கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது; விஜய்க்கு மட்டுமல்ல எனக்கும் பொருந்தும்: கமல்ஹாசன...
H-1B Visa: "இந்தியர்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறதா?" - பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி
அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் காத்திருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருளாதாரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடும் அறிவிப்புகள் உலகம் முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்காகப் பெறக்கூடிய 'h1 b1' விசாவைப் பெறுவதற்குக் கட்டணத்தைப் பல மடங்கு அவர் உயர்த்தி இருக்கிறார்.
அதன்படி இந்த விசாவைப் பெறுவதற்கு வெறும் 4 லட்ச ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்த நிலையில் இனி இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டி இருக்கிறது.
இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விகடன் சார்பாக சர்வதேச அரசியலையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வரும் லயோலா கல்லூரியின் மூத்த பேராசிரியர் டாக்டர் கிளாட்சன் சேவியரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட சில முக்கியமான கேள்விகளும், அதன் சொன்ன பதில்களும் இங்கே!
இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு வேட்டு வைத்த ட்ரம்ப் - யாருக்குப் பாதிப்பு? இனி என்னவாகும்?
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்: நீண்டகால பிரச்னைகள், உடனடி பிரச்னைகள் என இரண்டும் இதில் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம் .
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காகத்தான் இந்த விசா கொடுக்கப்படுகிறது . ஆண்டிற்கு 50000 விசாக்கள் வரை இப்படிக் கொடுக்கப்படும் . அது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்கள் இந்தியர்கள் தான் பெறுகிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் இப்படி வெளிநாட்டினவரைப் பணியாற்ற வைக்க வேண்டும் என்பதில்லை.
அமெரிக்காவில் இயங்கக்கூடிய ஒரு நபர் நிறுவனங்கள் கூட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசிடம் இருந்து இப்படி h1 b1 விசாக்களைப் பெற்றுத்தர முடியும். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான் இந்த விசா ஒருவருக்குச் செல்லுபடி ஆகும் .அதற்குப் பிறகு தொடர்ந்து அவர் வேலை செய்ய வேண்டும் என்றால் விசாவைப் புதுப்பிக்க வேண்டும்.
அப்படி புதுப்பிப்பதற்கு மற்றும் புதிய விசாக்களைப் பெறுவதற்கு வெறும் 5000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்தக் கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக ட்ரம்ப் உயர்த்தி இருக்கிறார் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டி இருக்கும்.

அமெரிக்காவில் வேலை செய்யும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஆண்டு சம்பளம் என்பது 80 லட்ச ரூபாய் கூட இருக்காது. அதனால் நிச்சயமாகப் பெரும்பாலானவர்களால் இந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியாது .இவர்களைப் பணியமத்தியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி ஒரு ஊழியரைப் பணியில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம்.
அதனால் அமெரிக்காவில் இருக்கக்கூடிய பெரும்பான்மை இந்தியர்கள் இந்தியா திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது உடனடியாக இல்லை என்றாலும் அடுத்தடுத்த மாதங்களில் பிரச்னை பெரிதாக வெடிக்கும் .
இந்த விசாவைப் பெற்றுக் கொண்டு அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள். அப்படி என்றால் பிரச்னை இன்னும் பெரிதாகும் தானே ?
நிச்சயமாக ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டினரது மனைவிகளும் அமெரிக்காவில் படிப்பதற்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கும் வசதியாக b4 என்ற விசா வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை வேலை செய்வதற்கான விசா என்றால் அது h1 b1 விசா தான். அது கிடைப்பதிலேயே தற்போது பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்றால் அது மற்ற விசா முறைகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். b4 வகை விசாக்களைப் பெற்றிருப்பவர்களும் வேலைகளை இழப்பார்கள்.

Modi: பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாடுகிறார்; பின்னணி என்ன?
1990களில் அமெரிக்காவில் தொழில்நுட்ப புரட்சி மிக வேகமாக நடந்த போது அவர்களுக்குத் திறமை வாய்ந்த வேலை ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதனால்தான் இந்த h1b1 முறையைக் கொண்டு வந்திருந்தார்கள். இப்பொழுது டிரம்ப் அரசாங்கம் இதில் இவ்வளவு கட்டுப்பாடுகளைச் செய்தால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் பல நாடுகளின் நிபுணர்களும் தொழில் நுட்ப வல்லுநர்களும் வெளியேறுவார்கள். அது அமெரிக்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் தானே ?
ட்ரம்ப் அரசாங்கத்தைப் பொருத்தவரை அமெரிக்காவைப் பிற்போக்குத்தனமான கொள்கைகளுடன் கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக ட்ரம்புடைய அத்தனை கொள்கைகளும் அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.
விசா நடைமுறையில் இவ்வளவு அதிக கட்டணம் மற்றும் இவ்வளவு கடுமையான விதிமுறைகள் இருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் நிச்சயம் வெளியேறுவார்கள் அப்படி வெளியேறினால் அமெரிக்காவில் இந்த வேலைகளைப் பார்ப்பதற்கான போதுமான ஆட்கள் இருக்க மாட்டார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை உயர்கல்வி படிப்பது என்பது பணம் அதிகம் செலவாகக் கூடிய ஒன்று.
இந்தியாவைப் போன்று இலவச கல்வியோ அல்லது அரசே மானியம் கொடுத்து படிக்க வைப்பது போன்றவைக் கிடையாது. அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் தட்டுப்பாடு என்பது இருக்கின்றது. அந்நாட்டின் கல்வி முறை பொருளாதார ரீதியில் பெரிதும் நம்பி இருப்பது வெளிநாட்டினரை தான்.
அவர்களை வராதீர்கள் என ட்ரம்ப் சொல்வதன் மூலமாகப் பெரும் வருமான இழப்பு அமெரிக்காவுக்கு ஏற்படும். ஐடி துறையில் வேலை பார்ப்பதற்கான போதுமான பட்டதாரிகள் இல்லாததால் நிறுவனங்களும் பெரும் சிரமங்களைச் சந்திக்கும்.

அமெரிக்காவின் ஐடி உள்ளிட்ட துறைகள் தொழிலாளர்களுக்கு இந்தியர்களைத்தான் பெரும்பாலும் நம்பி இருக்கின்றன. எனவே அந்த நிறுவனங்கள் இந்தியாவிலேயே அலுவலகங்கள் அமைத்தால் அது சரியாக வருமா ?
இந்தியாவைப் பொருத்தவரை அமெரிக்க நிறுவனங்களைக் கையாளக்கூடிய அளவிற்குப் போதுமான கட்டமைப்புகள் கிடையாது. டி சி எஸ் போன்ற சில நிறுவனங்கள் ஐடித்துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என்றாலும் கூட அவற்றை அவற்றால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் ஒட்டுமொத்த தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது.
மேலும் அமெரிக்க நிறுவனங்கள் இங்கு வந்து கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். இன்னொரு பக்கம் அமெரிக்க நிறுவனங்கள் அவுட்சோர்சிங் எனப்படும் முறையில் வெளிநாட்டு ஊழியர்களை அமெரிக்காவுக்கு வெளியே வேலை வாங்கினாலும் அதற்கும் மிக அதிகமான வரிகளை அவர் விதித்திருக்கிறார். எனவே அமெரிக்க நிறுவனங்களால் நிச்சயம் அந்தப் பாரத்தைத் தாங்க முடியாது. அதனால் ஒட்டுமொத்தமாகவே அமெரிக்காவிலிருந்து அவர்கள் வெளியேற நினைப்பார்கள் .

அப்படி வெளியேறக் கூடியவர்கள் தங்களது வீடு அலுவலகம் உள்ளிட்ட சொத்துகளை விற்பனை செய்வார்கள் ஒரே நேரத்தில் பலரும் சொத்துக்களை விற்க முன்வருவார்கள். ஆனால் வாங்குவதற்கு ஆள் இருக்க மாட்டார்கள் 20 வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் இதே போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டு கடுமையான விலை வீழ்ச்சி என்பது ஏற்பட்டது அது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்பொழுது கிட்டத்தட்ட அதே போன்ற சூழல்தான் ஏற்பட போகிறது. ஆனால் வெளியேறுபவர்கள் இந்தியா வருவார்களா என்றால் அது யோசிக்க வேண்டிய விஷயம்.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்குச் சாதகமானது என்றும் பல வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிற்கு வரும் என்றும் நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைவர் அமித்தாப் காந்த் சொல்லி இருக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர் சொல்வது சரிதான். ஆனால் அதில் இன்னொரு மிக முக்கியமான பார்வையை அவர் வெளிப்படுத்தவில்லை. ஐடி துறையின் நுகர்வோர் அமெரிக்காவில்தான் அதிகம். மேலும் அமெரிக்கர்களின் கடன் வாங்கும் பழக்கத்தைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியர்களைப் போல கடனை உடனடியாக அடைத்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள் கிடையாது. எந்த வகை வங்கி கடனாக இருந்தாலும் அவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் கட்டிக் கொள்ளலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள்.

H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?
எனவே அப்படிப்பட்டவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுவது என்பது இயலாத ஒன்று. மேலும் அமெரிக்க நீதிமன்றங்கள் இதை எப்படி அணுகப்போகின்றன என்பதையும் நாம் கொஞ்சம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டி இருக்கிறது.
குடியேறிகள் சட்ட விவகாரத்தில் பெரும்பாலும் அமெரிக்க அதிபரின் இத்தகைய நிர்வாக ரீதியிலான உத்தரவுகளின் அமெரிக்க நீதிமன்றங்கள் தலையிடுவது குறைவுதான். ஆனாலும் ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு இதுவரை நடக்காத பல விஷயங்கள் நடந்து வருகின்றன.
எனவே இந்த விஷயத்திலும் அமெரிக்கர்கள் சற்று பொறுமை காப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் இதன் உடனடி தாக்கம் இந்தியர்கள் மத்தியில் பெரிய அளவில் ஏற்படும். ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டைப் பொருத்து நீண்டகால பாதிப்பின் தன்மையை நாம் கணிக்கலாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs