Gym: ஜிம் மரணங்கள் தொடர்வது ஏன்? - ``நிச்சயம் தவிர்க்க முடியும்" மருத்துவர்கள் விளக்கம்!
'ஜிம்'முக்குப் போகிறவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று எல்லோருமே நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜிம் மரணங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. நேற்றைய தினம்கூட, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் 36 வயதே ஆன மஹாதிர் முகமது ஜிம்மிலேயே மாரடைப்பால் இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஜிம் வொர்க் அவுட் குறித்த பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இது குறித்து விவரம் அறிய சென்னையைச் சேர்ந்த இதய நல மருத்துவர் சொக்கலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
''ஒவ்வொரு மனிதனின் உடலிலும் மொத்தம் மூன்று இதயங்கள் உள்ளன. நெஞ்சுப்பகுதியில் ஒன்று, வலது மற்றும் இடது கெண்டைக்கால் பகுதியில் தசைகள் இரண்டாவது, மூன்றாவது இதயங்களாக உள்ளன. நாம் கெண்டைக்கால் இதயத்தை பெரிஃபரல் ஹார்ட் (peripheral heart) என அழைக்கிறோம். நாம் நிற்கும்போதும், நடக்கும்போதும் இந்த தசைகள்தான் இதயத்திற்கு ரத்தத்தை சீராக அனுப்புகிறது. இதனை ஆக்டிவாக வைத்திருக்கத்தான் நடைப்பயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் என ஏதோவொரு பயிற்சியை மருத்துவர்கள் செய்யச் சொல்கிறார்கள்.
உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்ஃபின் என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால், தற்போது ஜிம்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடற்பயிற்சியை செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் உடற்பயிற்சி செய்வதால் எண்டார்ஃபின் சுரப்பதற்கு பதில் அட்ரலின் சுரந்து பதட்டமும் மன அழுத்தமும் ஏற்பட்டு விடுகிறது. விளைவு, வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்ட இதய ரத்தக்குழாய்களில் ஏதோ ஓர் இடத்தில் சிறிய கீறல் ஏற்பட்டு இரத்த உறைவு ஏற்படுகிறது. அந்தக் கீறல் இதயத்தின் முக்கியமான முதன்மை ரத்தக்குழாயில் ஏற்பட்டால் ரத்த உறைவு ஏற்பட்டு, அடுத்த மூன்று நான்கு நிமிடங்களில் ஒருவர் இறந்துகூட போகலாம்.
இன்றைக்கு உடல் எடையைக் குறைக்கத்தான் பலரும் ஜிம்முக்கு செல்கிறார்கள். ஆனால், எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், 10 சதவீதத்திற்கு மேல் பருமன் குறையாது. உணவுமுறையை ஒழுங்குப்படுத்துவதுதான் இதற்கு பாதுகாப்பான வழி'' என்கிறார்.
சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா பேசுகையில், ''உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்த பின் நீராவிக்குளியல் எடுத்த நிலையில் குளியலறைக்குள்ளேயே மரணம் சம்பவித்திருப்பதாக தெரிகிறது. இறப்புக்கு முக்கியமான காரணமாக கார்டியாக் அரெஸ்ட் இருந்திருக்க வாய்ப்பு அதிகம். இதயத்தின் தசைகள் துடிப்பதற்கு அவற்றில் நுண்ணிய அளவு மின்சாரக்கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க வேண்டும். இந்த மின்னோட்டம் முறையாக நிகழ வேண்டுமென்றால், நமது உடலின் செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சரியான அளவில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம் ஆகிய தாது உப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக, பொட்டாசியம்.
அந்த நபர் மூன்று மணிநேரங்களுக்கு மேல் கடினமாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். கூடவே நீராவிக்குளியலும் எடுத்திருக்கிறார். இதனால், உடலில் இருந்து நீர்ச்சத்து நிறைய வெளியேறி இருக்கும். அளவுக்கதிகமாக நீர்ச்சத்துக் குறையும்போது நம் உடலில் அமிலத்தன்மை ஏற்படும். அதை ஈடு செய்ய நம் உடலில் செல்களுக்கு உள்ளே இருக்கிற பொட்டாசியம் தாது, வெளியே வந்து ரத்தத்தில் கலந்து விடும். விளைவு, இதயத்தின் மின்சாரக் கடத்தலில் சிக்கல் ஏற்பட்டு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கும்'' என்கிறார். அளவுக்கதிகமான, கடினமான, பதற்றத்துடன் உடற்பயிற்சிகள் செய்வதை தவிர்ப்பது மட்டுமே இதற்கானத் தீர்வு.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினது பென்னி குயிக்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குப் பின்னாடி இருக்க காரணங்கள் உங்களுக்கு தெரியுமா? பிரிட்டிஷார் ஏன் அந்த அணையைக் கட்டுனாங்க... எப்படி அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க... ஏன் 999 வருஷத்துக்கு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தாங்க... இப்படிப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கான பதில்களையும் வரலாற்றையும் சுவாரஸ்யமாக சொல்லும் நாவல்தான் ஆனந்த விகடனில் வெளியான நீரதிகாரம்.
இப்போது அது விகடன் Play-ல் ஆடியோ புத்தகமாக!
இப்பவே விகடன் App-ஐ இன்ஸ்டால் பண்ணுங்க. நீரதிகாரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடியோ புத்தகங்களை இலவசமா கேட்டு என்ஜாய் பண்ணுங்க!