குழந்தைகளைப் போல எனக்கும் எனர்ஜி வந்துவிட்டது! - முதல்வர் ஸ்டாலின்
25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான கூடுதல் 25% வரிவிதிப்பு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரிகளை விதித்து அமெரிக்கா அதிகாரபூர்வமாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு நாளை(ஆக.27) 12.01 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது.
இந்தியாவுக்கான 40 சதவிகிதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் தேவை ரஷியாவிடம் இருந்து பெறப்படும் நிலையில், இது இந்தியாவுக்கு பெருத்த அடியாகவே அமைந்தது. மேலும், இந்த வரிவிதிப்பு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு எண்: 14329-ல் வரிகள் உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க அதிபர் கூறியிருந்த காலக்கெடுவான ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குப் பின்னர், கிடங்குகளில் இருக்கும் அனைத்துப் பொருள்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறினால், ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், வரும் வாரங்களில் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கும் சீனா உள்பட பிற முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.