Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
GST 2.0: ரியல் எஸ்டேட்டிற்கு இனி சூப்பர் எதிர்காலம்; வீடு வாங்கினாலும், கட்டினாலும் லாபம்
தினசரி பயன்படுத்தும் பொருள்கள், எலெக்ட்ரானிக் பொருள்கள், பைக்குகள், கார்கள்... என பலவற்றின் விலைகள் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளன. இதற்கு மிக முக்கிய காரணம் லேட்டஸ்ட் அறிமுகமான 'ஜி.எஸ்.டி 2.0'
இந்த ஜி.எஸ்.டி 2.0, ரியல் எஸ்டேட் துறையில் எதாவது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை விளக்குகிறார் பில்டர் மற்றும் வழக்கறிஞர் முத்துசாமி.

"2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரியில் 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என நான்கு வகைப்பாடு இருந்தன. தற்போது அமலாகியுள்ள ஜி.எஸ்.டி 2.0-ன் படி, இனி 5 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம் என இரண்டு வரி வகைப்பாடுகளாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம், சிமென்ட், டைல்ஸ், பெயின்ட், வார்னிஷ், கான்கிரீட் போன்றவைகளின் வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மார்பிள் மற்றும் கிரானைட் பிளாக்குகள், மணல், செங்கல், கற்கள், பி.வி.சி பைப் போன்றவைகளின் வரி விகிதம் 12 - 18 சதவிகிதங்களில் இருந்து 5 சதவிகிதமாக அதிரடியாக குறைந்துள்ளது.
இதனால், கட்டுமான செலவுகள் முன்பு இருந்ததைவிட, இனி வரும் காலத்தில், சுமார் 3 - 5 சதவிகிதம் குறையும் வாய்ப்புள்ளது. புதிதாக வீடு கட்டுபவர்கள், கட்டுமான செலவுகளை சுமார் ரூ.1.5 - 3 லட்சம் வரையில் சேமிக்க வாய்ப்பு அதிகம்.
மறுபுறம், இந்த விலைக் குறைப்பு மக்களின் வீடு வாங்கும் எண்ணங்களை மேலும் அதிகரித்து ஊக்குவிக்கும்.
வீடு கட்ட தயக்கம் காட்டியவர்கள்கூட, இந்த விலைக் குறைப்பால் தங்களது வீடு கட்டும் பணியை துரிதமாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கட்டடம் கட்ட தேவைப்படும் பொருட்களின் விலையைக் குறைத்தது, ரியல் எஸ்டேட் துறைக்கு சூப்பர் எதிர்காலம் அமைய உந்துதலாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பில்டர், புரொமோட்டர்கள்...
இந்த ஜி.எஸ்.டி 2.0-ஆல், பில்டர், புரொமோட்டர்களுக்கும் நல்ல நேரம் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும்.
இப்போது இவர்களுக்கு வரி நடைமுறைகளும் இரண்டே விதமாக 5% மற்றும் 18% மாற்றி அமைத்து எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலையை சரியாக கணித்து வீடுகளின் விலையை துல்லியமாக கணக்கிட்டு முன்னரே நிர்ணயம் செய்ய முடியும். இதன் மூலம், ஒவ்வொரு திட்டப்பணி செலவினையும் முன்கூட்டியே சரியாக கணிக்க உதவும்.
மேலும், கட்டுமானப் பொருள்களின் விலையும் குறைந்துள்ளதால், அவர்களுக்கு கட்டுமானத்தில் எவ்வளவு நிகர லாபம் கிடைக்கும் என்பதனையும், முன்பை விட, எளிதாக முன்னரே சரியாகக் கணக்கிடமுடியும்.
எளிதாக, அரசின் வரி இணக்க அறிக்கை சமர்ப்பிக்கவும் அது சம்பந்தமான கட்டணங்களை செலுத்திக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். தரமான இன்டீரியர் வேலைபாடுகளிலும், இனி, குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவதால், வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில், முழு திருப்தி அடைவார்கள்.
அதன் மூலம் வியாபாரம் பெருகி, கூடுதலான வாடிக்கையாளர்களை எளிதாக ஈர்க்கலாம். அனைத்து திட்டப் பணியின் சாத்தியக் கூறுகளை எளிதாக கணக்கிட்டு அளவிட முடியும். திட்டப் பணிகளை அவரவர் திட்டபடி எளிதாக முடிக்கவும் உதவும்.

ரியல் எஸ்டேட் கட்டுமான பொருட்களின் விலை குறையும் நிலையில், மக்கள் வீடு வாங்குவதில் மற்றும் கட்டுவதில் அதிக ஆர்வம் கொள்வார்கள். இதனால், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அதிகரித்து, சந்தை வியாபாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
வீடு வாங்குபவர்களே... கட்டுபவர்களே...
இந்த ஜி.எஸ்.டி மாற்றத்தால், புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு முன்பு நடைமுறையில் இருந்த விலையில் இருந்து, சுமார் 1 - 2 சதவிகிதம் குறையவும், மேலும், புதிதாக வீடு கட்டுப்பவர்களுக்கு, கட்டுமான செலவு சுமார் 3 - 5 சதவிகிதம் குறையவும் சாத்தியக்கூறு அதிகம்.
மேலும், இதனால் வீடு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு வங்கியில் விண்ணப்பிக்கும் கடன் தொகையும் குறையலாம்.
'இவர்களுக்கு' சூப்பர் தமாக்கா!
மேலும், மிக முக்கியமாக, மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டர் வரையிலான கார்ப்பெட் ஏரியா கொண்ட வீடுகள், மெட்ரோ அல்லாத நகரங்களில் 90 சதுர மீட்டர் வரையிலான கார்ப்பெட் ஏரியா கொண்ட வீடுகள், ரூ.45 லட்சம் அல்லது அதற்கு குறைவான மதிப்பில் இருக்கும் வீடுகளை வாங்கும்போது ஒரு சதவிகித ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். இது, மலிவு விலை வீடுகள் கட்டும் திட்டப் பிரிவினரை, ஈர்க்க பெரிதும் உதவும். இந்தத் திட்டத்தில் வீடு வாங்குபவர்களுக்கு, இதுவரை இல்லாத ஒரு ஆகச்சிறந்த வாய்ப்பினை வழங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படி ஒரு சூப்பர் தமாக்கா காத்திருக்கிறது.
இப்போதே வாங்கிவிடுங்கள்...
கட்டுமான பொருள்களின் விலை குறைவதால், அதன் நீட்சியாக, வீடுகளின் விலை குறையும். வீடு வாங்கும் பிளானில் இருப்பவர்களுக்கு இதுவே மிகச்சரியான தருணம்.
முன்பு சொன்னதுப்போல, ரியல் எஸ்டேட் துறைக்கு சூப்பர் எதிர்காலம் காத்திருக்கிறது. இதனால், ரியல் எஸ்டேட்டிற்கு டிமாண்ட்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிச்சயம் அதிகம்.
அதனால், இப்போதே முந்தி கொள்வது தான் புத்துசாலிதனம்.
ஆக, அடுத்த தீபாவளியை உங்கள் புது வீட்டில் கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்துகள் மக்களே!"