Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரண்டு நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் புயலாக வலுபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக டெல்டா பகுதியிலும் தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இன்று மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று மழை பொழிவு உள்ளது.
வடகிழக்கு பருவமழை 23ம் தேதிக்குப் பிறகு இன்னும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. அதுவரை தற்போது உள்ளதுபோல மிதமான மழைப்பொழிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருவாகுமா என்பதை வரும் நாள்களில்தான் உறுதியாகக் கூற முடியும். புயலாக உருவாகும் பட்சத்தில் தமிழகத்தை நோக்கி வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சனிக்கிழமை முதல் மழைப்பொழிவு இருக்கும்.