Health: கருத்தரிப்பும் மார்பக மாற்றங்களும்... கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டியவை!
''ஒரு பெண் கருவுறும்போதும் அடுத்து, குழந்தைக்குப் பாலூட்டும்போதும் மார்பகங்களில் சில மாற்றங்கள் நிகழும். வெட்கப்பட்டுக்கொண்டு பல பெண்களும் இதை வெளியில் சொல்வதில்லை. தாங்க முடியாத நிலையில் மருத்துவரிடம் செல்லும்போது அறுவைசிகிச்சை செய்கிற அளவுக்குக்கூட பிரச்னை வரலாம்” என்கிற மகப்பேறு மருத்துவர் விஜயா, மகப்பேற்றையொட்டி மார்பகங்களில் வருகிற மாற்றங்கள், அசௌகர்யங்கள் பற்றி விரிவாகச் சொல்கிறார்.
அடுத்த சைஸ் பிராவுக்கு மாறுங்கள்!
கருத்தரிக்கும்போது பெண்ணின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். குழந்தைக்குப் பால் கொடுக்க ஏதுவாக மார்பகங்களின் அளவு பெரிதாகும். குழந்தைக்குப் பாலைக் கொண்டு வருகிற நாளங்கள் (Milk Ducts) விரிவடைய ஆரம்பிப்பதால் மார்பகங்கள் கனமாகும். சிலருக்கு மார்பகங்களில் லேசாகத் தட்டினாலே துடித்துப்போகிற அளவுக்கு வலி இருக்கும். இதனால் பிரா அணிவதையே இந்த நேரத்தில் சிலர் விட்டுவிடுவார்கள். மார்பகம் கனமாக இருப்பதால் உள்ளாடை அணியாமல் இருந்தால் சுலபமாகத் தளர்ந்துவிடும். அதற்கு பதில், கப் சைஸ் மற்றும் சுற்றளவில் அடுத்த சைஸ் பிராவை அணியலாம். அதனால் கர்ப்பமாக இருக்கும்போதும் பாலூட்டும் போதும் பிரா அணிவதைத் தவிர்க்காதீர்கள்.
இரண்டு மார்பிலும் அருந்த வேண்டும்!
குழந்தை பிறந்த பிறகு, மார்பகங்களில் பால் கட்டிக்கொள்வது, காம்புகள் வெடிப்பது, புண்ணாவது போன்ற பிரச்னைகளை எல்லா அம்மாக்களுமே சந்திப்பார்கள். ஒரு மார்பில் பால் அருந்தியவுடனே குழந்தைகள் உறங்க ஆரம்பித்துவிடலாம். அதனால் இன்னொரு மார்பில் பால் தராமலே அம்மாக்களும் விட்டு விடுவார்கள். ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கழித்து குழந்தை கண்விழிக்கும் போது, பால் தராமல் விட்ட மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதி தரும். இதனால், மார்பகங்களில் வலியும் காய்ச்சலும் வரலாம். குழந்தை ஒரு மார்பில் ஐந்து நிமிடங்கள் பால் அருந்தினால், அடுத்த மார்பிலும் ஐந்து நிமிடங்கள் அருந்த வேண்டும். இப்படிச் செய்தால் பால் கட்டிக்கொள்ளாது.
குழந்தை பால் குடிக்க ஆரம்பிக்கும்போது முதல் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு வெளிவரும் பால் சத்துகள் குறைவாகத் தண்ணீர் போலத் தான் இருக்கும். அதன்பிறகு வருகிற பாலில் தான் கொழுப்பும் சத்துகளும் அதிகமாக இருக்கும். குழந்தை ஒரு மார்பில் ஐந்து நிமிடங்கள்கூட பால் அருந்தவில்லையென்றால், உடல் எடை போடாது.
அழவிட்டு பாலூட்டாதீர்கள்!
பசியில் கொஞ்ச நேரம் அழவிட்டு பால் கொடுத்தால், குழந்தை நன்கு குடிக்கும் என்பார்கள் சிலர். உண்மையில் அந்த நேரத்தில் குழந்தைக்குப் பொறுமை போய், மார்புக்காம்பை கவ்விப் பிடித்துக் குடிக்க ஆரம்பிக்கும். இதனால், அந்த இடத்தில் வெடிப்புவிடும். குழந்தை வாய் வைத்தாலே அம்மா வலியால் துடிப்பார். குழந்தை பாலுக்காகப் பக்கவாட்டில் சாய்ந்து அம்மாவைத் தேடும்போதோ, பால் குடிக்கிற நினைவில் உதட்டைச் சப்பும்போதோ பால் கொடுக்க ஆரம்பித்துவிடுங்கள்.
பொசிஷன் முக்கியம்!
நன்கு சாய்ந்து உட்கார்ந்து, உடலை வளைத்து குழந்தையின் அருகே அம்மாக்கள் செல்லாமல் குழந்தையை உங்கள் நெஞ்சோடு அணைத்துப் பாலூட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தை நன்றாகப் பால் அருந்தும். குழந்தையை சரியான பொசிஷனில் வைக்கவில்லையென்றால், மார்புக்காம்பை மட்டுமே கவ்விப்பிடித்து பால் குடிக்கும். இதனால் அங்கே வெடிப்பு வரும். வலி தாங்கமுடியாத அம்மாக்கள் வெடிப்பு வந்த மார்பில் பால் கொடுக்கவே பயந்து தவிர்ப்பார்கள். விளைவு, பால் கட்டிக் கொண்டு இன்ஃபெக்ஷன் ஆகலாம்.
என்ன தீர்வு?
வெடிப்பு ஏற்பட்டால் தேங்காய் எண்ணெய் தடவலாம் அல்லது மருத்துவரை அணுகி, அதற்கான க்ரீம் வாங்கித் தடவலாம். தாய்ப் பாலையே இரண்டு சொட்டு கள் எடுத்து வெடிப்பின் மீது தடவலாம். ரொம்பவும் முடியாதவர்கள் நிப்பிள் ஷீல்டு பயன்படுத்திப் பாலூட்டலாம்.
இதுதான் காரணம்...
குழந்தைக்குப் பாலூட்டும் போது பொதுவாக எல்லா அம்மாக்களுமே குழந்தையை அருகே கொண்டுவராமல் தன் உடம்பை வளைத்துக்கொண்டு பிள்ளை அருகே செல்வார்கள். இதனால் இடுப்புவலியும் கழுத்துவலியும் வந்துவிடும். சிசேரியன் நேரத்தில் முதுகில் ஊசி போட்டதால்தான் முதுகு வலி வந்துவிட்டது என்று பலரும் புகார் சொல்வார்கள். அதற்கு காரணம், அம்மாக்கள் உடம்பை வளைத்துப் பாலூட்டுவதுதான்.