விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!
IKIGAI : ஜப்பானியர்கள் போல நாமும் 100 ஆண்டு வாழலாமா?
நூறு வயது வரை வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். இந்த ஆசை, ஜப்பானில் இருக்கிற ஒகினாவா (Okinawa) தீவு மக்களை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாக நிஜமாகிக்கொண்டே இருக்கிறது.
உலகளவில் நூறு வயதுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிற ஐந்து நீல மண்டலங்களில், ஜப்பானில் இருக்கிற 'ஒகினாவா' தீவும் ஒன்று. அதென்ன நீல மண்டலம்..? உலகளவில், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழும் மக்கள் அடங்கிய பகுதி 'நீல மண்டலங்கள்' என குறிப்பிடப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர்!
ஜப்பானில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 3-வது திங்கட்கிழமையன்று 'முதியோர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நடத்தப்பட்ட முதியோர் கணக்கெடுப்பின்படி, ஒகினாவா தீவில் 99,763 பேர் நூறு வயதை கடந்து வாழ்வதாக 'தி வயர்' பத்திரிகை தெரிவிக்கிறது. இந்த முதியவர்கள், தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.
அந்த ரகசியத்தின் பெயர் இகிகை (ikigai)
சரி, அப்படி என்னென்ன செய்து இந்தத் தீவைச் சேர்ந்தவர்கள் நூறு வயதைக் கடந்தும், ஆரோக்கியமாகவும் வாழ்கிறார்கள்..? இதே கேள்வி ஹெக்டர் கார்சியா (Hector Garcia) மற்றும் பிரான்செஸ்கோ மிராலஸ் (Francesc Miralles) என்கிற இரண்டு எழுத்தாளர்களும் எழுந்தது. அந்தத் தீவில் தங்கி, அங்கிருக்கும் மூத்த குடிமக்களுடன் பேசி, அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தைக் கேட்கிறார்கள். அவர்களும் அதை வெளிப்படுத்துகிறார்கள். அந்த ரகசியத்தின் பெயர் இகிகை (ikigai).
ஜப்பானிய மொழியில் 'iki' என்றால் வாழ்தல். 'gai' என்றால் அர்த்தம். அதாவது, ஒகினாவா தீவு வாழ் மக்கள் வாழ்வதற்கான அர்த்தம் தெரிந்து வாழ்வதுதான், அவர்களுடைய இந்த நீண்ட ஆயுளின் ரகசியம் என்பது தெரிந்திருக்கிறது. அந்த 'இகிகை' வாழ்க்கை முறையை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்கள். அதன் பெயர் 'The Japanese secret to a long and happy life.'

அந்த ரகசியம்
* நீங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும். அர்த்தமுள்ள வாழ்க்கை ஆயுளையும் தரும். இதுதான் 'இகிகை'யின் அடிப்படை.
* உங்கள் தட்டில் இருக்கிற உணவில் 80 சதவிகிதம் மட்டுமே உண்ணுங்கள். அதாவது, நீங்கள் சாப்பிட விரும்புவதில் 80 சதவிகிதம் மட்டும் உண்ணுங்கள். வயிற்றை நிரப்பாதீர்கள்.
பதற்றமில்லாமல் வாழுங்கள்..!
* எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். வயது அதிகமானவர்கள், பெரும்பாலும் சுறுசுறுப்பாக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அவர்களுடைய சுறுசுறுப்பே அவர்களுடைய நீண்ட ஆயுளுக்குக் காரணம்.
* உங்கள் வாழ்க்கையை பதற்றமில்லாமல் நிதானமாக கையாளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மீது உங்களுக்கே நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். அது உங்கள் வாழ்க்கைக்கு அதிக அர்த்தத்தைச் சேர்க்கும். முதல் பாயிண்ட்டில் சொன்னதுபோல, அர்த்தமுள்ள வாழ்க்கை ஆயுளையும் தரும். இனிகை வாழ்க்கை முறையில் இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

Radio Taiso என்கிற உடற்பயிற்சி
* இதுவோர் உடற்பயிற்சி. பெயர் Radio Taiso. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ஒரு ரேடியோ உடற்பயிற்சி நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதால்தான் இதற்கு இந்தப் பெயர். 'Taiso' என்றால் ஜப்பானிய மொழியில் உடற்பயிற்சி என்று அர்த்தம். 1928-ம் வருடம் ஜப்பானிய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த உடற்பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த உடற்பயிற்சி உடலின் அனைத்து முக்கியமான தசைகளுக்கும் வலுவை அளிக்குமாம். ஒகினாவா தீவில் இருப்பவர்கள் மட்டுமல்ல, ஜப்பானில் இருக்கிற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தினமும் இந்த உடற்பயிற்சியை செய்கிறார்கள். வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே செய்யப்படுகிற இந்த உடற்பயிற்சியும் ஒகினாவா மூத்தவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். Radio Taiso என்று டைப் செய்தால், யூ டியூபில் வீடியோக்கள் கொட்டுகின்றன.

நண்பர்கள் சூழ் வாழ்வு
* நல்ல நண்பர்கள் சூழ இருப்பதும் நீண்ட ஆயுளைத்தரும் என்கிறது ஒகினாவா மக்களின் வாழ்க்கை. தங்கள் கிராமங்களில் இருக்கிற நண்பர்களுடன் ஓய்வு நேரத்தை பேசியும், விளையாடியும் கழிப்பார்களாம். இந்த வகை மகிழ்ச்சி நீண்ட ஆயுளைத்தரும் என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி ஒன்றும் உறுதிபடுத்தியிருக்கிறது.
* சிரியுங்கள்... மகிழ்ச்சியையும், மகிழ்ச்சியானவற்றையும் உங்களுக்குத் தந்தவர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.
* இறந்த காலத்தைக் குறித்து வருத்தப்படாமல், எதிர்காலத்தைக் குறித்து அச்சம்கொள்ளாமல் நிகழ்காலத்தைக் கொண்டாடி வாழுங்கள்.
நாமும் 100 வயது வாழ முயற்சி செய்வோமா..?
இவையனைத்துமே நம் வீட்டுப் பெரியவர்களும் சொன்னவைதானே..! நம் பாட்டனும், பாட்டியும்கூட இப்படித்தானே வாழ்ந்தார்கள் என்று தோன்றுகிறதல்லவா..? ஆம், இவைதான் ஜப்பானியர்களின் 100 வயதைக் கடந்த ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியம். இன்றைக்கு அவற்றையெல்லாம் மறுபடியும் 'இகிகை' என்ற ஜப்பானிய வார்த்தையில் காலம் நமக்கு நினைவூட்டுகிறது. அவற்றை முடிந்தவரை பின்பற்றி, வாழ்வியல் நோய்கள் அண்டாமல், நாமும் 100 வயது வாழ முயற்சி செய்வோமா..?
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...