிநடத்தத் தயார் என்றக் குரல் மம்தா பானர்ஜி தரப்பிலிருந்து எழுந்தது. இதற்கு மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களான சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதன் பின்னணியில்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கருத்தும் பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...