LSG vs PBKS: "இதைத்தான் அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம்" - வெற்றி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல்1) நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

ஐபிஎல் கோப்பையைக் கொல்கத்தா அணிக்காக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது பஞ்சாப் அணிக்காகவும் சிறந்த முறையில் அணியை வழி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய ஸ்ரேயாஸ், “இந்த மாதிரியான தொடக்கத்தைத்தான் நாங்கள் விரும்பினோம். எங்கள் அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டார்கள்.
தங்களின் திறமையை வெளிக்காட்டி அணியின் வெற்றிக்காக முக்கிய பங்காற்றினார்கள். நாங்கள் என்ன திட்டத்தைத் தீட்டினோமோ அதைக் களத்தில் நடைமுறைப்படுத்தினோம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எந்த அணியிலுமே சரியான காம்பினேஷன் கிடையாது.
வீரர்களிடையே இருக்கும் நட்புறவும், வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையும் இணையும் போதுதான் இது போன்ற மேஜிக் நடக்கும்.

ஐபிஎல்லில் உள்ள 10 அணிகளுக்குமே வெற்றி பெறும் திறன் இருக்கிறது. ஆனால் ஒரே குறிக்கோளும் மன உத்வேகமும் இருக்கும் அணிதான் வெற்றி பெறும்.
இதைத்தான் நாங்கள் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசினோம். நான் எப்போதுமே நிகழ்காலத்தில் வாழ்பவன்.
இன்று நான் அடித்த இன்னிங்ஸ் நடந்து முடிந்துவிட்டது. நான் அதைப் பற்றி இனி யோசிக்க மாட்டேன். என்னுடைய அடுத்த குறிக்கோள் எல்லாம் இனி அடுத்த போட்டியைப் பொறுத்துத்தான் இருக்கும்” என்று தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...