GST 2.0: "கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் மோடியினுடையது மட்டுமே" - நயினார் நாகேந்திரன் பெருமிதம்
திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.
இதில் 90 சதவீத பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 லிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 5% ஜிஎஸ்டி இருந்த பொருள்களுக்கு 0% என வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கம்பி, சிமெண்ட்ற்கு 28% வரி இருந்ததைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் விலை ரூ.50 முதல் 60 வரை குறைகிறது.
பொருட்களின் விலை குறைக்கவில்லை என நுகர்வோர் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டிருந்த டூத் பேஸ்ட், டூத் பவுடர், ஹேர் ஆயில் மற்றும் சோப் ஆகியவற்றிற்கு 5% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலுக்கு வரி கிடையாது. ஏசி, இன்சுரன்ஸ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது வரிக்குறைப்பினால் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவார்கள். அதன் மூலம் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கமாக மட்டுமே இருக்க முடியும்" என்றார்.