சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்கு!
Raina: `Mr.IPL பட்டம் ஒன்னும் சும்மா கொடுக்கல' - ரெய்னாவின் அந்த ஆட்டம் நினைவிருக்கிறதா?
கடந்த 17 சீசன்களில் ஐ.பி.எல் எவ்வளவோ மாற்றங்களை பார்த்துவிட்டது. சீசனுக்கு சீசன் பேட்டர்கள் அதிரடியாக ஆடும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சீசனில் ஹெட்டும் அபிஷேக்கும் சேர்ந்து சன்ரைசர்ஸூக்காக ஆடிய ஆட்டமெல்லாம் அதிரடியின் உச்சம். ஆனாலும் ஐ.பி.எல் வரலாற்றில் எப்போதுமே மறக்க முடியாத சூறையாட்டம் என்றால் 2014 ஆம் ஆண்டு நடந்த சீசனில் சுரேஷ் ரெய்னா ஆடியதுதான். அந்த சீசன் முடிந்து 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் ரெய்னா அந்த சீசனில் ஆடிய 87(25) இன்னிங்ஸ் அப்படியே நினைவில் நிற்கிறது. காரணம், ரெய்னா அடித்த அடி அப்படி.

2014 சீசன் கொஞ்சம் வினோதமான சீசன். ஏனெனில், பஞ்சாப் அணி வழக்கத்துக்கு மாறாக இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது. மேக்ஸ்வெல் சூறாவளியாக சுழன்றடித்த சீசன் இது. அந்த சீசனில் மட்டும் 500+ ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட்டெல்லாம் தாறுமாறாக இருக்கும். அதுவும் சென்னைக்கு எதிராகவென்றால் இன்னும் கொஞ்சம் வெறியேறி சென்னை பௌலர்களைக் காற்றில் பறக்கவிடுவார். லீகில் மோதிய இரண்டு முறையும் சென்னை அணி பஞ்சாப்பிடம் தோற்றிருக்கவே செய்திருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலுமே மேக்ஸ்வெல் பட்டையைக் கிளப்பியிருப்பார். ஒரு போட்டியில் 43 பந்துகளில் 95 ரன்களையும் இன்னொரு போட்டியில் 38 பந்துகளில் 90 ரன்களையும் அடித்திருந்தார். லீக் போட்டிகளின் முடிவில் பஞ்சாப் அணிதான் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும் இருந்தது. ஆடிய 14 போட்டிகளில் 11 போட்டிகளை வென்றிருந்தனர்.
சென்னை அணியில் ஸ்மித், மெக்கல்லமெல்லாம் இருந்த காலக்கட்டம் அது. சீராக ஆடி சென்னை அணியும் ப்ளே ஆப்ஸூக்கு வந்திருந்தது. எலிமினேட்டரில் சென்னையும் மும்பையும் மோதியிருந்தன. சுரேஷ் ரெய்னா உச்சக்கட்ட பார்மில் இருந்திருந்தார். வழக்கம்போல அந்த சீசனிலும் 500 ரன்களைக் கடந்திருந்தார். அந்த எலிமினேட்டர் போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து சென்னையை வெல்ல வைத்திருந்தார். முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தாவிடம் பஞ்சாப் தோற்றிருந்தது. ஆக, இரண்டாம் தகுதிச்சுற்றில் பஞ்சாப்பும் சென்னையும் வான்கடேவில் மோதின. இந்தப் போட்டியிலும் மேக்ஸ்வெல் வறுத்தெடுக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், மேக்ஸ்வெல் சொற்ப ரன்களில் அஷ்வினிடம் அவுட் ஆகியிருந்தது. மேக்ஸ்வெல் தவறவிட்டதை இந்த முறை சேவாக் செய்தார். 58 பந்துகளில் 122 ரன்களை எடுத்திருந்தார். சென்னை பௌலர்கள் சேவாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

'என் மகனிடம் பேசுகையில் நீங்கள் இப்போதெல்லாம் ரன்னே அடிப்பதில்லை என வருத்தமாகக் கூறினான். பொறுப்பா எனக்கு இன்னும் நேரம் இருக்கு.' எனச் சொல்லி அவனைத் தேற்றுவேன். இன்று அவனுக்காக ஸ்கோர் செய்துவிட்டேன் என சேவாக் இந்த இன்னிங்ஸூக்கு பிறகு எமோஷனலாக வேறு பேசியிருந்தார்.

போட்டிக்குப் பிறகு நியாயப்படி சேவாக்கின் இந்த இன்னிங்ஸ்தான் அனைவரின் நினைவிலும் நின்றிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. சேவாக் ஆடிய அந்த இன்னிங்ஸை மறக்கடிக்கும் வகையில் ரெய்னா ஒரு இன்னிங்ஸை ஆடினார்.
சென்னை அணிக்கு 227 ரன்கள் டார்கெட். இமாலய இலக்கு. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஆடினால் மட்டும்தான் சேஸிங் சாத்தியப்படும். ஆனால், ஜான்சன் வீசிய முதல் ஓவரிலேயே டூப்ளெஸ்சிஸ் டக் அவுட். நம்பர் 3 இல் ரெய்னா வருகிறார். ரெய்னாவுக்கு முதல் பந்தையே ஜான்சன் ஷார்ட்டாக வீசுகிறார். ரெய்னாவுக்கு ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களில் வீக்னஸ் உண்டு. பல முறை அவுட்டும் ஆகியிருக்கிறார். ஷார்ட்டாக வீசிய அந்த பந்தை லேசாக தொட்டு பைன் லெக்கில் பவுண்டரியாக்குவார் ரெய்னா. வாணவேடிக்கையின் ஆரம்பம் அது. ஜான்சன், சந்தீப் சர்மா, அவானா என மூன்று பேர் அந்த பவர்ப்ளேயில் வீசினர். ரெய்னா எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. லெக் சைடில் நகர்ந்து வந்து ரூம் க்ரியேட் செய்து மிட் ஆப்பையும் எக்ஸ்ட்ரா கவரையும் க்ளியர் செய்து பவுண்டரியாக்கிக் கொண்டே இருந்தார். அவ்வபோது லெக் சைடில் மடக்கி பெரிய சிக்சர்களையும் பறக்கவிட்டார்.
சந்தீப் சர்மா வீசிய 2 வது ஓவரில் 18 ரன்கள், ஜான்சன் வீசிய நான்காவது ஓவரில் 20 ரன்கள். பவர்ப்ளேயின் கடைசி ஓவரை அவானா வீசினார். அந்த ஓவரில் மட்டும் 33 ரன்கள். 2 சிக்சர்களையும் 5 பவுண்டரிக்களையும் அடித்திருந்தார். பவர்ப்ளே முடிகையில் சென்னை அணி 100 ரன்களை எட்டியிருந்தது. இதே வேகத்தில் ஆடினால் 15 ஓவர்களில் போட்டியையே முடித்துவிடலாம் எனும் நிலை. ஆனால், துரதிஷ்டவசமாக ரெய்னா ரன் அவுட் ஆனார். கரண்வீர் சிங் வீசிய 7 வது ஓவரின் முதல் பந்தை மெக்கல்லம் கவர்ஸில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்க முயன்றார். ரெய்னாவும் கமிட் ஆகி ஓடிவிடுவார். டைவ் அடித்த பிறகும் ரெய்னாவால் வெற்றிகரமாக க்ரீஸை எட்டியிருக்க முடியாது. 25 பந்துகளில் 87 ரன்களில் ரெய்னா அவுட். ஐ.பி.எல் வரலாற்றின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களை பட்டியலிட்டால், அதில் இந்த இன்னிங்ஸை தவிர்க்கவே முடியாது. ரெய்னா அவுட் ஆன பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி வீழ்ந்தது.

போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில், 'ரெய்னா ஆடிய ஆட்டம் இந்த டார்கெட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. ஆனால், சில சீனியர் வீரர்கள் மிடில் ஓவர்களில் பொறுப்பற்று ஆடி ஏமாற்றிவிட்டனர்.' என தோனியே கடுப்பானார். கடைசியில், 'எது எப்படியோ ப்ரீத்தி ஹேப்பி..' என்றும் ஜாலி டோனில் முடித்திருந்தார்.
முதல் பந்திலிருந்தே சிக்சர் அடிக்கும் எண்ணத்தோடு இப்போது அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகின்றனர். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரெய்னா அந்த பாணியில் ஆடிக்காட்டியிருந்தார். சென்னை அணி தோற்றிருந்தாலும் ரெய்னா ஆடிய அந்த இன்னிங்ஸை மறக்கவே முடியாது.