கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
Odisha: ``தரமற்ற உணவு, அவமரியாதை..'' - ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற 116 மாணவர்கள்!
அரசு பள்ளியின் 116 மாணவர்கள் ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கிறது பாசிபிதா அரசு உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில், அரசு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களால் இழிவாக நடத்தப்படுவதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க 8, 9-ம் வகுப்பு படிக்கும் 116 மாணவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

அதற்காக அனைத்து மாணவர்களும் நள்ளிரவு 12 மணிக்கு தங்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் நடந்து பரிபாடாவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, துணை ஆட்சியர், மாவட்ட நல அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) திட்ட இயக்குநர் (PD) ஆகியோரைச் சந்தித்து, தங்கள் பிரச்னைகளை முறையிட்டனர். வீடியோகால் மூலம் ஆட்சியரிடமும் பேசினர். அதைத் தொடர்ந்து, விரையில் அவர்களின் பிரச்னையை சரி செய்வதாக ஆட்சியர் வாக்களித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் விடுதிக்கு திரும்பினர். மாணவர்கள் தங்கள் விடுதிக்குத் திரும்பிச் செல்ல அதிகாரிகள் பேருந்து ஏற்பாடு செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.