Shelvi | குளிகையில் பூஜை - கடன் தீர பரிகாரம்... Vinayagar Sathurthi சிறப்பு ராசி...
Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா?
''உங்கள் குழந்தைகள் தங்களுடைய இரண்டாவது வயதில் அடியெடுத்துவைக்கப் போகிறார்களா? இனிமேல் அவர்களும் நம்மைப்போல் தனி மனிதர்கள். ‘வாட், தனி மனிதர்களா... சின்னக் குழந்தைங்க டாக்டர் அவங்க’ என்று நீங்கள் பதறுவது தெரிகிறது.
குழந்தை தொடர்பான உங்கள் உணர்வுகளைப் பற்றி மட்டுமே யோசிக்கிற நீங்கள், இரண்டு வயதில் உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால், இந்த வயதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளைவிட, உணர்வுகள் தொடர்பான பிரச்னைகளே அதிகம் ஏற்படும். அவை, நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ளாததால் வருபவை'' என்கிற குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு, இரண்டு வயது குழந்தைகளை பெற்றோர் எப்படி நடத்த வேண்டும்; அவர்களை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

''இந்த வயதில் அவர்கள் நிறைய விளையாட வேண்டும், நிறைய நேரம் விளையாட வேண்டும், அதையும் விதவிதமாக விளையாட வேண்டும் அவர்களுக்கு.
இதற்கு நீங்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும். விளையாடியது போதும் என்று தூங்கவைக்கக்கூடாது. புதிது புதிதான விளையாட்டுப் பொருள்கள் தேவைப்படுகிற வயது இது. இன்றைக்கு ஒரு பொம்மை பிடிக்கிறது என்றால், மறுநாள் வேறொரு பொம்மைதான் பிடிக்கும். நிறம், வடிவம் என்று ஏதாவது மாற்றம் வேண்டும் அவர்களுக்கு.
அவர்களுக்கு, விளையாடுவதற்கு தன் வயதிலுள்ள பிள்ளைகள் வேண்டும். அதற்கு நீங்கள் சொந்தபந்தம், அக்கம் பக்கம் என எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும். பால்யகால சிநேகிதம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அந்த பால்யகால சிநேகிதம் என்பது இந்த இரண்டு வயதில் ஏற்படுவதுதான்.
மூன்று வயதுவரைக்கும், தான் ஆணா, பெண்ணா என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. நட்பு மட்டுமே அவர்களுடைய பிஞ்சு மனதில் பதியும். இதுதான் பால்ய சிநேகிதம்.

இரண்டு வயதில்தான் ஒரு குழந்தை தன்னை யார் என்று தீர்மானம் செய்யும். அதாவது வருங்காலத்தில் தான் எப்படிப்பட்ட இயல்பில் இருக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யும்.
துறுதுறுப்பு, அமைதி, மனதுக்குள் பேசிக்கொள்கிற இயல்பு, வெளிப்படையாகப் பேசுகிற இயல்பு, சுறுசுறுப்பு, நிதானம் என தங்களுடைய எதிர்கால இயல்பை அவர்கள் தீர்மானிப்பதைக் கொஞ்சம் உற்று கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம்.
தாராளமாக அனுப்பலாம். அனுப்ப வேண்டும். நிறைய பெற்றோர்களுக்கு இதில் குழப்பம் இருக்கிறது. அவர்கள், இரண்டு வயதுக் குழந்தையின் மனநிலையைப் பற்றி தெரிந்துகொண்டார்கள் என்றால், ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த வயதில் குழந்தைகளிடம் உணர்வுரீதியான பிணைப்பு அதிகமாக இருக்கும். அம்மாவிடம் அல்லது பாட்டியிடம் மட்டுமே இருந்து, பழகிவந்த குழந்தைகள், அம்மா வேலைக்குப் போய்விட்டாலோ அல்லது தன்னை வளர்த்த பாட்டி ஊருக்குப் போய்விட்டாலோ தவித்துப்போய்விடுவார்கள். அதை அவர்களுக்குச் சொல்லவும் தெரியாது.
பழகிய மனிதர்கள் பக்கத்தில் இல்லையென்றால் மட்டுமல்ல, பழகிய பொருள்களில் மாற்றம் வந்தாலும் தவித்துப்போவார்கள். இதற்காகத்தான் ப்ளே ஸ்கூலில்விட வேண்டும் என்று சொல்கிறேன்.
அந்த இரண்டு மணி நேர இடமாற்றம், வீட்டிலிருந்து, வீட்டு மனிதர்களிடமிருந்து குழந்தைகளைக் கொஞ்ச நேரம் தள்ளிவைக்கும். இந்த மாற்றம் குழந்தைகளுக்கு அவசியத் தேவை.

‘நான் வேலைக்குப் போகலை; என் குழந்தையைப் பார்த்துக்க எங்கம்மாவும் இருக்காங்க. அப்புறம் நான் எதுக்கு என் பிள்ளையை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பணும்?’ என்று கேட்டீர்களென்றால், ஒரு குழந்தையானது தன்னுடைய இரண்டு வயதிலிருந்து சமூகத்துடன் கலந்து பழக வேண்டும். எந்நேரமும் பிள்ளையை கங்காருபோல மடியிலேயே கட்டிக்கொண்டிருந்தால், குழந்தை எப்படி சமூகத்துடன் கலந்து பழகும்?
இந்த வயதில் குழந்தைகள் 20 வார்த்தைகள் பேச வேண்டும். இரண்டு வார்த்தைகளை இணைத்துக் கோர்வையாகப் பேச வேண்டும். உதாரணத்துக்கு, ‘தாத்தா குடு’, ‘அம்மா வா’, ‘அப்பா எங்கே’ என இரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச ஆரம்பிப்பார்கள்.
சில குழந்தைகள் தாய்மொழியுடன், பிறமொழியையும் (ஆங்கிலம்போல) பேசுவார்கள். இப்படிப் பேசுவதில் வேகமாக இருக்கிற வயதில், அவர்கள் உலகத்தைப் பெரிதாக்குங்கள். முக்கியமாக வீட்டைத் தாண்டிய வெளியுலகத்தை அறிமுகப்படுத்துவது, குறிப்பாக ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அவசியம்.
இதுவரை வீட்டுக் கிளிக்குஞ்சாக இருந்த உங்கள் குழந்தைக்கு றெக்கை முளைத்துவிட்டது. குட்டி மேடம்/குட்டி சார் ப்ளே ஸ்கூலுக்கு எல்லாம் போகிறார்கள் இல்லையா? அவர்களுடைய மழலை மொழியும் சைகை மொழியும் வீட்டில் இருப்பவர்களுக்குப் புரியும். வீடு தாண்டி மற்றவர்களுக்கு..? அதனால், ஒரு பொருளின் சரியான பெயர் என்னவோ, அதை சரியாக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்'' என்கிறார் டாக்டர் தனசேகர் கேசவலு.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...