திருமணம் மீறிய உறவு; காதலி வாயில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்த காதலன் - லாட்ஜில் நடந்த கொடூரம்
திருமணம் மீறிய உறவு
கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள கெராசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரக்ஷிதா. இவர் ஏற்கெனவே திருமணமானவர். ஆனால் தனது உறவினரான சித்தராஜு என்பவரையும் காதலித்து வந்தார்.
ரக்ஷிதாவின் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் கேரளாவில் வசித்து வருகிறார். ரக்ஷிதாவிற்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அவர் குழந்தையோடு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
கணவன் வெளியில் சென்ற நேரத்தில் ரக்ஷிதா தனது காதலனுடன் அருகில் உள்ள பெர்யா என்ற கிராமத்தில் இருக்கும் லாட்ஜ் செல்வது வழக்கம்.

லாட்ஜில் படுகொலை
நேற்று இருவரும் இதே போன்று அங்குள்ள லாட்ஜிற்கு சென்றனர். அவர்கள் லாட்ஜ் சென்ற சிறிது நேரத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
லாட்ஜ் அறையில் ரக்ஷிதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சித்தராஜு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதற்கு ரக்ஷிதா மறுத்துள்ளார்.
உடனே கோபத்தில் சித்தராஜு தான் கொண்டு சென்று இருந்த ஜெலட்டின் குச்சிகளை ரக்ஷிதாவின் வாயில் வைத்து தீபற்ற வைத்துவிட்டார்.
மின்சாரத்தை பயன்படுத்தி வெடிக்க செய்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. இதில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியதில் ரக்ஷிதாவின் கீழ் தாடை பகுதி சிதறியது.
வெடிகுண்டு சத்தம்
வெடிகுண்டு சத்தம் கேட்டு லாட்ஜ் ஊழியர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வந்தபோது மொபைல் போன் வெடித்துவிட்டதாக சித்தராஜு தெரிவித்தார். ஆனால் அந்த அறையில் சோதனை செய்துபார்த்தபோது அங்கு மொபைல் போன் வெடித்ததற்கான எந்த வித அறிகுறியும் தென்படவில்லை. அதோடு வெடித்த மொபைல் பாகங்களும் அங்கு இல்லை.
அதோடு அங்கிருந்து சித்தராஜு, இறந்து கிடந்த ரக்ஷிதாவின் உடலை தோளில் எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.
ஆனால் லாட்ஜ் ஊழியர்கள் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சித்தராஜுவை பிடித்து சென்றனர்.

போலீஸார் விசாரணை
சம்பவம் நடந்த லாட்ஜ் அறையில் சோதனை செய்தபோது அங்கு இரண்டு மீட்டர் நீளத்திற்கு வயர் கிடந்தது. எனவே வயர் மூலம் ஜெலட்டினை வெடிக்க செய்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஜெலட்டின் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இருவரும் பிற்பகல் 2 மணிக்கு தங்களை கணவன் மனைவி என்று கூறி லாட்ஜ் வந்ததாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அறைக்கு வந்த பிறகு வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஏதோ ஒரு பார்சலுடன் வந்ததாக லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்தனர். அதிகப்படியான ரத்தம் வாயில் இருந்து வெளியேறி ரக்ஷிதா உயிரிழந்திருந்தார்.