Rain: 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியிருந்தாலும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியினை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரிதாக வெயில் பதிவாகவில்லை.

இந்நிலையில் கோடை வெயில் முடிந்து தென் மேற்கு பருவமழைத் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கோவை, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய 17 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.