Pope தேர்தல் எப்படி நடைபெறும்; தேர்வுசெய்யும் குழுவில் முதல் `தலித்' கார்டினல் யார் தெரியுமா?
நீண்ட நாள்களாக பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்ட போப்பாண்டவர் பிரான்சிஸ் காலமானார்.
இந்த நிலையில், சில நாள்களாகவே பேசப்பட்டு வந்த புதிய போப் யார் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையில் போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் சடங்குகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.
ஆனாலும் கிறிஸ்தவ அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் போப்பைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கார்டினலுக்கும் புதிய ஆன்லைன் வழிகாட்டியை உருவாக்கி இந்த செயல்முறையை புதுப்பித்துள்ளனர்.
போப்பைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காலேஜ் ஆஃப் கார்டினல்ஸ் என அழைக்கப்படும் கார்டினல் குழுவுக்கு உள்ளது. மொத்தமுள்ள 252 கார்டினல்கள் பற்றிய விவரங்களும் https://collegeofcardinalsreport.com என்ற வலைத்தளத்தில் இருக்கும்.
இதில் கார்டினல்கள் திருச்சபையின் முக்கிய விவாதங்களில் எந்தப்பக்கம் உள்ளனர் என்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
உதாரணமாக பெண்களை டீக்கன்களாக நியமித்தல், ஓர்பாலினத் திருமணங்களை அங்கீகரித்தல், பாதிரியார்கள் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்டவற்றில் அவர்களது நிலைப்பாடு என்னவென்று கூறப்பட்டிருக்கும்.
போப் மரணத்தைத் தொடர்ந்து வட்டிக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் கார்டினல்கள் ஒன்றுகூட அழைக்கப்படுவர். அங்கு நடப்பவைப் பற்றி வெளியில் கூறமாட்டோம் என உறுதி அளிப்பர்.
தொடர்ந்து அடுத்த போப்பாக பதவி பெறுவதற்கு தகுதியான நபர்கள் குறித்து விவாதம் நடைபெறும். எந்த நபரும் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய முடியாது.
"இது இன்றும் அதீத அரசியல் அழுத்தம் நிறைந்த செயல்முறையாகவே இருக்கிறது" என்கிறது பிபிசி பத்திரிகை.

தனித்த வாக்கெடுப்பு முறை
கார்டினல்கள் தொடர் ரகசிய வாக்கெடுப்புகள் மூலம் வாக்களிப்பர். எந்த ஒரு திருமுழுக்கு பெற்ற கத்தோலிக்க ஆணும் போப்பாண்டவராக முடியும் என்றாலும், பெருமாலும் கார்டினல்ஸ் ஆஃப் காலேஜில் இருந்துதான் போப் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
எந்த ஒரு கார்டினலும் இந்த தேர்தலில் வெற்றிபெற மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறவேண்டும். ஏதாவது ஒரு கார்டினல் தேவையான வாக்குகளைப் பெறும் வரை தினசரி நான்கு சுற்று வாக்கெடுப்புகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் வாக்கு சீட்டுகள் எரிக்கப்படும். வெளி நபர்களால் எரிக்கப்படும் சீட்டின் புகையை மட்டுமே பார்க்க முடியும்.
ஒவ்வொருமுறையும் புகையின் நிறத்தை அவர்கள் கவனிக்கின்றனர். புகை கறுப்பாக இருந்தால் யாரும் தேவையான வாக்குகளைப் பெறவில்லை. போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வெள்ளைப் புகைப் போடப்படும்.
அடுத்த Pope யார்?
அடுத்த போப்புக்கான போட்டியில், இத்தாலியைச் சேர்ந்த கார்டினல் பியட்ரோ பரோலின், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேகிள், கானாவைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் டுர்க்சன், ஹங்கேரியைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ மற்றும் உக்ரைனைச் சேர்ந்த கார்டினல் மைகோலா பைச்சோக் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதல் தலித் கார்டினல்...
வாக்களிக்கும் உரிமை உள்ள கார்டினல்கள் போப்பாண்டவர்களாலேயே நியமிக்கப்படுகின்றனர். அப்படியாக மார்ச் 29,2022 -ல் நியமிக்கப்பட்ட 21 புதிய கார்டினல்களில் ஒருவர் பேராயர் அந்தோணி பூலா.
இத்தகைய உயர் பதவியை அடைந்த ஒரே தலித் கிறிஸ்தவர் இவர்தான். போப்புக்கு அடுத்த நிலையான இந்த இடத்தைப் பிடிக்கும் முதல் தெலுங்கு நபரும் அவரே.
ஆந்திரபிரதேசம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்துகூர் கிராமத்தில் 1961ம் ஆண்டு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தவர் இவர். பிப்ரவரி 20, 1992-ல் பாதிரியாராக தனது பணியைத் தொடங்கினார்.
தொடர்ந்து விளிம்புநிலை மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வந்தார். பிப்ரவரி 8, 2008-ல் பிஷ்ப்பாக உயர்த்தப்பட்டார்.

இந்தியாவில் திட்டமிட்டு, சமூக கட்டமைப்புகள் மூலமாக பட்டியல் சாதியினர் ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் கிறிஸ்தவர் எண்ணிக்கையில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தாலும் உயர் பதவிகளில் தலித்துகள் பிரதிநித்துவப்படுத்தப்படுவது மிகக் குறைவே.
தனக்கான பல சவால்களை எதிர்கொண்டு, போப்பாண்டவர் தேர்வாளராகவும், போப்பின் ஆலோசகராகவும், அந்தோணி பூலா திருச்சபையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு மதிப்புமிக்க பாத்திரத்தை வகிக்கிறார்.
திருச்சபையில் உள்ளடக்கிய தன்மையை (Inclusivity) மேம்படுத்துவதில் போப் பிரான்ஸ் தனித்த அக்கறை கொண்டிருந்தார் என்பதற்கு அந்தோணி பூலாவின் நியமனம் ஓர் சான்று!