கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
Mk Stalin: ``மத்திய அரசு தரலைன்னா என்ன? நான் தரேன்.." - முதல்வரை நெகிழவைத்த சிறுமி!
தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற சிறுமி தனது சேமிப்பில் இருந்து ரூபாய் 10000 நன்கொடையாக வழங்கியுள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக உரையாற்றினார். மும்மொழிக்கொளையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கும் என அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் தமிழக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றாது, மாணவர்கள் பாதிப்பு ஏற்படாமல் கல்விக்கு தேவையான நிதியை வழங்கும் என உறுதியளித்தார்.
முதல்வரின் உரை மனதில் தாக்கம் ஏற்படுத்தியதால் கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற LKG மாணவி, ரூ.10,000 நன்கொடையாக வழங்கி முதல்வரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நன்முகையின் வீடியோவில் சிறுமி, "நம் தமிழ் மொழியை காக்க நீங்கள் பாடுபடுவீர்கள் என்று கூறினீர்கள், என் பாலு தாத்தாவும் , சாந்தி பாட்டியும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக ரூபாய் 10,000 அனுப்பி வைக்கிறேன்" என மழலை மொழியில் பேசியுள்ளார்.

நன்முகையின் செயல் குறித்து இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அவர், "கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “ஒன்றிய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்" என்று 10 ஆயிரம் ரூபாயைக் காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு. நெகிழ வைத்த நன்மகள் நன்முகையின் உணர்வுதான், நம் தமிழ்நாட்டின் உணர்வு! ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு!' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு" என எழுதியுள்ளார்.