அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்...
Kumbh Mela: `ரூ.7,500 கோடி பட்ஜெட்; 40 கோடி பக்தர்கள்; 1.6 லட்சம் டென்ட்கள்’ - கும்பமேளா ஏற்பாடுகள்
வட இந்திய இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இன்று முதல் பிப்ரவரி 26 வரை தொடரும் இந்த கும்பமேளாவில், 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கும்பமேளாவிற்காக ஆற்றங்கரைகளில் எட்டு நிரந்தரப் படித்துறைகள் உட்பட 41 படித்துறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு 2.1 ஆயிரம் கோடி நிதியுதவி அளித்திருக்கும் நிலையில், உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு ரூ.5,400 கோடி கும்பமேளா பட்ஜெட் என வரையறுத்திருக்கிறது. இந்த நிகழ்வுக்காக 13 ஆயிரம் ரயில்கள், 7 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 10,000 முதல் 20,000 பக்தர்களை நிர்வகிப்பதற்கு சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த கும்பமேளாவுக்காக உள்கட்டமைப்பு மேம்பாடு முதல், சுகாதாரம் வரை, 549 திட்டங்களை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வின் மூலம் ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், மாநிலத்தின் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார தாக்கம் ஏற்படும் என்றும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கும்பமேளா மைதானம், ஆற்றங்கரைகளில் 4,000 ஏக்கர் பரப்பளவில், உத்தரப்பிரதேச அரசு 2,200 சொகுசு கூடாரங்கள் உட்பட 1.6 லட்சம் கூடாரங்களை அமைத்துள்ளது. மேலும், நகரம் முழுவதும் 218 ஹோட்டல்கள், 204 விருந்தினர் மாளிகைகள், 90 தர்மசாலைகள் செயல்படுகின்றன. அடிப்படை வசதிகளுடனான கூடாரங்கள் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வாடகைக்கான சொகுசு கூடாரங்கள் வரை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கும்பமேளா மைதானம் உள்ளிட்ட அதை சுற்றிப் பகுதிகளில் கடைகள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பேசிய கூடுதல் மாவட்ட நீதிபதி விவேக் சதுர்வேதி, ``கும்பத்தில் ஸ்டால்கள் அமைக்க ஒவ்வொரு ஏலதாரரிடமும் ரூ. 1-2 கோடி வரை பெற்றிருக்கிறோம்" என்றார்.
அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்கட்டமைப்பை மேம்படுத்த அலகாபாத் பல்கலைக்கழகத்தின் உதவி கோரப்பட்டிருக்கிறது. கும்பமேளாவின் பொருளாதார தாக்கத்தை வலுப்படுத்த உத்தரப்பிரதேச அரசுடன் இணைந்து பணியாற்றிய அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பேராசிரியர் ஏ.கே.மாளவியா, ``நாங்கள் கும்பமேளாவின் சமூக-பொருளாதார தாக்க ஆய்வை மேற்கொண்டோம். பார்க்கிங் மேம்பாடு, பாதுகாப்பு வசதிகள், கண்ணியமான காவல், பன்மொழிப் பலகைகள் என அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்வதே எங்கள் பரிந்துரைகளின் நோக்கமாக இருந்தது." என்றார்.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் உத்தரப்பிரதேச பிரிவின் தலைவரான மகேந்திர குமார் கோயல், ``இந்த கும்பமேளாவின் மூலம் ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும். பூஜை பொருட்கள் மூலம் ரூ.5,000 கோடி, பால் பொருட்கள் மூலம் ரூ.4,000 கோடி, பூக்கள் மூலம் ரூ.800 கோடி வருவாய் கிடைக்கும். ஹோட்டல்கள் மூலம் ரூ.6,000 கோடி வருவாய் ஈட்டமுடியும் என்று எதிர்பார்க்கிறோம்." என்றார்.