அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் விளாசிய டாப் 3 வீரர்கள்!
Rana Ayyub: `இந்து கடவுள்கள் குறித்த பதிவுகள்'- ஊடகவியலாளர் ராணா அய்யூப் மீது FIR பதிவுசெய்த போலீஸ்!
பிரபல ஊடகவியலாளர் ராணா அய்யூப் மீது வழக்கறிஞர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் மக்ராந்த் அட்கர், யாதவேந்திர சக்சேனா, விக்ரம் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் சமர்பித்த மனுவில், ``2013, 2014, 2015, 2022-ம் ஆண்டுகளில் X பக்கத்தில் ராணா அய்யூப்பின் தொடர்ச்சியான பதிவுகளில், ராமரை இழிவுபடுத்தியும், ராவணனை புகழ்ந்தும், சீதையையும், திரௌபதியையும் அவமரியாதைக்குரிய வகையில் விமர்சித்தும், சுதந்திரப் போராட்ட வீரரான வீர் சாவர்க்கரை பயங்கரவாத ஆதரவாளர் என்றும் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ராணா அய்யூப் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த நவம்பரில் தேசிய சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தும் டெல்லி காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 156(3)-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வழக்கை கடந்த 25-ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ``உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, FIR தேவைப்படும் குற்றங்களை இந்தப் புகார் மனு வெளிப்படுத்துகிறது. சைபர் காவல் நிலைய (தெற்கு) அதிகாரி புகாரின் உள்ளடக்கங்களை FIR ஆக மாற்றி, இந்த விஷயத்தை நியாயமாக விசாரிக்க வேண்டும்." என உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர் ராணா அய்யூப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ராணா அய்யூப், ``10-12 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சில பதிவுகள் குறித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகளிலிருந்து அறிந்தேன்.
போலீஸார் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் தொடர்பு கொள்ளும்போது, நான் அவர்களுக்கு அனைத்து தகவல்களையும் வழங்குவேன். எனது பதிவுகள் எந்த சட்ட விதியையும் மீறவில்லை என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்தப் புகார்... என்னை மிரட்டி மௌனமாக்குவதற்கான மற்றொரு முயற்சி. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் நீதிமன்றங்களால் நிலைநிறுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.