கோவில்பட்டி: மர்மமான முறையில் உயிரிழந்த 10 வயது சிறுவன்; துப்பு கிடைக்காமல் திணற...
Haiti: மாந்திரீகத்தால் மகன் இறந்ததாக ஆத்திரம்... 200 பேரைக் கொன்ற நபர்! - என்ன நடக்கிறது ஹைதியில்?
ஹைதி
கியூபா, ஜமைக்கா அருகிலும், கரீபியன் கடலிலும் இருக்கும் ஒரு குட்டி தீவு நாடு.
கடந்த ஒரு வாரத்தில் இந்த குட்டி நாட்டில், கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் போரினாலோ, கலவரத்தாலோ இறக்கவில்லை.
இவர்களது கொலைக்கு காரணம் 'மாந்திரீகம்'.
ஆம்...மாந்திரீகம் தான். சில நாட்களுக்கு முன்பு, அந்த நாட்டில் இருக்கும் ஒரு பகுதியில் இருக்கும் கேங் லீடரின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன என்று உள்ளூர் வூடு (Vodou) மந்திரவாதியிடம் கேட்டபோது, 'உள்ளூரில் மந்திரம் தந்திரம் செய்யும் வயதானவர்கள் தான் கேங் லீடரது மகனின் மரணத்திற்கு காரணம்' என்று கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த கேங் லீடர் அந்தப் பகுதியில் இருக்கும் வூடு மந்திரம் செய்பவர்கள் என்று அவர் நினைத்தவர்களை கொலை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். இதில் 60 மற்றும் 80 வயதானவர்கள் தான் அதிக அடக்கம். அந்த உத்தரவின் பேரில் அரங்கேற்றப்பட்டது தான் மேலே சொன்ன கொலைகள்.
இந்த கொலைகள் பின்பு அந்த ஊரில் கலவரமாக மாறி பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
வூடு என்றால் என்ன?
வூடு என்றால் 16-வது மற்றும் 17-வது நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் மத்தியில் உருவான ஒரு மதம் ஆகும்.
ஹைதியில் இது புதிதல்ல...
ஹைதியின் மொத்த மக்கள் தொகையே 1.17 கோடி தான். ஹைதியில் இந்த மாதிரியான கொலைகள் மற்றும் கலவரங்கள் புதிதல்ல. இது அடிக்கடி அங்கே தலைவிரித்தாடும் விஷயம் தான். தற்போது நடந்துள்ள மாந்தீரிக கொலையின் எண்ணிக்கை சேர்த்தால் இந்த ஆண்டு மட்டும் ஹைதியில் 5,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த 5,000 பேரும் மாந்தீரிகம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஹைதி அரசு?!
ஹைதியில் இருக்கும் கேங்குகள் எண்ணிக்கையில் அடங்காதவை. ஹைதி அரசு அவ்வளவு பலமானது அல்ல. அரசின் அந்த இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்த கேங்குகள் நிரப்பி செயல்பட்டு வருகின்றன.
அந்த நாட்டில் கூட்டு பாலியல் வன்முறைகள், போதை மருந்து கடத்தல், கடத்தல்கள், கொலைகள் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் மிக மிக சகஜம்.
நாட்டின் நிலை
ஹைதியில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உணவு பாதுகாப்பு இன்மையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 7 லட்சம் மக்கள் உணவு மற்றும் கேங்குகளின் பிரச்னைகளால் இடம்பெயர்ந்துள்ளனர்.
இலத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கரீபியன் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு இது தான். அங்கே மட்டுமல்ல, உலக அளவில் ஒப்பிடும்போதும் இது மிகுந்த ஏழ்மையான நாடு.
உலக வங்கி, 2023 அறிக்கையின் படி, ஹைதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,693 அமெரிக்க டாலர் ஆகும். (இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பின்படி, ரூ.1,43,685.72)
இயற்கையும்...
ஹைதியின் இந்த பொருளாதார மற்றும் வாழ்வாதார நிலைக்கு கேங்குகள் மட்டும் காரணமல்ல... இயற்கையும் தான் காரணம். அங்கே இருக்கும் எரிமலைகள், நிலநடுக்கம், வெள்ளம் போன்ற பிரச்னைகளும் அவர்களுக்கு தடையாக இருக்கின்றது.
ஆட்சேர்ப்பும்...
கேங்குகள் என்றால் நம்மூர் சினிமாக்களில் காட்டப்படும் கட்ட பஞ்சாயத்து, கொலை போன்ற சம்பவங்கள் மட்டும் செய்பவர்கள் அல்ல. முக்கிய ரோடுகளின் கன்ட்ரோல்கள், சுங்கங்களில் இருந்து வருமானம் பெறுவது, தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம், போக்குவரத்துகள் போன்ற பல முக்கிய துறைகள் ஹைதியில் இருக்கும் கேங்குகளின் கையில் தான்.
இதையெல்லாம் விட ஒருபடி மேலே, இந்த கேங்குகள் ஆட்சேர்ப்புகளையும் செய்கிறது. இதை அவர்கள் ஸ்டைலில் கூற வேண்டுமானால் 'வேலைவாய்ப்பு'. கேங்குகளில் போய் யார் சேர்வார்கள் என்று நினைக்க வேண்டாம். அங்குள்ள இளைஞர்களுக்கு 'இந்த கேங்கில் வேலைக்கு சேர வேண்டும்' என்பது போன்ற கனவுகளே உண்டாம்.
இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்றால் குழந்தைகளில் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. கேங்குகள் குழந்தைகளை ஆயுத வேலைக்காக சேர்க்கின்றனர். இது கடந்த ஆண்டில் 70 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எட்டு வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளை கட்டாயமாக கேங்குகளில் வேலைக்கு எடுக்கின்றனர்.
மேலும், கேங்குகளை எடுத்துகொண்டால், அதில் உள்ளவர்களில் 30 - 50 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களே இருக்கிறார்கள்.
மிலிட்டரி, போலீஸ்...
அந்த நாட்டில் மிலிட்டரி, போலீஸ் எல்லாம் கிடையவே கிடையாதா என்றால் 'இருக்கிறது'... ஆனால், பெயருக்கு இருக்கிறது. 1995-ம் ஆண்டு கலைக்கபட்ட ராணுவம், மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், அந்த ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை வெறும் 500 மட்டுமே.
போலீஸ்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பதவியில் மட்டுமே 'போலீஸ்' என்று சொல்லும், அதன் பொருளும் அடங்கியிருக்கும். அவர்களால் போலீஸாக செயல்பட முடியாது.
தடைக்கல்...
ஹைதி நாட்டின் வளர்ச்சிக்கான தடைகள் அரசியல் நிலையற்ற தன்மை, அதிகரிக்கும் வன்முறை, பாதுகாப்பின்மை போன்றவை ஆகும்.
இரண்டே வழிகள்!
இவ்வளவுக்கும் மத்தியில் அந்த நாட்டு மக்களுக்கு சற்று ஆசுவாசம், அங்கே ஐக்கிய நாடு அமைந்திருப்பது தான். அங்கே நடக்கும் வன்முறைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதில் ஐக்கிய நாட்டிற்கு முக்கிய பங்கு உண்டு.
ஹைதியின் மோசமான நிலையை சரிசெய்ய இரண்டே வழிகள் தான் உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். ஒன்று, அந்த நாட்டில் சர்வதேச ராணுவ படையை இறக்குவது. இரண்டாவது, அரசியலையும், அரசமைப்புகளையும் பலமாக்குவது ஆகும்.