Ilaiyaraaja: ``என் ஒரு மாத சம்பளத்தை தேசத்துக்காக வழங்குகிறேன்" - இளையராஜா அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக, நமது உண்மையான ஹீரோக்கள், எல்லைகளில் துணிச்சலுடன், பயத்தைக் கடந்து, துல்லியமாக, செயல்படுவார்கள் என்பதை அறியாமலே, இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் இசையமைத்த எனது முதல் சிம்பொனிக்கு "Valiant" (மிகுந்த தைரியத்தையும் துணிச்சலையும் குறிக்கும் சொல்) என்று பெயரிட்டிருக்கிறேன்.

நமது தன்னலமற்ற துணிச்சலான வீரர்கள் எதிரிகளை மண்டியிடச் செய்வார்கள் என நம்புகிறேன்.
ஜய பேரிகை கொட்டடா! கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா! - பாரதியார்.
ஒரு பெருமைமிக்க இந்தியனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும், நமது எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கவும் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்களின் "Valiant" முயற்சிகளுக்காக எனது இசை நிகழ்ச்சி கட்டணம், மற்றும் ஒரு மாத சம்பளத்தை "தேசிய பாதுகாப்பு நிதி"க்கு ஒரு சிறிய பங்களிப்பாக வழங்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.