HIT3: `லோகேஷ் கனகராஜின் LCU-வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன்’ - நடிகர் நானி ஓப்பன் டாக்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இருக்கிறார். LCU என்ற ஒரு யுனிவர்ஸை உருவாக்கி ரசிகர்களை அதில் கட்டிப்போட்டிருக்கிறார் என்றால் மிகையல்ல. தற்போது ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சுருதி ஹாசன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் HIT3 வரும் 1-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நடிகர் நானி ஒரு தனியார் சேனாலுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
சினிமா யுனிவர்ஸ்
அதில்,``மேற்கத்திய திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட சினிமா யுனிவர்ஸ் இப்போது இந்தியாவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில்... லோகேஷ் கனகராஜ், பிரசாந்த் வர்மா போன்ற இயக்குநர்கள் இதில் முன்னணியில் இருக்கின்றனர். மக்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் அல்லது ஒரு படத்தைச் சுற்றி உற்சாகத்தை உருவாக்கும் எதுவும் சினிமாவுக்கு நல்லது என நம்புகிறேன்.

நான் ஏற்கெனவே HIT போன்ற சினிமா யூனிவரசில் இணைந்துவிட்டேன். அதேப் போல லோகேஷ் கனகராஜின் படைப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் படைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் ஏதாவது நடந்தால், நானும் அவருடைய சினிமா உலகில் இணைவது நடக்கும். அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்றார்.