பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்...
Rabies : 50 நாளில் 77,540 நாய்க்கடி சம்பவங்கள்; 3 ரேபிஸ் மரணங்கள் - என்னதான் தீர்வு? | In-Depth
நாய்க்கடியும், அதனால் வருகிற ரேபிஸ் தொற்றும், அதன் தொடர்ச்சியான மரணங்களும் தமிழக அளவில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் நாய்க்கடிக்காக சிகிச்சைப் பெற்றுகொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டது ரேபிஸ் தொடர்பான அச்சத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது.
''உலகளவில் இந்தியாவில்தான் தெரு நாய்கள் அதிகமாக இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது'' என்கிற அவசர நிலை மருத்துவர் டாக்டர் சாய் சுரேந்தர், தெருநாய்கள், நாய்க்கடி, ரேபிஸ் தடுப்பூசி, ரேபிஸ் தொற்று என அனைத்தையும்பற்றி விரிவாகப் பேசினார்.

பொதுவாக வெயில் காலங்களில் தெருநாய்கள் பசியாலும் தாகத்தாலும் ஒருவிதமான எரிச்சல் மனநிலையில் இருக்கும். அதன் வெளிப்பாடுதான், எந்தத் தொந்தரவும் தராமல் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கிற மனிதர்களைப் பார்த்து தெருநாய்கள் குரைப்பதும் கடிப்பதும்... இந்தக் காலகட்டத்தில் தெருநாய்க்கடி அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஒருகாலத்தில் தெருநாய்களுக்கு நாம் எல்லாருமே உணவு வைத்திருக்கிறோம். மூன்று வேளையும் வைக்கவில்லையென்றாலும், இரவிலாவது மீந்த சாப்பாட்டை தெருவில் வைப்போம். அதை, அங்கிருக்கும் தெருநாய்கள் சாப்பிடும். அதற்கு நன்றி செய்வதுபோல தெருநாய்கள் இரவில் நம் வீட்டு வாசலில் படுத்துக்கிடந்து காவல் காக்கும். ஆனால், இன்றைக்கு தெருநாய்களின் பசி, தாகம்பற்றி யாரும் யோசிப்பதில்லை.
தவிர, ப்ளூ கிராஸ் அமைப்பு முன்பெல்லாம் தெருநாய்களின் மேல் அக்கறை எடுத்துக்கொள்ளும். தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஆரம்பித்து, அவற்றுக்கு ஏதாவது தொற்றோ, காயமோ ஏற்பட்டால் சிகிச்சை செய்வது என அந்த அமைப்பு பணியாற்றிக்கொண்டிருந்தது. அவர்களுடைய இந்தப்பணிகளை நாமும் நிறைய இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், இப்போது அந்த அமைப்பின் தெருநாய் தொடர்பான பணிகளை பார்க்க முடிவதில்லை. கவனிப்பாரற்ற தெருநாய்கள் சில நேரங்களில் மூர்க்கமாக நடந்துகொள்வதற்கு இதுவும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
2021-ல் 3,19,432 பேரை நாய்க்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். 2024-லோ இது 4,80,483 என இது அதிகரித்திருக்கிறது. 2021-ல் 19 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்திருக்கிறார்கள். 2024-லோ 43 பேர் ரேபிஸால் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என பொதுசுகாதாரத்துறை குறுப்பிடுகிறது. 2025-ல் ஜனவரி முதல் பிப்ரவரி 19-ம் தேதி வரை, அதாவது ஒன்றரை மாதத்தில் 77,540 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
குழந்தைகளும் வயதானவர்களும்தான் தெருநாய்களின் டார்கெட். இது எப்படி நாய்களுக்கு தெரிகிறது என்றால், ஒரு நாய் ஒரு முப்பது வயது ஆணையோ, பெண்ணையோ நோக்கி குரைக்கிறது அல்லது கடிக்கும் நோக்கில் அவர்கள் அருகே செல்கிறது என்றால், அவர்கள் கையில் கிடைக்கிற கல்லையோ, கட்டையையோ எடுத்துக்கொண்டு நாயை தாக்க வருவார்கள். இதன் மூலம், 'இவர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இவர்கள் நம்முடைய டார்கெட் அல்ல' என்று புரிந்துகொண்டு நாய் ஓடி விடும்.
இதையே ஒரு குழந்தையையோ அல்லது வயதானவர்களையோ தாக்க முற்படும்போது, அவர்கள் பயந்து ஓடுவார்கள். ஸோ, 'இவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவர்கள்தாம் நம்முடைய டார்கெட்' என முடிவு செய்துகொண்டு தன்னுடைய தாக்குதலை ஆரம்பிக்கும். இப்படி தாக்குதலை ஆரம்பிப்பதற்கு முன் சுற்றிலும் வேறு யாராவது இருக்கிறார்களா என்பதையும் பார்த்துக்கொள்ளும். டார்கெட்டும் பலவீனமாக இருக்கிறது; சுற்றிலும் யாரும் இல்லையென்பதை ஒரு தெருநாய் புரிந்துகொண்டால், சிக்னல் கொடுத்து இன்னும் பல நாய்களை வரவழைத்துவிடும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தெருநாய்களால் குழந்தைகள் கடிபடுகிற வீடியோக்களை பார்த்தீர்களென்றால், அதில் எப்போதுமே ஒரேயொரு நாய் மட்டுமே ஈடுபடாது என்பது புரியும்.
சில சிறுவர், சிறுமிகள் பெற்றோர் மீதான பயத்தில், தங்களை நாய் கடித்ததை சொல்ல மாட்டார்கள். அந்த நாய்க்கடி ரத்தம் வராத அளவுக்கு லேசானதாக இருந்தால், பெற்றோர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. விளைவு, ரேபிஸ் முற்றிய பிறகுதான் எங்களிடம் வருவார்கள். அதனால், நாய் கடித்தால் வீட்டில் மறைக்கக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வளருங்கள்.
இளம்வயதினர் பெரும்பாலும் வளர்ப்பு நாய்களிடம்தான் கடிபட்டு மருத்துவமனைக்கு வருவார்கள். அப்படி இல்லையென்றால், அவர்கள் டூ வீலரில் போகும்போது தெருநாய் விரட்டி வந்து கடித்திருக்கும். இதில், வளர்ப்பு நாய்களுக்கு சரியான இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டு முறைப்படி பராமரிக்க வேண்டுமென கார்ப்பரேஷன் அறிவுறுத்தியிருப்பதால், அவை நோய் எதிர்ப்புச்சக்தியுடன்தான் இருக்கும்.
அதனால், அவற்றுக்கு பெரும்பாலும் தொற்றுநோய் எதிர்ப்புச்சக்தி இருக்கும். என்றாலும், 'வளர்ப்பு நாய்க்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதே; அதனால், அது கடித்தாலும் நமக்கு நாய்க்கடி ஊசி தேவையில்லை' என்று அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். இதனாலும் சிலருக்கு ரேபிஸ் வந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

நாய்க்கடியில் 5 படிநிலைகள் (grade) இருக்கின்றன. ரேபிஸ் தொற்று இருக்கிற நாய் நக்கிவிட்டால் அது முதல் நிலை.
ரேபிஸ் தொற்று இருக்கிற நாயின் பற்கள் மட்டுமே படுவது இரண்டாவது நிலை.
ரேபிஸ் தொற்று இருக்கிற நாயின் பல் பட்டு ரத்தம் வந்துவிட்டால் அது மூன்றாவது நிலை.
கடித்துக்குதறி ரத்தம் கொட்டுவது நான்காவது நிலை.
சிறுதுண்டு தசையை கடித்து எடுத்துவிடுவதே ஐந்தாவது நிலை. ரேபிஸ் தொற்று இருக்கிற நாய் கடிப்பதில் இதுதான் மிகவும் ஆபத்தான நிலை.
நாய்க்கடியில் சிம்பிள் நாய்க்கடி. அதாவது, பல் பதிந்திருக்கும். ஆனால், ரத்தம் வராது. இவர்களுக்கு டிடி இன்ஜெக்ஷன் போடுவோம். இதனுடன் இம்யூனோகுளோபுலின் ஊசி(நாய்க்கடிக்கான ஊசி)யும் போடுவோம். இந்த ஊசியை நாய் கடித்தவுடன் ஓர் ஊசி, பிறகு கடித்ததிலிருந்து நான்காவது நாள், எட்டாவது நாள், பதினான்காவது நாள், 28-வது நாள் போடுவோம். கடித்தது வீட்டு நாய், அது தடுப்பூசியெல்லாம் போடப்பட்டு நோய் எதிர்ப்புச்சக்தியுடன் இருக்கிறது என்றால், 3 டோஸ் ஊசிப் போட்டாலே போதும். இதுவே தெரு நாய் என்றால், அது சொறியெல்லாம் இல்லாமல் உடலளவில் ஆரோக்கியமாக தெரிந்தாலும் ரேபிஸ் ரிஸ்க்கை தவிர்ப்பதற்காக 5 ஊசிகள் கண்டிப்பாக போடுவோம்.
நாயானது கடித்து, சிறிதளவு தசையையே பிய்த்து எடுத்துவிட்டதென்றால், நான் மேலே குறிப்பிட்டுள்ள ஊசி மட்டும் போதாது. அவர்களுக்கு ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் என்கிற பவர்ஃபுல்லான ஊசி மருந்தை செலுத்துவோம். இந்த ஊசி மருந்து சின்னச்சின்ன கிளினிக்குகளில் இருக்காது. அரசு மருத்துவமனைகளின் நூறு சதவிகிதம் இந்த மருந்து இருப்பில் இருக்கும். தவிர, மருத்துவ வசதிகள் அதிகம் இருக்கிற பெரிய மருத்துவமனைகளிலும் இந்த ஊசி மருந்து இருக்கும். தனியார் மருத்துவமனைகளில் இது கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.
தசையே பிய்ந்துபோனவர்களுக்கு உயிர் போகிற அளவுக்கு கடித்த இடத்தில் வலி இருக்கும். அதனால், இவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, கடிபட்ட இடத்தைச்சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்தை உடனடியாக செலுத்துவோம். இந்தளவுக்கு நாய்க்கடி படுபவர்களுக்கு இன்னொரு பயங்கர ஆபத்தும் இருக்கிறது. இவர்களுக்கு ஒன்றிரண்டு நாட்களிலேயே ரேபிஸ் நோய் முற்றிப்போய்விடலாம் என்பதால், எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு செல்வதை தள்ளிப்போடாதீர்கள். இவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜன் உதவிகூட தேவைப்படலாம்.

நாய்க்கடியிலும் கோல்டன் ஹவர் இருக்கிறது. நாய் கடித்த ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும். 'வீட்டு நாய்தானே', 'தெரிந்த நாய்தானே', 'தொற்று இல்லாத ஹெல்தியான நாய்தானே' என்று அலட்சியமாக ஒரு டி.டி ஊசியுடன் நிறுத்திவிட்டார்களென்றால், அடுத்த ஒரு மாதத்துக்குள் கை - கால் விறைப்பு, தாகம் அதிகமாக இருக்கும். ஆனால், தண்ணீரைக்கண்டால் பயம் என்று மெள்ள மெள்ள மாறுவார்கள். நாயின் குணம், மனிதனுடைய உடல் என அவர்களுடைய மனநிலையை விவரிப்பதே கடினம். மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வருவதே பெரும்பாடாக இருக்கும். இந்த நிலையில், அவர்களைக் காப்பாற்றுவதே கடினம். இதெற்கெல்லாம் ஒரே தீர்வு, கடிபட்டவுடனே மருத்துவமனைக்கு வந்துவிடுவதுதான்.
உங்கள் செல்ல நாய்க்கு காஸ்ட்லியான உணவுகளை வாங்கித் தருவதைப்போலவே, சரியான இடைவெளியில் அவற்றுக்கு தடுப்பூசியும் கொடுக்கப்பட வேண்டும். ஒருவேளை, உங்களால் அந்த நாயைத் தொடர்ந்து வளர்க்க முடியவில்லையென்றால், அதை அப்படியே தெருவில் விட்டு விடாதீர்கள். அவை, தெருநாய்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது பிறக்கிற குட்டி எப்படிப்பட்ட இயல்பில் இருக்கும், ஆக்ரோஷமாக இருக்குமா என்பதையெல்லாம் நம்மால் யூகிக்கவே முடியாது.
அரசாங்கம் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தெருநாய்க்கடி விஷயத்தில் 'எச்சில்தானே பட்டுச்சு; பல் பட்டிருக்கு. ஆனா, ரத்தம் வரலை' என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனடியாக மருத்துவ உதவியை எடுத்துக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நாய்க்கடித்தால், தொப்புளைச்சுற்றி 21 ஊசி போடுவோம். அதனால், நாய்க்கடியைவிட அந்த ஊசிகளுக்கு அதிகமாக பயந்தார்கள். ஆனால், இப்போது ஒரேயொரு ஊசிதான். அதனால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள்'' என்கிறார் டாக்டர் சாய் சுரேந்தர்.
எதையும் அறிந்து கொண்டு விழிப்புணர்வோடு இருப்பது நல்லது. நாமும் தெரிந்து கொள்வோம், நமக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய வைப்போம்.!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
