பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!
History of Internet: போர் தொழில்நுட்பம் முதல் 10G வரை! | Explained
இந்த கட்டுரையை படிப்பதற்கு உங்களுக்கு பலவிதமான தொழில்நுட்பங்கள் இந்த தருணத்தில் உதவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அதிமுக்கியமானதும், இன்றியமையாததும் இணையதளம்.
இணையதளம் செயல்படத் தேவையான கட்டமைப்புகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கினாலும், யாரும் அதற்கு உரிமைகோர முடியாது. இணையத்தை நிர்வகிக்க சில அமைப்புகள் செயல்படுகின்றன.
இன்றைய 2கே கிட்ஸால் இணையம் இல்லாத வாழ்வை கற்பனை செய்யவே முடியாது. ஒரு கடிதத்தைப் பெற வாரக்கணக்காக காத்திருப்பதை, சிறிது தகவலைப் பெற நூலகத்தில் புத்தகங்களை அலசுவதை, ஒவ்வொரு வேலைகளிலும் தகவல் தொடர்புக்கு பல்வேறு கருவிகளைப் பயன்படுத்துவதை, நண்பருடன் உரையாட நாள்கணக்காக காத்திருப்பதை... இணையம் மாற்றி விட்டது.
இப்போது சீனா 10ஜி என்ற அதிவேகமான இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைய வேகத்தில் நாடுகள் போட்டிப்போடுகின்றன. கடலுக்கு அடியிலும் விண்வெளியிலும் இணையதள சர்வர்கள் இருக்கின்றன.

இன்றைய வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ள இணையம், ஒரு போர் கால தொழில்நுட்பமாக எளிமையான கண்டுபிடிப்பாக தனது பயணத்தைத் தொடங்கியது.
சராசரியாக 50 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற ஓர் தொழில்நுட்பம் என இதனைக் கூறலாம். இணையம் பிறந்து, தவழ்ந்து, நடந்து தவிர்க்க முடியாத தொழிலநுட்பமாக மாறியகதை எந்தஒரு சயின்ஸ் பிக்ஷனை விடவும் சுவாரஸ்யமானது.
தியரி டு ப்ராக்டிகல்!
இணையத்தின் கண்டுபிடிப்புக்குப் பின்னால் பல பிரமாண்டமான மனித மூளைகள் செயல்பட்டுள்ளன. வன்னேவர் புஷ் என்ற அமெரிக்க பொறியியலாளர் As We May Think,” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில், Memex என்ற கற்பனைக் கருவி பற்றி எழுதினார்.
ஒரு தனிநபரின் புத்தகங்கள், பதிவுகள் மற்றும் தொடர்புகள் அனைத்தையுமே சேமித்துவைக்கக் கூடிய கருவி. இன்றைய இணையத்தின் முக்கிய கூறுகலான ஹைப்பர்டெக்ஸ்ட், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட தரவுகள் போன்றவை அந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் புஷ்ஷின் தலைமையில் செயல்பட்டது. போர்காலத்தில் தொழில்நுட்பம் மிக முக்கிய அங்கமாக பார்க்கப்பட்டது. முக்கியமாக தகவல் பகிர்வு குறித்து புஷ் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அவை பின்னாளில் இணையம் என்ற தொழில்நுட்பம் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தன.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பனிப்போர், தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்புத்துறைகளில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் உருவாக வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் 1957-ம் ஆண்டு மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனம் (ARPA) என்ற அமைப்பை உருவாக்கியது அமெரிக்கா.
சில ஆண்டுகள் கழித்து உளவியலாளர் மற்றும் கணினி விஞ்ஞானி ஜே.சி.ஆர். லிக்லைடர், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கனிணி நெட்வொர்க் பற்றி எழுதினார். இரண்டு கனிணிகள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்வதை கற்பனை செய்தார். அதுதான் பின்னாளில் இணையமாக வளர்ந்தது.
1965-ம் ஆண்டு முதல்முறையாக பரந்த பரப்பில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கை உருவாக்கும் சோதனை நடைபெற்றது. லாரன்ஸ் ராபர்ட்ஸ் என்ற அறிஞர் டெலிபோன் லைன்களை பயன்படுத்தி தொலைதூரத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் இடையில் தகவல் தொடர்பு ஏற்படுத்துவதை சாத்தியப்படுத்தினார். இது மிகப் பெரிய அளவிலான வலையமைப்பை உருவாக்க அடித்தளமாக அமைந்தது.
1969-ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்புத்துறை ARPANET என்ற உலகின் முதல் packet-switching நெட்வொர்க்கை உருவாக்கியது. முதன்முதலாக (அப்போதைய ஒரு அறை அளவிலான) ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொன்றுக்கு அனுப்பப்பட்ட வார்த்தை Login, இதில் Lo மட்டும்தான் சென்றது. அரை வெற்றி ஆனாலும் அது வரலாற்றில் பேசப்படக் கூடிய வெற்றியாக அமைந்தது!
அந்த ஆண்டின் முடிவில் அந்த நெட்வொர்க்கில் 4 கம்ப்யூட்டர்களை இணைத்திருந்தனர்.
1971-ம் ஆண்டு ரே தாம்லிம்சன் என்ற பொறியாளர்தான் ARPANET-ல் உள்ள இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையில் முதல் ஈ-மெயிலை அனுப்பினார்.
ஈ-மெயில் அனுப்புபவர் பெயருக்கும் பயன்படுத்தும் கம்பியூட்டரின் பெயருக்கும் நடுவில் அவர் @ குறியை எழுதினார். இது இன்றுவரைப் பயன்படுத்தப்படுகிறது.
நவீன நெட்வொர்க்கிங்கின் அடித்தளம்!
1973-ம் ஆண்டு ARPANET-ன் ஒரு அங்கம் நார்வேயில் நிறுவப்பட்டபோது முதல் சர்வதேச நெட்வொர்க் உருவானது.
இது அறிவியலாளர்கள் ராபர்ட் கான் மற்றும் வின்டன் செர்ஃப் TCP/IP (பரிமாற்றக் கட்டுப்பாட்டு நெறிமுறை (அ) இணைய நெறிமுறை) கண்டுபிடித்ததனால் சாத்தியமானது. TCP/IP பின்னாளில் இணையத்துக்கான நிலையான நெறிமுறைகளாக மாறியது. இதைத் தொடர்ந்துதான் இணையத்தைக் குறிப்பிடுவதற்கு Internet என்ற வார்த்தைப் பயன்பாடு உருவானது.
இணையம் மெதுவாக சமூகத்துக்குள் நுழைந்தது 1976-ம் ஆண்டு ராணி எலிசபெத் II தனது முதல் ஈ-மெயிலை அனுப்பினார். 1978-ம் ஆண்டு கேரி துர்க் என்ற மார்கெட்டிங் நிபுணர் உலகின் முதல் ஸ்பாம் மெயிலை அனுப்பினார்.
இன்று மார்க்கெட்டிங் உலகை முற்றிலும் கைகொண்டிருக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் தொடக்கம் முதல் அடி அதுதான்.
எல்லோருக்குமான இணையம்
TCP/IP என்பது இணையத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகள். தரவுகளை அல்லது செய்திகளை சரியான பாக்கெட்டுகளாக பிரித்து சரியான கம்ப்யூட்டருக்கு கொண்டு சேர்க்க இது பயன்படுகிறது.
ARPANET முழுவதுமாக தங்களது இணையத் தொடர்புகளை TCP/IP நெறிமுறைக்கு ஏற்ப மாற்றியது. இன்று கிட்டத்தட்ட அனைத்து இணைய தொடர்புகளும் இந்த நெறிமுறைகளின் படியே இயங்குகின்றன.
நவீன இணையதத்தின் வளர்ச்சியில் TCP/IP போன்ற மற்றொரு பெரிய அடி, டொமைன் பெயர் அமைப்பு (DNS). பால் மொக்கபெட்ரிஸ் என்ற அறிவியலாளர் .com, .org மற்றும் .edu போன்ற டொமைன்களை கண்டுபிடித்தார். இது இணையப் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கியது.

1985-ம் ஆண்டு Symbolics.com என்பதுதான் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட டொமைன் பெயர். இதன் பிறகு டொமைன்கள் தான் அதிகமான இணையதள பரவலாக்கத்துக்கு வழிவகுத்தன.
கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த இணையதளத்தை அனைத்து மக்களுக்குமானதாக மாற்றியது டிம் பெர்னர்ஸ்-லீ என்ற பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளரின் கண்டுபிடிப்பு.
இணையத்தில் உள்ள அனைத்து டொமைன்களையும் சேவைகளையும் ஒரே வலைப்பின்னலின் கீழ் கொண்டுவந்தது www. (world wide web).
இதனால் மக்கள் பயன்படுத்த வேண்டிய தளத்தின் டொமைன் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஹைப்பர் லின்க் மூலம் அனைத்து தரவுகளும் ஆவணங்களும் இணைக்கப்பட்டன.
பெர்னர்ஸ்-லீ முதல் ப்ரௌசரை உருவாக்கினார், வலைத்தள பக்க எடிட்டர், செர்வர்கள் மூலம் அனைவருக்குமான world wide web உருவானது. ARPANET வழக்கொழிந்து போனதால் இழுத்து மூடப்பட்டது.
வணிகமயமான இணையம்
பல ப்ரௌசர்கள் உருவாக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் முதன்முதலில் பிரபலமான ப்ரௌசர் மொசைக் தான். இதன் வரைகலை நிறைந்த முகப்பு பக்கம் (graphical interface) தொழில்நுட்பத்தை அறிந்திடாதவர்களும் இணையத்தைப் பயன்படுத்துவதை எளிமையாக்கியது.
மொசைக்கின் வருகைக்குப் பிறகு இணையதளம் வேகமாக பிரபலமடைந்தது. 1994-ல் யாகூ, அமேசான் போன்ற தளங்கள் தொடங்கப்பட்டன. மின்-வணிகம் (இ-காமர்ஸ்) உருவானது. முதன்முதலாக இணையம் வாயிலாக ஆர்டர் செய்யப்பட்ட பொருள் ஒரு பீட்சா என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோ சாஃப்டின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஈபே போன்ற தேடுபொறிகளுக்கு இடையில் பெரும் போட்டிகள் நடைபெற்றது. இன்றைய பேஸ்புக் பதிவுகள் போல பிளாகுகள் எழுதப்பட்டன. பிளாக் எழுதுபவர்கள் பிரபலமாக இருந்தனர்.
1995-ம் ஆண்டு ஜாவா புரோகிராமிங் மொழி உருவாக்கப்பட்ட பிறகு வலைத்தள பக்கங்கள் பலவிதமாக கண்டெண்ட்களைப் பகிர முடிந்தது. இணையம் வணிக பயன்பாடுகள் மிக்க ஒன்றாக மாறியது. ஆன்லைனில் தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கான மிகவும் உதவியது.
1998-ம் ஆண்டு, லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் கூகுளை உருவாக்கினர். அதன் தேடல் வழிமுறை விரைவாக ஆன்லைனில் தகவல்களைக் கண்டறிய மிகவும் திறமையான வழியாக மாறியது. அல்காரிதம் என்ற வார்த்தை முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
மொபைல் இண்டெர்நெட்டின் அசுர வளர்ச்சி
கூட்டு இணைய கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா 2001-ல் அறிமுகமானது. இதுவரை இணையத்தில் அதிகம் க்ளிக் செய்யப்பட்ட தளங்களில் ஒன்றாக விக்கிபீடியா திகழ்கிறது.
அதுவரை இருந்த தகவல் பெறும் வழிமுறையை முற்றிலுமாக மாற்றியது. தரவுகள் இலவசமானதாக அனைவருக்குமானதாக மாறின.
தொடர்ந்து 2004-ல் கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் சமூக வலைப்பின்னலாக பேஸ்புக் வந்தது. பின்னாள்களில் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக மாறியது.

2005-ல் யூடியூப் பிறந்தது. கண்டெண்ட் கிரியேட்டர்கள் என்ற புதிய குழுவினர் உருவாகினர். மக்கள் பொழுதுபோக்குக்காக இணையத்தைச் சார்ந்திருக்கத் தொடங்கினர். வைரல் என்ற வார்த்தை புதிய அர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டது.
2005 - 2010 இடைப்பட்ட காலத்தில் மொபைலில் இணையம் பயன்படுத்தும் பழக்கம் பெருகியது. இதில் ஆப்பிள் வெளியிட்ட டச் ஸ்கிரீன் ஐபோன் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.
2010-ல் இன்ஸ்டாகிராம் அறிமுகமானது. சமூக வலைத்தளங்கள் வாழ்வின் அங்கமாகத் தொடங்கின. டிஜிட்டல் கருவிகள் அனைத்திலும் இணையம் பயன்படுத்தப்படப்பட்டது. இண்டெர்நெட் இருக்கும் கருவிகள் 'ஸ்மார்ட்' கருவிகள் ஆகின.
இணையத்தைக் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. அல்காரிதம்கள் தனி மனிதர்கள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்துவது எதிர்க்கப்பட்டது.

இணையம், சமூக ஊடகங்களில் உள்ள பயனர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் உருவாகின. கோவிட் காலத்தில் இணையம்தான் மொத்த உலகத்தையும் இயக்கியது. மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவும், கல்வி கற்கவும் தொடங்கியதுடன் நிகழ்வுகள் அனைத்தையும் ஆன்லைனில் விர்ச்சுவல் ரியாலிட்டியில் நடத்தத் தொடங்கினர்.
ஆன்லைன் மையமான எகானமிக்கு மாறும் விதமாக கிரிப்டோ கரன்சிகள் உருவாகின. இன்று செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் முக்கியத்துறைகள் இணையத்தால் பெரும் மாற்றம் கண்டுள்ளன. தற்போது குவாண்டம் கம்ப்யூட்டிங் பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சாதாரணமாக ஒரு போர் கால பயன்பாடாக தனது வரலாற்றைத் தொடங்கிய இணையம் இன்று வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதன் எதிர்க்காலம் இன்னும் அதீத தாக்கம் நிறைந்ததாக இருக்கும். அதை பாதுகாப்பானதாகவும் உருவாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது!